கே. ஏ. டயனி அமலிகா
சுற்றாடல் உத்தியோகத்தர்
மத்திய சுற்றாடல் அதிகாரசபை
நிகழ்கால உலகில் அதிகமாக பேசப்பட்டு வருகின்ற அத்துடன் பற்றியெரிகின்ற பிரச்சினையாக அமைந்துவிட்ட சிக்கலென காலநிலை மாற்றங்களை எடுத்துக்காட்ட இயலும். காலநிலை மாற்றங்கள் என்பது உலகளாவிய அல்லது பிராந்திய காலநிலைப் பாங்குகளின் நீண்டகால வேறுபாடுகள், குறிப்பாக புவியின் சராசரி வெப்பநிலை உயர்வடைதலாக அழைக்கப்படுகின்றது.
அத்துடன் அடிப்படையில் இயற்கைச் செயற்பாங்குகள் மற்றும் மானிட செயற்பாடுகள் காரணமாக புவிக்காலநிலைத் தொகுதியில் தோன்றுகின்ற கணிசமானதும் நீண்டகாலம் நிலவக்கூடியதுமான காலநிலை மாற்றங்களாக எடுத்துக்காட்டப்பட இயலும்.
காலநிலை மாற்றங்கள் என்பது ஓர் அண்மைக்கால நிகழ்வாக அமையாவிடினும் எரிமலை செயற்பாடுகள், புவியச்சின் மாற்றங்கள் மற்றும் சூரியக் கதிரியக்கம் போன்ற பல்வேறு காரணிகளால் புவியின் காலநிலை மில்லியன் கணக்கான வருடங்களாக இயற்கையாகவே மாற்றமடைந்துள்ளது.
எவ்வாறாயினும் மானிட செயற்பாடுகள் காரணமாக தோன்றுகின்ற வாயு உமிழ்வு அதிகரித்தமை நாம் உணர்கின்ற, அனுபவித்து வருகின்ற வேகத்தை துரிதமாக அதிகரித்துள்ளது. இது “மானிட காலநிலை மாற்றங்கள்” என அழைக்கப்படுகின்றது.
கடந்த நூற்றாண்டு பூராவிலும் புவி வெப்பநிலை அதிகரித்தமை, துருவப் பிரதேச பனிப்பாறைகள் உருகுதல், காலநிலைப் பாங்குகள் மாற்றமடைதல் மற்றும் விளிம்புநிலை காலநிலைசார்ந்த நிகழ்வுகள் அதிகரித்தமையை உள்ளிட்ட முன்னர் இருந்திராத மாற்றங்களை புவி எதிர்நோக்கி வருகின்றது.
பெரும்பாலும் உயிர்ச்சுவட்டு எரிபொருள் தகனம், காடழிப்பு, கைத்தொழில் செயற்பாடுகளை உள்ளிட்ட மானிட செயற்பாடுகள் அண்மைக்கால காலநிலை மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணமாக அமைவது காபன் டயொக்சயிட் (CO2), மீதென் (CH4) மற்றும் (N2O) போன்ற பச்சை வீட்டு வாயுக்கள் (GHGs) வளிமண்டத்தில் சேர்வதாகும்.
இந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் வெப்பத்தை தேக்கிவைத்து புவி வெப்பநிலை உயர்வடைவதில் பங்களிப்புச் செய்கின்ற பச்சை இல்ல காப்பகமென அழைக்கப்படுகின்ற நிகழ்வுக்கு வழிசமைக்கின்றது.
