நாட்டியம் என்பது பெருங்கடல் : நான் அள்ளியது ஒரு கோப்பை தண்ணீர்! - பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி சுகன்யா நித்தியானந்தன் 

03 Jan, 2025 | 12:08 PM
image

(மா.உஷாநந்தினி)

டனக் கலைஞர் 'பரதநாட்டிய நன்மணி" ஸ்ரீமதி சுகன்யா நித்தியானந்தனின் வழிகாட்டலில் 'சுந்தரேசர் கலைக்கோயில்" நடனப்பள்ளியில் பரதநாட்டியம் பயிலும் 10 வயது சிறுமியான நிதீஷா நவநீதனின் அரங்கேற்ற நிகழ்வு ஜனவரி 5ஆம் திகதி கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

"நாட்டியம் என்பது பெருங்கடல். அந்தக் கடலிலிருந்து நான் அள்ளியெடுத்து வைத்திருப்பது ஒரு கோப்பை தண்ணீரை மட்டுமே" எனக் கூறும் சுகன்யா நித்தியானந்தன் அரங்கேற்றம், ஆடலின் மகத்துவத்தைப் பற்றி வீரகேசரிக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டதாவது:

நிதீஷாவின் அரங்கேற்றம்... உங்கள் நெறியாள்கையில் நிகழும் முதல் அரங்கேற்றம்.... எப்படி உணர்கிறீர்கள்?

ஆம். எனது நெறியாள்கையில் நிகழும் முதலாவது பரதநாட்டிய அரங்கேற்றம் இது. எனினும், எமக்கு மேடை புதிதல்ல. பல்வேறு விதமான நடன உருப்படிகளை அமைத்து நாட்டிய நிகழ்வுகள் பலவற்றை நடத்தியிருக்கிறோம்.

அதேபோன்று, அரங்கேற்றம் என வரும்போது, நடன உருப்படிகளை ஆடுவதற்கு முறையான பயிற்சி அளித்து, ஆடல் கலைஞரின் ஊடாக ஒரு நடன மார்க்கத்தை முழுமையாக சபையோருக்கும் இறைவனுக்கும் சமர்ப்பிக்கவேண்டிய கடமை எனக்குண்டு.

அந்த வகையில் நிதீஷா முதல் முறையாக ஒரு முழுமையான மார்க்கத்தை அவரது அரங்கேற்ற மேடையில் ஆடுகிறார் என்பது சிறப்பான விடயம்.

அரங்கேற்றத்துக்கான நடன அமைப்பு, இசை, கரு பற்றி கூறுங்கள்...

நாட்டியத்துக்கான உருப்படிகளோடு புதிதாக பதம், கீர்த்தனையை எழுதி இசையமைத்து இணைத்திருக்கிறோம். திருகோணமலை அகத்திய ஸ்வாமிகள் எழுதிக் கொடுக்க, கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி. தாரணி இசை அமைத்திருக்கிறார்.

அருமையான இசை மற்றும் இறைத் துதிப் பாடல்களின் துணையோடு பத்து வயது சிறுமிக்கு ஏற்றாற்போல பதம் முதலான உருப்படிகளுக்கு நடனம் அமைத்திருக்கிறோம்.

உங்கள் குரு?

நான் மூன்றரை வயதில் முறையாக பரதநாட்டியம் பயில ஆரம்பித்தேன். பலரிடம் நான் நாட்டியம் கற்றிருக்கிறேன். முக்கியமாக, பதுளையில் சுதர்ஷினி அனுரா அவர்களிடம் நடனம் பயின்றதை குறிப்பிட விரும்புகிறேன்.

அதன் பின்னர், இந்தியாவுக்குச் சென்று, கலாஷேத்ரா கலைக் கல்லூரியின் ஓய்வு நிலை நாட்டியப் பேராசிரியரான நாட்டியாச்சாரியார் திரு. திருமதி அரவிந்தன் அவர்களிடம் குருகுல முறையில் பரதநாட்டியம் பயின்றேன்.

