உத்தரப் பிரதேசத்தில், இந்திய மதிப்பில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்காக அரசியல்வாதியொருவரின் குடும்பத்தையே கொன்று புதைத்த சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர் முனவ்வர் ஹசன் (45). இவர், சாஹிப் கான் (27) என்ற இளைஞடன் கூட்டுச் சேர்ந்து சொத்து விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். பாலியல் பலாத்கார வழக்கொன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஹசன் கடந்த இரண்டு வருடங்களாக திஹார் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஹசனுக்குச் சொந்தமான சுமார் இரண்டு கோடி ரூபாய் சொத்தைத் தன்வசமாக்கிக்கொள்ள நினைத்த சாஹிப், முதலில் ஹசனின் குடும்பத்தாரைக் கொல்ல முடிவெடுத்தார். அதன்படி, ஹசனின் மனைவியையும் இரண்டு மகள்களையும் அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் வழியில் ஒப்பந்தக் கொலைகாரர் ஒருவர் மூலம் மூவரையும் சுட்டுக் கொன்றார். அவர்களை அந்த இடத்திலேயே புதைத்து விட்டு வீடு திரும்பினார் சாஹிப்.

மறு நாள், தமது தாயையும் சகோதரிகளையும் காணவில்லை என்று ஹசனின் புதல்வர்கள் இருவரும் சாஹிப்பிடம் முறையிட்டனர். இவர்களை விட்டால் ஆபத்து என்றெண்ணிய சாஹிப், அவர்களையும் கொன்று புதைத்தார். 

இதன் பின், தன் மீது சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்த சாஹிப், சட்டத்தரணிகளின் உதவியுடன் ஹசனை பிணையில் வெளிவரச் செய்தார். வீடு திரும்பிய ஹசன் அங்கு தமது குடும்பத்தினரைக் காணாமல் பொலிஸாரிடம் முறையிட்டார்.

இந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி ஹசனைக் கொலை செய்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக பொலிஸாருக்குத் தகவல் அளித்தார் சாஹிப்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சாஹிபை விசாரணை செய்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய சாஹிப் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரை உரிய முறையில் விசாரணை செய்தனர்.

இதன்போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட சாஹிப், ஹசனையும் அவரது குடும்பத்தினரையும் எவ்வாறு கொலை செய்தேன் என்று விளக்கியதோடு, அவர்களைப் புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினார்.

தற்போது சாஹிபும், அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு நண்பர்கள் மற்றும் ஒப்பந்தக் கொலைகாரர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.