காலநிலை மாற்றங்களை விளங்கிக்கொள்வது தீர்மானகரமானதாக அமைவது அதன் சுற்றாடல்சார் தாக்கங்கள் காரணமாக மாத்திரமன்றி சூழற்றொகுதிகள், பொருளாதாரம் மற்றும் மானிட சமூகம்மீது அது ஏற்படுத்துகின்ற மிகையான தாக்கம் காரணமாகும். கடல் மட்டம் உயர்வடைவதால் கரையோர சமுதாயங்கள் அச்சுறுத்தலுக்கு இலக்காதல், சமுத்திர அமிலமயமாதல் மற்றும் மழைவீழ்ச்சிப்பாங்குகள் மாற்றமடைவதால் விவசாயத்திற்கு தடைகள் தோன்றுதல், உயிர்ப்பன்வகைமையை இழத்தல் மூலமாக இயற்கைச் சூழற்றொகுதிகளின் சமநிலைக்கு அச்சுறுத்தல் தோன்றுதல் என்பவை அத்தகைய தாக்கங்களில் சிலவாகும்.
காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் வெப்பநிலை உயர்வடைதலும் புவி வெப்பநிலையும்
காலநிலைமாற்றங்களில் மிகவும் முனைப்பாக புலப்படுகின்ற பாதவிளைவுகளில் ஒன்றாக அமைவது புவி வெப்பநிலை உயர்வடைவதாகும். ஏற்கெனவே குறிப்பிட்டதன்படி வெப்பநிலை உயர்வடைவதில் பிரதானமான பங்களிப்பினைச் செய்வது பச்சை வீட்டு வாயுக்களாகும். உயிர்ச்சுவட்டு எரிபொருள் தகனம், கைத்தொழில் செயற்பாடுகள் மற்றும் வாகனங்களால் இடம்பெறுகின்ற உமிழ்வு என்பவை காபன் உமிழ்வின் பிரதான தோற்றுவாய்களாகும்.
கைத்தொழிலுக்கு முற்பட்ட யுகத்தில் இருந்து புவியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1.20C ஆல் உயர்வடைந்துள்ளதோடு தற்போது நிலவுகின்ற உமிழ்விற்கு அமைவாக 21 வது நூற்றாண்டின் இறுதியளவில் இந்த வெப்பநிலை உயர்வடைதல் 1.5 0C இல் இருந்து 40C வரை உயர்வடையக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
2015 இல் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்களுக்கான மாநாட்டில் (COP 21) நிறைவேற்றப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் பிரகாரம் 2030 அளவில் புவி வெப்பநிலையின் அதிகரிப்பு 1.50 C வரை மட்டுப்படுத்தப்படுவது வலியுறுத்தப்படுகின்றது.
சவால்கள்
வெப்ப அலைகள்: மிகையான வளி வெப்பநிலையானது வெப்பம்சார்ந்த நோய்களும் காட்டுத்தீயும் விவசாயத்திற்கும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் சூழற்றொகுதிகளுக்கும் சேதமேற்படுத்த காரணமாக அமையக்கூடும். அதைப்போலவே கடல் வளிமண்டல வெப்பநிலையை உறிஞ்சியெடுப்பதால் கடலில் வெப்ப அலைகளை உருவாக்குவதற்கான இயலுமை நிலவுகின்றது. அதன்மூலமாக பவளப்பாறை வெளிறச்செய்தல் போன்ற கடல் சூழற்றொகுதிகள் மீதும் தடைகளை எற்படுத்துகின்றது.
துருவப் பிரதேசங்கள் : வெப்பநிலை உயர்வடைதலிலான தாக்கம் துருவப் பிரதேசங்களில் முனைப்பாக புலப்படுவதோடு அங்கு இடம்பெறுகின்ற பனிப் பாறைகள் உருகுதல் கடல் மட்டம் உயர்வடைய பங்களிப்புச் செய்கின்றது.
சுகாதார தாக்கங்கள்: வெப்பநிலை உயர்வடைதலானது சுவாச நோய்கள் , இதய நோய்கள் மற்றும் காவிகள் ஊடாக பரவுகின்ற நோய்களை (உதா: மலேரியா, டெங்கு ) துரிதப்படுத்துகின்றது.
