“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே எழுத்தின் தாற்பரியம்!” - சிரேஷ்ட ஊடகவியலாளர், எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை

Published By: Nanthini

29 Dec, 2024 | 01:27 PM
image

(நேர்கண்டவர் - மா.உஷாநந்தினி)

"அடுத்தது என்ன" என்கிற நகர்வை நாம் நிராகரித்துவிட்டுச் சென்றுவிட முடியாது. 'அன்றோடு', 'அந்த ஒன்றோடு' வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. மேலும் மேலும் சென்றுகொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கைப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கான ஒரு நம்பிக்கைத் துளியை நாம் கொடுப்பதே எழுத்தின் தாற்பரியம்” என மூத்த எழுத்தாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அன்னலட்சுமி இராஜதுரை கூறியபோது, ஒரு நிஜ எழுத்தாளனின் ஆன்மாவை மீட்டும் ஆதார ஸ்ருதி எது, எத்தகையதென்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

1962ஆம் ஆண்டு வீரகேசரி நிறுவனத்தில் இணைந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் பத்திரிகைத்துறையில் சேவையாற்றிய அன்னலட்சுமி இராஜதுரை, இலங்கையின் இலக்கியத்துறை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி, கடந்த நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற அரச இலக்கிய விருது விழாவில் அவருக்கு “சாகித்திய ரத்னா” உயர் அரச விருது வழங்கப்பட்டது.

கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள், பாடல்கள், நேர்காணல்கள், ஆவணக் கட்டுரைகள், வெளிநாட்டுப் பயண அனுபவப் பதிவுகள் என பலவற்றை எழுதி அளித்திருக்கிறார். 

கடந்த காலங்களில் வெளியான “விழிச்சுடர்”, “உள்ளக்கதவுகள்”, “நெருப்பு வெளிச்சம்”, “இரு பார்வைகள்”, “நினைவுப் பெருவெளி”, “அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்”, “ஈழத்து கலை இலக்கிய ஆளுமைகள்” ஆகிய நூல்களும் இன்னும் அவர் எழுதிக் குவித்த படைப்புக்களும் புதினங்களும் எழுத்தின் மீது இவர் கொண்டிருக்கும் தீராக்காதலை உணர்த்துகின்றன.

பத்திரிகைக் கண்ணோட்டத்தை தாண்டி, இவரது தனித்துவமான இலக்கிய - சமூகப் பார்வை வீரகேசரிக்கு அளித்த நேர்காணலிலும் இவ்விதமாக வெளிப்பட்டது... 

"சாகித்திய ரத்னா" உயர் அரச விருது பெற்ற முதல் பெண்மணி நீங்கள்... இந்தச் சாதனையை எப்படி உணர்கிறீர்கள்?

இது நான் எதிர்பார்க்காத, ஆனால், மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

"சாகித்திய ரத்னா" விருது பெற வேண்டுமென்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால், அதைப் பெறும் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதை நினைத்து திருப்தியும் சந்தோஷமும் அடைகிறேன்.

ஒரு நீண்ட எழுத்துப் பயணத்தில் நீங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறபோது நினைவுக்கு வருவது என்ன?

அறுபது வருடங்களுக்கு மேற்பட்டது என்னுடைய எழுத்துப் பயணம். அதிகமாக வீரகேசரியுடன் பயணித்திருக்கிறேன். வீரகேசரியின் மூத்த மகள் நான்தான் என எனக்குள் எண்ணி பெருமைகொள்வேன். இதற்கு முன்னர் யாருக்கும் இந்த நீண்ட பயணம் கிட்டவில்லை. எதிர்பாராத விதமாக எனக்கு கிட்டியிருக்கிறது. நெடுங்காலம் நான் வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றிபோது நிறுவனத்தினர் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் என்னை ஆதரித்தார்கள்.

அதேபோன்று நான் எழுத்துத் தொழில், பத்திரிகைத் தொழில் இரண்டையும் ஆத்மார்த்தமாக, நேர்த்தியாக, மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில், ஆசையோடும் ஆர்வத்தோடும் செய்திருக்கிறேன் என்பதில் மன நிறைவு ஏற்படுகிறது.

