கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் ஆயுட்காலச் சிறைத்தண்டனையும் அதற்குமேலதிகமாக 50 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அனுபவித்து வரும் சிறைக்கைதி ஒருவர் ஜனாதிபதிக்கு தனது ஆயுட்கால சிறைத்தண்டனையை சாதாரண சிறைத்தண்டனையாக குறைப்பதற்கு கருணை மனுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், கடந்த 1993ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அறியாத ஒரு குற்றத்திற்காக கடந்த 24 வருடங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளேன்.

இந்நிலையில் தயவு கூர்ந்து எனது இந்தக் கருணை வேண்டுகோளினை பரிசீலித்து நானுமொரு சாதாரண பிரஜையாக இந்நாட்டில் வாழ சந்தர்ப்பமளிக்குமாறு தயவுடன் வேண்டுகின்றேன்.

கடந்த 1993.09.27 அன்று வந்தாறு மூலை மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனையும் அதற்கு மேலதிகமாக 50 வருட கடூழியசிறை தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

கருணை உள்ளம் கொண்ட ஜனாதிபதி எனது 43 வயதில் 24 வருட சிறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதை கருத்திற் கொண்டு நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகிய தங்களுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கமைவாக எனது ஆயுட்கால சிறைத்தண்டனையினை சாதாரண சிறைத்தண்டனையாக குறைத்து தருமாறும் எனது வாழ்க்கையின் சத்தான இளமைக் காலம் கடந்து விட்ட நிலையில் மிகுதி வாழ்வுக்கேனும் ஒளியேற்ற உதவிடுமாறு மேலும் தனது கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.