விளிம்புநிலை காலநிலை நிகழ்வுகள்
புவி வெப்பநிலை உயர்வடைகையில் புயல்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் காட்டுத் தீ போன்ற விளிம்புநிலை காலநிலை சம்பவங்கள் தோன்றுவதற்கான போக்கும் தீவிரத்தன்மையும் மிகவும் உயர்வடைந்து வருகின்றது. இந்த சம்பவங்கள் சமுதாயங்களுக்கு, குறிப்பாக அபாயநேர்வு பிராந்தியங்களில் வசிக்கின்ற சமுதாயங்களுக்கு அழிவுமிக்க பிரதிவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.
சவால்கள்:
மிகையான மழைவீழ்ச்சியும் வெள்ளப்பெருக்கும் : சூடான வெப்பநிலை வளிமண்டலத்தின் ஈரப்பதனை அதிகரித்து மழைவீழ்ச்சியை துரிதப்படுத்துகின்றது. இது உயிர்கள், சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய மோசமான வெள்ளப்பெருக்கு அடிக்கடி ஏற்படக் காரணமாக அமையக்கூடும். இலங்கை வருடந்தோறும் வெள்ளப்பெருக்கு காரணமாக 32 பில்லியன் ரூபாவை இழக்கின்றது.
வறட்சி: உயர்வான வெப்பநிலை மூலமாக ஏற்படுகின்ற கடுமையான வறட்சி நிலைமைகள் காரணமாக பாவனைக்கு எடுக்கக்கூடிய நீரின் அளவு குறைவடையும். விவசாய உற்பத்திகள், நீர் மூலங்கள் மற்றும் சூழற்றொகுதிகள் அச்சுறுத்தலுக்கு இலக்காகின்றன. வறட்சி காரணமாக இலங்கைக்கு வருடாந்தம் 5.2 பில்லியன் ரூபா நட்டம் விளைகின்றது.
காட்டுத் தீ: கலிபோர்னியா, அவுஸ்திரேலியா மற்றும் மத்திய தரைக்கடல் பிரதேசங்கள் போன்ற பிரதேசங்களில் நீண்டகால தீப்பற்றுதல் மற்றும் மிகவும் கடுமையான காட்டுத்தீ சாதாரண நிகழ்வுகளாக மாற்றமடைந்து வருகின்றன.
கடல் மட்டம் உயர்வடைதல்
கடல் மட்டம் உயர்வடைதல் என்பது உலக சமுத்திரங்களின் சராசரி மட்டங்களின் நீண்டகால உயர்வடைதலாக அமைவதோடு அது அடிப்படையில் பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கடல் நீரின் வெப்ப விரிவாக்கம் ஆகிய இரண்டு காரணிகளால் இடம்பெறுகின்றது. புவிக்கோளம் சூடாகின்றபோது அந்த வெப்பத்தின் 90% சமுத்திரங்களால் உறிஞ்சப்படுவதோடு அதன் விளைவாக கடல் வெப்பநிலை உயர்வடைதலால் இடம்பெறுகின்ற கடல்நீரின் வெப்ப விரிவாக்கம் கடல் மட்டம் உயர்வடைய காரணமாக அமைகின்றது.
இதற்கு மேலதிகமாக அந்தாட்டிக்கா மற்றும் கிறீன்லாந்து போன்ற பிரதேசங்களில் தரைப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகளும் பனிக்கட்டித் தட்டுகளும் உருகுதல் காரணமாக கடலில் அதிகளவான நீர் சேர்வதோடு அதுவும் கடல்மட்டம் உயர்வடைய தொடர்ந்தும் பங்களிப்புச் செய்கின்றது.
