வவுனியா செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆண்டு ஒன்று முதல் சாதாரணதரம் வரையுள்ள இப்பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காலை 8 மணிக்கு பாடசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும் சாதாரணதரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் ஆசிரியர் வளம் இன்றி கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்ததுடன் உலகம் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் தொழில்நுட்பம் தொடர்பான எவ்வித கல்வியும் இன்றி தாம் உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்ததுடன் தமக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.


இதேவேளை தமது பிள்ளைகளின் கல்வி மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாக பெற்றோர் கருத்து தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கலந்துரையாடியிருந்தார்.


இந் நிலையில் தமக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றைய போராட்டத்தினை நிறுத்திக்கொண்டதுடன் நாளை மீண்டும் தமது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.