இலக்கியத்தை நீங்கள் உள்வாங்கியது எப்போது?

நாம் தெரிந்தோ தெரியாமலோ இலக்கியம் சார்ந்த விடயங்களை சிறு வயதிலிருந்து வாசிக்கிறோம்.

என்னுடைய மாணவப் பருவத்தில் ஒரு நாளைக்கு ஒரு புத்தகமேனும் வாசித்தால்தான் அன்றைக்கு எனக்குத் தூக்கம் வரும் என்பது போல நான் உணர்வேன். “கல்கியோ” “ஆனந்தவிகடனோ” குமுதமோ சிறுகதைப் புத்தகமோ நாவலோ எதுவாயினும், ஒன்றையாவது வாசித்தேயாக வேண்டும். வாசிக்க ஏதும் கிடைக்காவிட்டால், அது பெரிய அந்தரம். வாசித்தால் மட்டுமே அலாதி மகிழ்ச்சி. ஆனால், அதற்கு பூரணமான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கவில்லை.

எளிமையான குடும்பச் சூழலுக்கு மத்தியில் நாங்கள் வாழ்ந்தோம். ஒரு பத்திரிகைப் பிரதி வாங்கக்கூட அன்று எங்களுக்கு வசதியில்லை. ஒருவர் ஒரு ஞாயிறு நாளிதழை வாங்கினால், அதை பத்துப் பேர் மாறி மாறி வாசித்த காலமும் இருந்தது.

என்னுடைய தூரத்து உறவினரான பரமேஸ்வரி என்ற சகோதரி “கலைமகள்”, “கல்கி”, “குமுதம்” ஆகிய பத்திரிகைகளை எனக்காகவே வாங்கி, தான் ஒரு முறை வாசித்துவிட்டு, அவற்றை புத்தம்புதிதாக என்னிடம் கொடுப்பார். அவற்றை நான் முழுமையாக வாசிப்பேன்.

அந்த நாட்களில் மணி ஐயர், கிருபானந்தவாரியார் முதலான சான்றோர்கள் எங்கள் ஊர்ப்பக்கம் வந்து, பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று, அவர்களது சொற்பொழிவுகளை கேட்பது வழக்கம்.

இவ்வாறாக சொற்பொழிவுகள், வாசித்த புத்தகங்கள், பள்ளியில் ஆசிரியர்கள் கற்பித்த இலக்கியத்தின் மூலம் இலக்கியத்தின் செழுமையையும் அதன் நோக்கத்தையும் பலாபலன்களையும் வெளியே சொல்ல முடியாவிட்டாலும் உணர்ந்திருக்கிறோம்.

உண்மை, நேர்மை, அன்பு, நீதி முதலான வாழ்வியல் விழுமியங்களை இலக்கியம் மூலமாக உணர்ந்து உள்வாங்கிக்கொண்டோம்.

ஒரு சிறந்த இலக்கியம் எப்படிப்பட்டது?

“நீ உண்மையாக இரு" என்று வெறுமனே சொல்வதை விட, ஒரு கதையைச் சொல்லி உணர்த்துவது இலக்கியமாகிறது.

அன்பு, நேர்மை, நீதி, உண்மை... போன்ற விழுமியங்களை எடுத்துக்காட்டும் கதைகள் ஏராளமாக தமிழ் இலக்கியத்தில் உள்ளன.

இந்த இலக்கியங்கள் பிறரை நேசிப்பது, பிறர் நன்மைக்கு பாடுபடுவது, எல்லோரையும் சமத்துவமாக நடத்துவது முதலான நற்குணங்களை கற்றுத் தருகின்றன.

நல்லனவற்றை போதிப்பதுதான் சிறந்த இலக்கியம். இலக்கியத்தின் செம்மை என்பதே அதுதான்.