கடல்மட்டம் உயர்வடைகின்ற நிகழ்வு காலநிலை மாற்றங்களின் பிரதானமான பாதகவிளைவுகளில் ஒன்றாகக் கருதப்படுவதோடு அது உலகம் பூராவிலும் பெரும்பாலான கரையோரப் பிரதேசங்களில் கவனத்திற் கொள்ளப்படுகின்ற காரணியாக அமைந்துள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் நிவ்யோர்க், டாக்கா, மும்பாய், சாங்ஹாய் போன்ற பல நகரங்கள் கடல் மட்டம் உயர்வடைவதன் காரணமாக அமிழ்ந்துசெல்ல இடமுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் கடல் மட்டம் 2071 அளவில் 0.1 – 0.2 மீற்றர்களாலும் 2221 அளவில் ஏறக்குறைய 0.7 மீற்றராலும் உயர்வடையுமென எதிர்வுகூறப்பட்டுள்ளதோடு அதன் மூலமாக பரவலான கரையோர அரிப்புகள், வெள்ளப்பெருக்கு, புயல் மற்றும் கரையோர தாழ்நிலங்களும் ஈரநிலங்களும் நீரில் மூழ்கக்கூடும்.
சவால்கள்:
கரையோர அரிப்பு : மியாமி, நிவ்யோர்க், மற்றும் வெனீஸ் போன்ற நகரங்கள் எற்கெனவே கடல் மட்டம் உயர்வடைந்ததால் கணிசமான சவால்களை எதிர்நோக்கியுள்ளன.
இடம்பெயர்தல் : கடல்மட்டம் உயர்வடைதல் காரணமாக கரையோர மக்கள் அவர்களின் வாழிடங்களை இழப்பதோடு அவர்களை மீளக்குடியமர்க்கவும் நேரிடலாம். அது காலநிலை காரணமான தஞ்சம் கோருபவர்களை உருவாக்குகிறது.
உயிர்ப்பல்வகைமையின் சீரழிவு: பவளப்பாறைகள், கண்டல் தாவரங்கள் மற்றும் கரையோர சூழற்றொகுதிகள் அபாயநேர்வுக்கு இலக்காதல் ஊடாக சமுத்திர உயிர்ப் பன்வகைமை மற்றும் அதனைச்சாரந்த வாழ்வாதாரங்களுக்கு பாதகவிளைவுகள் ஏற்படக்கூடும்.
உயிர்ப்பல்வகைமைய இழத்தல் மற்றும் சூழற்றொகுதிகளின் சீரழிவு
காலநிலை மாற்றங்கள், உயிரினங்கள் அருகிப்போதல், வாழிடங்களை இழத்தல் உயிர்ப்பல்வகைமை மாற்றமடைதலை உள்ளிட்டதாக சூழற்றொகுதிகளுக்கு கணிசமான சேதம் விளைவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் உயிரினங்களுக்கு மாறிவருகின்ற காலநிலை நிலைமைகளுக்கு போதியளவிலான சீக்கிரமாக இசைவாக்கம் அடைய இயலாதென்பதோடு அது சூழற்றொகுதிகளில் சமநிலை சிதைவடைய காரணமாக அமைகின்றது.
சவால்கள்:
அருகிச்செல்லல் : வெப்பநிலை அதிகரித்தல் உயிரினங்களின் வாழிடங்களை இழக்கவும் உயிரினங்களின் இடம்பெயர் பாங்குகள் மாற்றமடையவும் காரணமாக அமைகின்றது. அது உயிரினங்களின் இருப்பிற்கு சவாலாக அமைகின்றது.
சமுத்திர அமிலமயமாக்கல்: வளிமண்டத்தில் CO2 உறிஞ்சப்படுவதால் கடல் நீரில் PH பெறுமானம் குறைவடைகின்றது. இந்த இரசாயன சமநிலையின்மை மற்றும் கடல் நீரின் இரசாயனம் மாற்றமடைதல் கடல் உயிரினங்களுக்கு, குறிப்பாக பவளப்பாறைகள் மற்றும் சிப்பிகள்மீது பாதகமான தாக்கங்களை எற்படுத்துவதோடு பவளப்பாறை வெளுப்பிற்கும் ஏதுவாக அமைகின்றது.
சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள்
காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் சுற்றாடலுக்கு மாத்திரமன்றி சமூக மற்றும் பொருளாதாரரீதியாக ஆழமாக பரவிச்செல்கின்றது. வறிய – செல்வந்த நாடுகளுக்கிடையிலான வேறுபாடுகள் காலநிலைசார்ந்த அனர்த்தங்களின் தாக்கங்களை தீவிரப்படுத்துகின்றது.