அதன் தொடர்ச்சியாக, எனது 20 வயதில், தமிழகத்தின் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஒரு பிரதோஷ தினத்தன்று எனது அரங்கேற்றம் நடைபெற்றது.

சில ஆண்டுகளாக நீங்கள் நாட்டியத்தை விட்டு விலகி நிற்க என்ன காரணம்?

திருமணம், மகப்பேறு, குழந்தைகளை பராமரிப்பது என  வாழ்க்கையின் இன்னொரு பகுதியை நகர்த்திச் செல்வதற்காக 18 வருடங்கள் நாட்டியத்திலிருந்து முழுதாக விலகியிருந்தேன்.

சிறிது கால இடைவெளிக்குப் பின், மீண்டும் நான் ஒரு நடனக்கலைஞராக எனது கலைப் பயணத்தை ஆரம்பித்ததற்கு உறுதுணையாக இருந்தவர் நடனக் கலைஞர் திருமதி. பவானி குகப்ரியா அவர்களே.

தொழில் ரீதியாக மட்டுமன்றி, என்னுடைய கலைப்பயணத்திலும் சொந்த வாழ்க்கையிலும் வழிகாட்டியாக, குருவாக விளங்கும் அவரை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அவரை இத்தருணம் நினைவில் கொள்கிறேன்.  

அரங்கேற்றம் நிகழ்த்துவதற்கான வயது தொடர்பில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை சொல்கிறார்கள். உண்மையில் எந்த வயதில் அரங்கேற்றம் செய்யலாம்?

அரங்கேற்றம் நிகழ்த்த சரியான வயதென குறிப்பிட்டு ஒரு வயதைக் கூறிவிட முடியாது.

இன்றைய தினம் அரங்கேற்றம் காண்கிற நிதீஷா 10 வயது சிறுமியாவார். என்னிடம் 5 வயதில் அவர் நாட்டியம் கற்க ஆரம்பித்தார்.

சிலப்பதிகாரத்தில் மாதவி 5 வயதில் நடனம் கற்க ஆரம்பித்ததாகவும் 12 வயதில் அரங்கேற்றம் நிகழ்த்தியதாகவும் குறிப்புகள் உள்ளன.

அரங்கேற்றத்துக்கு வயது முக்கியமல்ல.  நேர்த்தியாக நாட்டியமாடும் ஆற்றலையும் தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலங்கள் ஆடக்கூடிய திறனையும் கொண்ட ஒருவரே, அரங்கேற்றம் நிகழ்த்தத் தகுதியுடையவர் ஆகிறார். ஆகவே, ஆடுபவரின் திறன் மட்டுமே அரங்கேற்றத்துக்கான தகைமை. அந்தத் தகைமையை எந்த வயதில் பெறுகிறோமோ அந்த வயதில் அரங்கேற்றம் செய்யலாம்.

அதேபோன்று நடனம் கற்பதற்கும் வயது ஒரு முட்டுக்கட்டை அல்ல.

'கலாஷேத்ரா" கலைக் கல்லூரியின் ஸ்தாபகர் திருமதி. ருக்மணி தேவி அருண்டேல் அவர்களுமே கூட பரதநாட்டியம் கற்க ஆரம்பித்தது 35 வயதில்தானே!

ஆகவே, நாட்டியம் கற்க வயதெல்லை கிடையாது. ஆர்வமும் திறமையும் இருந்தால் எந்த வயதிலும் நடனம் கற்க முடியும்.

'சுந்தரேசர் கலைக்கோயில்' பற்றி சில வார்த்தைகள்...

சுந்தரேசர் என்ற எனது தந்தையின் நினைவாக 'சுந்தரேசர் கலைக்கோயில்" நடனப்பள்ளியை வத்தளையில் கடந்த ஆறு வருடங்களாக நடத்தி வருகிறேன்.

இந்த பள்ளியில் அறுபதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் நடனம் பயின்று வருகிறார்கள்.

வட இலங்கை சங்கீத சபை நடத்தும் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெறுமளவுக்கு என்னிடம் நாட்டியப் பயிற்சி பெறும் மாணவர்களை நான் தயார்ப்படுத்தி வருகிறேன்.