பிற்காலத்தில் எழுத்தாளர்கள் பேசும் சித்தாந்தங்கள், வேதாங்கங்கள், கோட்பாடுகள், கொள்கைகள்... இன்னும் என்னென்னவோ பெயர்களை எல்லாம் சொல்கிறார்கள்... அவை அனைத்தும் இந்த இலக்கிய அடிப்படையிலிருந்து தோன்றியதாகவே நான் எண்ணுவேன். 

வாசிப்பு உங்களுக்கு எதை கற்றுக்கொடுத்திருக்கிறது?

வாசிப்பு பொதுவாக உலகத்தை கற்றுக்கொடுத்தது.

அரசியல், இலக்கியம், பொது விடயம், மருத்துவம், சங்கீதம், நடனம் எதுவாக இருந்தாலும் ஆர்வத்தோடு வாசிப்பேன். வாசிப்பதை இன்று வரை நிறுத்தவில்லை. வாசிப்பு எழுத்தாளனின் உயிர்மூச்சு!

வாசிக்காதவன் எழுத்தாளன் ஆக முடியாது. ரசனை இல்லாதவன் எழுத்தாளன் அல்ல. மனிதர்களை அன்பாக நோக்காதவன் எழுத்தாளனே அல்ல.

பெண்களை பற்றி அதிகமாக எழுதத் தூண்டியது எது?

நான் பெண்ணாக இருப்பது.

பெண்கள் மட்டுமே பெண்களின் பிரச்சினைகளை அதிகமாகப் பார்க்கிறார்கள். பெண்களைப் பற்றி பெண்கள் சிந்திக்கிறார்கள். சக பெண்களோடு இணைந்து வாழ்கிறார்கள். கலந்து பேசி, பிரச்சினைகளை அறிகிறார்கள்.

ஒரு பெண் தன் பிரச்சினைகளை இன்னொரு பெண்ணுக்கே அதிகமாகக் கூறுவாள்.

பெண்களின் பிரச்சினைகள் எப்போதும் வேறுபட்டவை. அவர்களின் பிரச்சினைகளை பற்றி ஆண்கள் எவ்வளவு எழுதினாலும், ஒரு பெண்ணின் பார்வை எப்போதும் வித்தியாசமானது.

ஆகவே, ஒரு பெண் சந்தோஷமாகவும் நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்கிற நோக்கத்திலேயே பெண்கள் எழுதுகிறார்கள். அந்த விதத்திலேயே அவளுடைய படைப்புகளும் அமையும்.

பாலியல் கொடுமைகளை பேசும் "ஒரு தாயாக இருக்கும் கொடுமை", "பசுந்தரையா? பாலைவனமா?" போன்ற உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை நீங்கள் நேரில் சந்தித்தீர்களா?

நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை என்னிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

பாலியல் சீண்டல்கள் மற்றும் ஒழுக்கமீறல்கள் எப்படியோ இடம்பெற்றுவிடுகின்றன.

தந்தை மகளையும் அண்ணன் தங்கையையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் குற்றங்கள் எங்கென்றாலும், எப்படியோ நடந்துகொண்டேதான் இருக்கின்றன எனலாம். மனிதர்கள் பல்வேறு விதமான சூழ்நிலைகளுக்கு ஆளாகி, பல்வேறு கெட்ட நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள்.

தகப்பனோடு ஒரு பெண்பிள்ளை வசிக்க முடியாத நிலை, வெளியே சொல்ல முடியாத துயரங்கள் பலருக்குள்ளும் உண்டு.

உங்களது அதிகமான கதைகளில் முடிவுகள் நேர்மறையாக இருக்கிறதே... எப்படி?

எழுத்துக்கள் எப்போதும் தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கு அடியெடுத்துக் கொடுப்பதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

இன்னொரு விஷயம்... "அடுத்தது என்ன" என்கிற நகர்வை நாம் நிராகரித்துவிட்டுச் சென்றுவிட முடியாது. 'அன்றோடு', 'அந்த ஒன்றோடு' வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. மேலும் மேலும் சென்றுகொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கைப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கான ஒரு நம்பிக்கைத் துளியை நாம் கொடுப்பதே எழுத்தின் தாற்பரியம்.