சவால்கள்:
வறுமையும் சமத்துவமின்மையும் : புவி தென்னரைக்கோளத்தில் ஆபத்திற்கு இலக்காகக் கூடிய நிலைமைகளில் வசிக்கின்ற சமுதாயங்கள் ஊறுகளுக்கு இசைவாக்கம் அடைவதற்கான போதியளவிலான வளங்கள்கூட இல்லாதநிலையில் விகிதாசாரமற்ற தாக்கங்களுக்கு முகங்கொடுத்துள்ளன.
உணவுப் பாதுகாப்பு: எதிர்பாராத வானிலை பாங்குகள், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு விவசாயத்திற்கு தடைகளை ஏற்படுத்துவதோடு உலகளாவிய உணவு வழங்கல் தொடருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.
பொருளாதார சேதங்கள்: விளிம்புநிலை காலநிலை நிகழ்வுகளால் இடம்பெறுகின்ற உட்கட்டமைப்பு வசதிச் சேதங்கள் மற்றும் இசைவாக்கம் அடைவதிலான முயற்சிகளுக்கான கிரயம், அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் பொருளாதாரங்கள்மீது குறிப்பாக தாக்கங்கள் ஏற்படுகின்றன.
அனர்த்த அபாயநேர்வினைக் குறைத்தல் மற்றும் இசைவாக்கம் அடைகின்ற உபாயமார்க்கங்கள்
காலநிலை மாற்றங்களின் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக தணிப்பதற்கான வழிமுறைகள் (GHG உமிழ்வினைக் குறைத்தல்) போன்றே இசைவாக்கம் அடைதலுக்கான (அதன் தாக்கங்களுக்கு பழகிக்கொள்ளல்) வழிமுறைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். பாரிஸ் உடன்படிக்கை போன்ற சர்வதேச உடன்படிக்கைகள் மூலமாக புவி வெப்பநிலை அதிகரித்தல் 2 செல்சியஸ் பாகையைவிட குறைவான எல்லையில் பேணிவரவேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது.
குறைப்பதற்கான உபாயமார்க்கங்கள்:
புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி : உயிர்ச்சுவட்டு எரிபொருள் மீது தங்கிவாழ்தலைக் குறைப்பதற்காக சூரிய சக்தி, காற்றுவிசை மற்றும் ஏனைய புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்களை பாவனைக்கு எடுத்தல்.
காபனை தேக்கிவைத்தல் : உமிழப்படுகின்ற CO2 ஐ தேக்கிவைத்து களஞ்சியப்படுத்தி வைக்கின்ற தொழில்நுட்பங்களை முன்னேற்றுதல்.
மீள்நடுகையும் பேணுகையும்: வனங்கள், ஈரநிலங்கள் மற்றும் ஏனைய காபன் உறிஞ்சுதல்களை பாதுகாத்தலும் மீள்நிறுவுதலும்.
இசைவாக்கம் அடைவதற்கான உபாயமார்க்கங்கள்:
தாக்குப்பிடிக்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள்: விளிம்புநிலை காலநிலை நிகழ்வுகளுக்கும் கடல்மட்டம் உயர்வடைதலுக்கும் தாக்குப்பிடிக்ககூடியவகையில் நகரங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் திட்டமிடுதல்.
நீர் முகாமைத்துவம் : குறிப்பாக வறட்சியால் அடிக்கடி பாதிக்கப்படுகின்ற பிரதேசங்களில் வினைத்திறன்மிக்கதாக நீரைப் பாவிக்கின்ற மற்றும் பேணுவதற்கான கொள்கைகளை அமுலாக்குதல்.
