இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இப் பயிற்சிப் போட்டியின் முதல் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் 79 ஓட்டங்களையும் சாமர கப்புகெதர 71 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஸ்கொட்லாந்து அணி சார்பாக பந்து வீச்சில் எவன்ஸ் மற்றும் விதின்காம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

அதன் பின்னர் 288 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பை உடைப்பதற்கு இலங்கை பந்து வீச்சாளர் பெரிதும் சிரமப்பட்டனர்.

இறுதியில் ஸ்கொட்லாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 291 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தது வரலாற்று வெற்றியினை பதிவுசெய்தது.

துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கைல் கோட்சர் அதிரடியாக ஆடி 118 ஓட்டங்களை விளாசினார். மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மெத்திவ் குரோஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களைப் பெற்று இறுதி வரை களத்தில் இருந்தார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இலங்கை அணி சார்பில் எந்த பந்து வீச்சாளரும் பிரகாசிக்கவில்லை எனலாம். லக்மால் தவிர்ந்த அனைவரும் ஓட்டங்களை அதிகமாகவே கொடுத்தனர். இந்த வெற்றியின்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்கொட்லாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.