எழுத்தாளர்கள் தாம் எழுதியபடியே வாழ்ந்தாக வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

"பொய் பேசாதே" என்று நீங்கள் எழுதிவிட்டு, நீங்களே பொய் பேசுவது என்ன நியாயம்? என்ன அதிகாரம்? என்ன தகைமை?

எழுதுபவனுக்கும் அதை பின்பற்ற வேண்டும் என்கிற கடமை உண்டு.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் வாழ்ந்தார். அவர் ஒரு ஞானி, சித்தர். எப்பேற்பட்ட ஞானம், சிந்தனை, நோக்கம் கொண்டு அவர் வாழ்ந்திருந்தால், “திருக்குறள்" என்றொரு மேன்மையான நூலை அளித்திருப்பார்!

இன்னும் இரண்டாயிரம் வருடகாலத்துக்கு மேலும் இந்த நூல் வாழும்! அவர் காட்டிய மனித விழுமியங்கள் வாழும் என்பது உண்மைதானே!

ஆகவே, எழுதுபவன் தன் எழுத்துக்கு தகுந்தாற்போல் வாழவேண்டும் என்பதே முறை.

மூத்த எழுத்தாளர்கள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தகுந்தாற்போல் எழுதுவதில் ஏதும் சிரமம் இருக்கிறதா?

அடுத்தடுத்த தலைமுறைகளோடு இணைந்து வாழ்ந்துகொண்டு, அந்த மக்களை கவனித்துக்கொண்டு, அவர்களுடனே புழங்குபவர்கள், தங்கள் சந்ததியினருக்காக எழுதுவதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது?

எங்கோ வாசித்ததை எழுதுவதில்லையே... நேரடியாக பார்த்து உணர்ந்த விடயத்தைத் தானே எழுதப்போகிறோம்.

“எல்லோருக்கும் ஏற்றாற்போல்" என்பதன்றி, எது நீதியோ எது நியாயமோ... அதை அடுத்த தலைமுறையினருக்கும் நாம் சொல்ல வேண்டும். நல்லதை எடுத்துரைக்க வேண்டும். மக்களின் சிந்தனையைத் தூண்ட வேண்டும். அதுதான் எழுத்தாளனின் கடமை.

வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே எழுதிவிட்டால் போதாது. வாசிக்கிறபோது சந்தோஷத்தை மட்டுமே கொடுப்பதாக அல்லாமல், நற்கருத்தையும் ஒரு நல்ல மனிதன் உருவாகுவதற்கான சிந்தனைகளையும் வழங்குவதாக இலக்கியம் விளங்க வேண்டும்.

மொழிபெயர்ப்புக் கதைகள் பலவற்றை எழுதியிருக்கிறீர்கள்.... மொழிபெயர்ப்பின்போது நாம் எவற்றை கவனிக்கவேண்டும்?

மொழிபெயர்ப்பது சொந்தக் கதை எழுதுவதை விட கடினமானது. சுயமாக ஒரு கதையை உங்கள் எண்ணத்தில் தோன்றியவாறு எழுதலாம். எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், மொழிபெயர்ப்பு செய்யும்போது பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதென்றால், ஆங்கில இலக்கியம் எழுதப்பட்டபோது எழுந்த உணர்வு தமிழுக்கு வரவேண்டும். ஆங்கில சொற்களுக்கு சரியான, பொருத்தமான தமிழ்ச் சொற்களை பிரயோகிக்க வேண்டும்.

அந்தந்த மொழிக்கான கலாசார பண்பாட்டை உணரவேண்டும்.

ஆங்கில  மொழி  எழுத்தாளர் எவ்விதம் உணர்ந்து எழுதினாரோ அந்த உணர்வை, நல்ல தமிழோட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

அவ்விதமாக எழுதப்படுவதே சிறந்த மொழிபெயர்ப்பு இலக்கியமாகும்.

