அரச நாடக விருது விழா - 2024 : “நாடகக்கீர்த்தி” உயர் விருது பெற்ற தமிழர்!  

28 Dec, 2024 | 12:47 PM
image

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம் மற்றும் அரச நாடக ஆலோசனைக் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில்   51ஆவது அரச நாடக விழா - 2024 கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கத்தில் கடந்த திங்கட்கிழமை (23) நடைபெற்றது.  

இவ்விருது விழாவில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் யசிந்தா குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இலங்கையின் நாடகத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கிய நாடகத்துறை சார்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்வில் விருது, சான்றிதழ், நிதிப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

பின்னணி வடிவமைப்பு, மேடை நிர்வாகம், நாடக தனித்துவ அம்சங்கள், நாடகப் படைப்பு, நாடக அரங்கம், திரையரங்கு அலங்காரம், இசை அமைப்பு, நாடகக் கதையாக்கம், நடிப்பு என்கிற அடிப்படையில் திறமை வாய்ந்த ஆண், பெண் கலைஞர்களுக்கு  விருதுகள் வழங்கப்பட்டன. 

நிகழ்வின் முக்கிய அம்சமாக, “நாடகக்கீர்த்தி” உயர் அரச விருதினை நாடகக் கலைஞர் யோ.ஜோன்சன் ராஜ்குமாருக்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி வழங்கிவைத்தார். 

அறிமுகம் 

யோ. ஜோன்சன் ராஜ்குமார் யாழ்ப்பாணம், சுண்டுக்குளியில் வசித்துவருகிறார். 

இவர் 1969ஆம் ஆண்டு ஊர்காவற்றுறையில் உள்ள நாட்டுக் கூத்துக்கு புகழ்பெற்ற நாரந்தனை கிராமத்தில் பிறந்தார். 

இவரது பூட்டனார் நாரந்தனையின் புகழ்பூத்த அண்ணாவியார் சவீனை சந்தியாப்பிள்ளை. அதனால் சிறு வயதிலிருந்தே கூத்து, நாடகத்துறைகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 

ஜோன்சன் ராஜ்குமார் நாரந்தனை அ.த.க. பாடசாலை, ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக இணைந்து கலைமானிப் பட்டத்தினையும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கற்பித்தலில் டிப்ளோமா பட்டத்தினையும் யாழ். பல்கலைக்கழகத்தில் முதுகல்விமாணிப் பட்டத்தினையும் பெற்றார். 

கலைமாணிக் கற்கையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினை கலைமாணிக் கற்கையில் ஒரு பாடமாக எடுத்து கற்றார். 

பணி 

வட இலங்கை சங்கீத சபையில் நாடகமும் அரங்கியலும் பாடத்துறையில் ஆசிரியர் தர சித்தி பெற்றார். 

 யாழ்ப்பாணம் புனித றோக் (றோ.க) வித்தியாலயம், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றியதுடன் தற்போது யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றுகிறார். 

கலைப்பயணம் - நாடகத்துறை  

நாடக அரங்கத்துறையில் 35 ஆண்டுகளாக இயங்கி வரும் இவர், 1990இல் திருமறைக் கலாமன்றத்தில் இணைந்து, அம்மன்றம் நடத்திய நாடகமும் அரங்கியலுக்குமான ஒரு வருட நாடகப்பயிலக சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்ததுடன், மன்றத்தின் பல வகை நாடகங்களிலும் நடித்துள்ளார். 

பின்னர், பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியும் வருகிறார். இவரது குரு அமரர் பிரான்சீஸ் ஜெனம் ஆவார். 

திருமறைக் கலாமன்றத்தில் கடந்த 33 வருடங்களாக கலைப்பணி ஆற்றி வருவதுடன் மன்றத்தின் பிரதி இயக்குநராக கடந்த 25 வருடங்களாக மன்றத்தின் இயங்கியலுக்கு முதுகெலும்பாக செயலாற்றி வருகிறார். 

இவரது வழிநடத்தலுடன் அரங்க ஆற்றுகைகள் மட்டுமன்றி பல்வேறு கலை இலக்கிய செயற்பாடுகளும் அங்கு நடைபெறுகின்றன. 

அத்துடன் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸ், ஜேர்மனி, லண்டன், சுவிற்ஸர்லாந்து, இத்தாலி, நோர்வே, ஹொலன்ட், அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளுக்கும் கலைப்பயணம் சென்று கலைப் படைப்புகளை ஆற்றுகை செய்தும் நாடகப் பட்டறைகளை நடத்தியும் வந்துள்ளார். 

நெறிப்படுத்திய நாடகங்கள் 

இவர் இதுவரை 50க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியுள்ளார். 30க்கு மேற்பட்ட பல்வகைமை நாடகங்களிலும் நடித்துள்ளார். 1991இலிருந்து திருப்பாடுகளின் நாடகங்களில் நடித்து வந்துள்ளார். 

1997இலிருந்து கடந்த 15 வருடங்களுக்கு மேலாக “திருப்பாடுகளின் காட்சி” என அழைக்கப்படுகின்ற பிரமாண்டமான நாடக ஆற்றுகைகளான இயேசுவின் பாடுகளின் நாடகங்களை (passion play) நெறிப்படுத்தி வந்துள்ளார். 

