வடகொரியா உலக நாடுகளில் எழுந்துள்ள ஏவுகணை பரிசோதனை எதிர்ப்பு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று புதிய ரக ஏவுகணை ஒன்றை சோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.

மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பானிய போர்கப்பல் கொரியா தீபகற்ப கடற்பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு, வலய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தின. இருப்பினும் வடகொரியா அதற்கு அஞ்சாமல் நெடுந்தூர ஏவுகணையை செலுத்தி பரிசோதித்தலில் வெற்றி அடைந்துள்ளதாக கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில், வடகொரியா புகுக்கஸோங் -2 எனும் பெயருடைய குறுந்தூரம் செல்லும் ஏவுகணையை, நேற்று ஏவி பரிசோதனைச் செய்ததாக தென்கொரியா குற்றச்சாற்றோன்றை முன்வைத்துள்ளது.  

வடகொரியாவின் தெற்கு பியாங்கன் மாகாணத்திலுள்ள புக்சங் பகுதியிலிருந்து ஏவப்பட்டகுறித்த ஏவுகணை, சுமார் 500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று, தென்கொரியாவின் கிழக்கு பகுதி கடலில் விழுந்துள்ளதாக தென் கொரிய இராணுவ செய்திகள் தெரிவித்துள்ளன. 

அத்தோடு வடகொரியா நடத்திய குறைந்தளவிலான தூரம் செல்லும் ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றதாகவும், அதற்கு ஜனாதிபதி கிம் ஜோங் உன் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.