மொழிபெயர்ப்பு என்பது “கூடு விட்டு கூடு பாயும் கலை" என்று சொல்கிறார்கள்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு என்றவாறு ஒரு கூட்டிலிருந்து இன்னொரு கூட்டுக்கு பாயவேண்டும். அதை விட முக்கியமாக, இரு மொழிகள் சார்ந்த தெளிந்த அறிவை ஒரு மொழிபெயர்ப்பாளன் கொண்டிருக்க வேண்டும்.

இவ்விடயத்தில் நான் ஏதோ ஒருசில முயற்சிகளை மேற்கொண்டேன் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

பார்க்கிற எதையும் எழுத்தாளனால் எழுதிவிட முடியுமா?

ஒரு எழுத்தாளன் எத்தனையோ விடயங்களைப் பார்க்கிறான். ஆனால், தான் எடுத்துக்கொண்ட விடயத்தில் எது தன் மனதை பாதித்ததோ, சமூகத்துக்கு எது தேவையோ அதையே எழுத்தில் கொண்டுவருவான்.

எல்லாம் எழுதுவது சாத்தியமல்ல. எது பொருத்தமோ, எது மனதை பாதித்ததோ, எது சொல்லத் தகுந்ததோ, எதை சொல்ல வேண்டுமோ, எதை படிப்பினையாக எடுத்துக்கொள்ள முடியுமோ அந்த விடயம், எழுத்தாளனின் மனதில் தோன்றும்.

பார்க்கிற அனைத்தும் எழுதுவதற்கு உகந்ததல்ல. அதேவேளை, எல்லாவற்றையும் பார்க்க வேண்டியவனாக எழுத்தாளன் விளங்குகிறான். சமுதாயத்தையும் உலகத்தையும் நிறையப் பார்ப்பவனே நல்ல எழுத்தாளன், கலைஞன்!

எழுத்துச் சுதந்திரம், எழுத்துக்கான வரம்பை கருத்திற்கொண்டு எழுத்தாளர்கள் சில விடயங்களை எழுதத் தயங்குவதாக நீங்கள் கருதுகிறீர்களா?

எழுத்துச் சுதந்திரம் என்கிறபோது அது அரசியலோடும் சம்பந்தப்படுகிறது. சில அரசியல் விடயங்கள் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும். எனினும், அந்த கட்டுப்பாட்டையும் மீறி சமயோசிதமாகவும் துணிவாகவும் எழுதுபவர்கள் எழுதிக்கொண்டேதான் இருக்கின்றனர்.

இதுவரை எவ்வளவு பெரிய சர்வாதிகார ஆட்சியாயினும், அவ்வாட்சியின் கீழ் நடப்பவற்றை பார்த்துக்கொண்டு இதுவரை உலகில் எழுத்தாளர்கள் பேசாமல் இருந்துவிடவும் இல்லை.

அதை எழுத்தில் எப்படி சொல்லவேண்டும், எவ்விதமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு உரிய முறைகளோடும் சூட்சுமங்களோடும் மர்மமாகவும் நேரடியாகவும் நயமாகவும் எவ்விதமேனும் எழுதியிருக்கிறார்கள், எழுதுகிறார்கள்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்திருந்தால் உலகத்தில் இலக்கியமே படைக்கப்பட்டிருக்காது.

கொச்சையான, தகாத சொற்களை சில எழுத்தாளர்கள் பிரயோகிக்கிறார்களே.. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முன்னர் அப்படியான வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை. 1950, 56களுக்கு பிறகு ‘யதார்த்தம்’ என்றொரு கோஷம் வந்தபோது மக்களின் இயல்பான வார்த்தைகளை பிரயோகிக்கும் வழக்கு வந்தது. அதை, 'இழிசனர் வழக்கு’ என்று பண்டிதர்கள் கண்டித்தார்கள்.

அதேவேளை, மக்களின் இயல்பான பேச்சுவழக்கை எழுத்தில் கொண்டுவந்தாலென்ன என்று முற்போக்கு எழுத்தாளர்கள் சிந்தித்தனர்.