“குருதி கழுவிய குவலயம்”, “கல்வாரி யாகம்”, “வெள்ளியில் ஞாயிறு” ஆகிய திருப்பாடுகளின் நாடகங்களையும் புதிதாக எழுதியுள்ளார். 

இவர் எழுதிய “ஜீவபிரயத்தனம்”, “ஸ்பாட்டக்கஸ்”, “வாழ்வு தந்த வாஸ்”, “அற்றைத்திங்கள்” போன்ற பல நாடகங்கள் இலங்கையில்  மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மேடையேற்றப்பட்டன. 

நவீன நாடகம், இலக்கிய நாடகம், நாட்டுக்கூத்து, சிறுவர் நாடகம்... என பல வகை நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக, 15க்கும் மேற்பட்ட கூத்துக்களை எழுதி நெறிப்படுத்தியதுடன் 2014ஆம் ஆண்டு மன்னார் ஆயர் இராயப்பு யோசவ் ஆண்டகையினால் சுண்டுக்குளி பங்கில் அண்ணாவியார் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

பல்வேறு பிரதேசத்தின் கூத்து மரபுகளையும் பரீட்சார்த்தமாக இணைத்து கூத்துருவ நாடகம் என்னும் புதிய வடிவத்தினை உருவாக்கியதோடு அம்மரபில் “கொல் ஈனுங் கொற்றம்” “அற்றைத்திங்கள்”, “செம்பாத்தாள்” போன்ற நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியுள்ளார். அவை தேசிய ரீதியாக மட்டுமன்றி கனடாவிலும் மேடையேற்றப்பட்டன. 

பரிசுகளும் விருதுகளும் 

இவர் ஆசிரியராக கல்வி கற்பித்த பாடசாலைகளில் வருடந்தோறும் பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி வந்துள்ளார். அவற்றுள் பல நாடகங்கள் தேசிய, மாகாண ரீதியாக முதல் பரிசில்களை பெற்றுள்ளன. 

அரச ஊழியர்களுக்கான தேசிய நாடகப் போட்டியில் இவரது “மணவிலங்குகள்” நாடகம் 7 தேசிய விருதுகளை பெற்றுள்ளன. 

டவர் நாடகப் போட்டியில் இவரது “நிற்க கற்க நாடகம்” முதலாம் இடத்தினை பெற்றது. 

அரங்க ஆய்வாளனாக நாட்டுக்கூத்து பற்றிய பல்வேறு ஆய்வுகளிலும் பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவுடன் இணைந்து யாழ்ப்பாண தென்மோடி கூத்து மரபிலுள்ள 158 பாடல் மெட்டுக்களை ஒலிப்பதிவு செய்து ஆவணமாக்கியுள்ளார். 

40க்கு மேற்பட்ட நாடக அரங்கு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

இவர் எழுதிய “கம்பன் மகன்” (தென்மோடிக்கூத்து), “கொல் ஈனுங் கொற்றம்” (கூத்துருவ நாடகம்), “அமைதிப்பூங்கா” (8 சிறுவர் நாடகங்கள்), “அற்றைத்திங்கள்” (கூத்துருவ நாடகம்), “ஜீவபிரயத்தனம்” (7 நாடகங்களின் தொகுதி), “கூடித்துயர் வெல்” (3 சிறுவர் நாடகங்கள்) போன்ற நாடகங்கள் நூல்களாக வெளிவந்தன. 

இவர் “கொல் ஈனுங் கொற்றம்” சிறந்த நாடக நூலுக்கான மாகாண இலக்கிய நூற்பரிசினையும் “அமைதிப் பூங்கா” சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்திய நூற்பரிசினையும் மாகாண இலக்கிய நூற்பரிசினையும் “அற்றைத்திங்கள்” சிறந்த நாடக இலக்கியத்துக்கான சாகித்திய நூற்பரிசினையும் மாகாண இலக்கிய நூற்பரிசினையும் “ஜீவபிரயத்தனம்” சிறந்த நாடக இலக்கியத்துக்கான மாகாண இலக்கிய நூற்பரிசினையும் பெற்றுள்ளார். 

சர்வதேச கலைப்பயணம், ஈழத் தமிழ் அரங்கில் பிரான்சிஸ் ஜெனம், கூத்தருவி, நொண்டி நாடகம் ஆகிய நூல்களின் தொகுப்பாளராக இருந்து பதிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 

திருமறைக் கலாமன்றத்தினால் வெளியிடப்பட்ட நாடகமும் அரங்கியலுக்குமான ஆற்றுகை சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இருந்து 18 இதழ்களை வெளிக்கொணர்ந்துள்ளார். 

நாடகங்கள் மட்டுமன்றி சிறுகதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பலவற்றையும் எழுதியுள்ளார். 

இவரது கலைச் சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வழங்கப் பெற்றுள்ளன. 

2018இல் இலங்கை கிறிஸ்தவ விவகார அமைச்சு “தர்மபிரபாஸ்வர” என்ற விருதினை வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25