நான் கற்ற நாட்டியக்கலையை எமது பள்ளியினூடாக அடுத்த தலைமுறைக்கு முறையாக இறை நோக்கத்தோடு கொண்டுசேர்ப்பதே எனது நோக்கம்.

நாட்டியம் பயில்வதும் அரங்கேற்றம் நிகழ்த்துவதும் இறைவனின் அனுக்கிரகம். வாழ்நாள் முழுவதும் சௌபாக்யவதியாக வாழ்வதற்கு அரங்கேற்றம் ஓர் ஆசிர்வாதமாகிறது.

நாட்டியம் ஆடுவதும் நாட்டியத்தை கற்றுக்கொடுப்பதும் அந்த நாட்டிய ஆடலை பார்ப்பதும் புண்ணியம் என்கிறது நாட்டிய சாஸ்திரம்.

நாட்டியம் கற்றுக்கொண்டாலே இறைவனின் பூரண அருளை பெற முடியும். இதைப் போதிப்பதாகவே எமது நடனப்பள்ளியின் இலச்சினையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரங்கேற்றத்தில் அலாரிப்பு, ஜதீஸ்வரம் போன்ற உருப்படிகளை மாத்திரமே ஆடவேண்டும் என்பது நாட்டிய சம்பிரதாயமா?

முந்தைய காலத்தில் அரங்கேற்றத்தில் ஆடப்படவேண்டிய உருப்படிகளான அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனை, பதம், தில்லானா என்பவை முறையாக வகுக்கப்பட்டுள்ளன.

இந்த உருப்படிகளுக்கு மத்தியில் தேவாரங்கள், கிராமிய நடனங்களையும் இணைத்துக்கொள்ளலாம். கடைசியாக திருப்புகழையும் சேர்த்து ஆட முடியும். தவறில்லை.

ஆனால், சாஸ்திரிய நடனத்தில் அலாரிப்பு, ஜதீஸ்வரம்... முதலான உருப்படிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உருப்படியும் தனித்துவமானது. உதாரணமாக, அலாரிப்பு நடனம் உடற்பயிற்சி போன்றது.

எனவே, எதை இணைத்துக்கொண்டாலும், சம்பிரதாய உருப்படிகளையும் அரங்கப் பிரவேசத்தின்போது சேர்த்தே ஆடவேண்டியது கட்டாயமானது.

அரங்கேற்றத்துக்குப் பின்னர் நடனக் கலைஞர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன?

நாட்டியம் என்பது பெருங்கடல். அந்த கடலிலிருந்து நான் அள்ளி வைத்திருப்பது ஒரு கோப்பை தண்ணீரை மட்டுமே. நடனம் கற்பிக்கும் ஆசிரியருக்கே ஒரு கோப்பை தண்ணீர் என்றால், அரங்கேற்றத்தில் நடனமாடுபவர் பரதத்தை முழுதும் அறிந்தவர்கள் என அர்த்தம் கொள்ள முடியாது.

பரத நாட்டியம் ஆத்மார்த்தமான ஒரு கலை. அரங்கேற்றத்தின் ஊடாக சபையோரால் நடனக் கலைஞராக அங்கீகரிக்கப்படும் ஒருவர், அந்தக் கலையில் தொடர்ந்தும் நிலைபெறுவதும் தன்னை ஒரு சிறப்பான நடனக் கலைஞராக வளர்த்துக்கொள்வதும் அவர் கையில் தங்கியுள்ளது.

அரங்கேற்றத்தின் பின்னர், சிலர் கலையை தொடர்ச்சியாக பயில்கிறார்கள், சிலர் நடனத்தை விட்டுவிட்டு வேறு துறையில் செயற்படுகிறார்கள். வேறு துறையில் பயணித்தாலும் கூட, நடனத்தை கைவிடாமல் தான் கற்ற கலையோடும் சேர்ந்து பயணிப்பவர்களையும் பார்க்க முடிகிறது.

சூழ்நிலை எதுவாயினும், கலையின் மீது பக்தியும் மதிப்பும் கொண்டவர்களாக, பரதத்தின் உன்னதத்தையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25
news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38