அவ்விதமாகவே சில சொற்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன. அதைத் தொடர்ந்து, தற்போது பலரும் யதார்த்தமாக எழுதி வருவதையும் பார்க்க முடிகிறது. இது சகஜமான ஒரு விடயம். அதற்காக, எல்லோரும் மிகக் கடுமையான பதங்களை பிரயோகிக்கிறார்கள் என்றும் சொல்லிவிட இயலாது.

நம் மண்ணின் வாசகர்களுக்கு தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் பெயர்கள் தெரிந்தளவுக்கு இந்நாட்டு எழுத்தாளர்களின் பெயர்கள் தெரியவில்லையே, ஏன்?

இலங்கையை விட பன்மடங்கு பெரியதான தமிழ்நாட்டில் பரந்துபட்ட வாசகர் வட்டத்தின் ஆதரவு இருக்கிறது. அதேபோன்று, தமிழ்நாட்டு பத்திரிகைகள், நூல்களின் செல்வாக்கு இலங்கையிலும் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் வாசகர்களிடத்தில் பெருகியிருந்ததை பார்க்க முடிந்தது.

அன்றிருந்த நிலை இன்றில்லை. வாசிப்பு மிகவும் குறைந்துவிட்டது. என்றாலும், தமிழ்நாட்டு எழுத்துக்களின் செல்வாக்கு இந்நாட்டில் அதிகம் என்பதால் நம் நாட்டு எழுத்தாளர்கள் பெரிதும் அறியப்படவில்லை என்றும் கூற முடியாது.

இவ்விடத்தில் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.

1970களில் வீரகேசரி ஸ்தாபனம் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும் ஒரு பணியை ஆரம்பித்தது. சுமார் பத்து வருடங்களுக்கு மேல் நீடித்த அந்த பணியில் 60க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் வெளிவந்தன. ஒவ்வொரு நூலும் 4000 பிரதிகள் அளவில் விற்பனையானதாக கூறப்பட்டது. அவ்வேளை இலங்கை எழுத்தாளர்களின் பெயர்கள் மிகவும் பேசப்பட்ட ஒன்றாக இருந்ததும் இத்தருணத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

தற்காலத்திலும் பல நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நம் எழுத்தாளர்களைப் பற்றி பலரும் பேசுகின்ற நிலை இப்போதும் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

இருப்பினும், இன்றைய சூழலில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மத்தியில் நீண்ட இடைவெளி இருக்கிறதே...

இக்காலத்தில் அப்படியும் சொல்லிவிட முடியாது. எழுத்தாளர்கள் இன்னும் அதிகமாக வாசகர்களோடு இணைந்து பயணிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. இதன் மூலமாகவும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான இடைவெளியை குறைக்க முடியும்.

உங்கள் ஆதர்சமான எழுத்தாளர்?

ஜெயகாந்தனை குறிப்பிட விரும்புகிறேன்.

எனது சிந்தனைக்கும் கற்பனைக்கும் ஒரு புதிய வழியை, ஒரு புதிய காட்சியை காட்டிய ஜெயகாந்தனின் எழுத்துக்களை அந்தக் காலத்தில் நான் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன். அவருடைய எழுத்தில் அப்படியொரு ஈர்ப்பு!

அதையும் தாண்டி, நம்பிக்கை அளிக்கும் அருமையான கதைகளை எழுதி வந்தவரை எங்களது நட்பு வட்டத்தினரும் நிறையவே வாசித்தார்கள். அப்போது நாங்கள் அவரது படைப்புகளைப் பற்றி கூடுதலாக விமர்சித்தும் மகிழ்ந்திருக்கிறோம்.

இது கால வரையிலான எழுத்துப் பணி நிறைவைத் தருகிறதா?

என்னால் முடிந்தவற்றைச் செய்து பார்த்திருக்கிறேன். இலக்கியத்தை நேசித்து, பல விடயங்களை சுயமாக தேடி, கண்டு, எழுத்துத்துறையிலும் பத்திரிகைத்துறையிலும் அவற்றை உபயோகித்திருக்கிறேன் என எண்ணுகிறேன்.

இதையும் பார்க்க... 

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது பெற்ற முதல் பெண்மணி!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25
news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38