சமுதாய அடிப்படையிலான இசைவாக்கமடைதல் நிகழ்ச்சித்திட்டங்கள்: பிரதேசரீதியாக இசைவாக்கமடைவதற்கான திட்டங்களை அபிவிருத்தி செய்கையில் பிரதேசரீதியாக நிலவுகின்ற விசேட தேவைகளையும் பலவீனங்களையும் இனங்காண்பதற்காக பிரதேச சமுதாயங்களை நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைத்துக்கொள்ளல்.
கொள்கைகளும் உலகளாவிய ஒத்துழைப்பும்
காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்தல் உலகளாவிய சவாலாக அமைவதோடு அதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ளவேண்டியது அத்தியாவசியமானதாகும். காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைத்த மாநாடு (UNFCCC) மற்றும் பாரிஸ் மாநாடு போன்ற சர்வதேச உடன்படிக்கைகளை எதிர்பார்ப்பு சார்ந்ததாக ஏதேனும் இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் காரணிகள் காரணமாக முன்னேற்றம் மந்தகதி அடைந்துள்ளது.
பாரிஸ் உடன்படிக்கை முக்கியமான இலக்குகளை எடுத்துக்காட்டியபோதிலும் அவற்றை நடைமுறைப்படுத்த உடன்படிக்கை செய்துகொண்ட நாடுகள் பொறுப்புக்கூறுவதை வலுவுக்கு கொண்டுவருவதற்கான பொறியமைப்பொன்று அங்கு இல்லாமையானது அதன் முன்னேற்றத்தை கணிசமான அளவில் மட்டுப்படுத்தி உள்ளது.
கொள்கைகளில் நிலவுகின்ற இடைவெளிகள் விளைவாற்றல்மிக்க காலநிலை கொள்கைகளை அமுலாக்குதல் மீதும் தடைகளை ஏற்படுத்துகின்றது. அரசியல் பகைமைகள் மற்றும் முரண்பாடுநிறைந்த பொருளாதாரப் போக்குகள் இத்தகைய அர்த்தபுஷ்டிமிக்க செயற்பாடுகளில் தடைகளை ஏற்படுத்துகின்றன.
பெரும்பாலான நாடுகள் காலநிலை மாற்றங்களின் நீண்டகால தாக்கங்களுக்காக போதியளவிலான கவனத்தைச் செலுத்தாமல் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கின்றன. அதன் பெறுபேறாக அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளும் விளிம்புநிலை சமுதாயங்களும் முகங்கொடுக்கின்ற காலநிலை மாற்றங்களின் விகிதாசாரமற்ற தாக்கங்களுக்கான நியாயமான தீர்வுகளை உறுதிசெய்வதற்காக காலநிலை நியாயத்தன்மை அத்தியாவசியமாகின்றது.
காலநிலை மாற்றங்கள் ஊடாக தோன்றுகின்ற சவால்களை வென்றெடுப்பதற்காக சர்வதேச ஒத்துழைப்பினை உறுதிப்படுத்துதல், காலநிலை மாற்றங்களை கருத்திற்கொள்வதை பொருளாதார கொள்கைகளுக்குள் சேர்த்துக்கொள்ளல் மற்றும் சமத்துவத்தை தழுவிக்கொள்ளல் மிகவும் முக்கியமானதாகும்.
காலநிலை மாற்றங்களின் தாக்கங்களை குறைத்துக்கொள்ளலும் அனைவருக்கும் நியாயத்தையும் நிலைபெறுதகு எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இத்தகைய முயற்சிகள் அத்தியாவசியமாகின்றன.
இறுதியாக காலநிலை மாற்றங்களாவன மானிட வர்க்கம் இதுவரை எதிர்நோக்கிய முக்கியமான சவால்களில் ஒன்றாகும். இந்த நெருக்கடியை தீர்த்துவைப்பதற்கான அவசரத் தேவைப்பாடு இன்றளவில் மிகவும் தெளிவாக நிலவுகின்றது. புத்தம்புதிய தீர்வுகளை பிறப்பிப்பதற்கான மிகப்பெரிய சாத்தியவளம் நிலவுகின்றது. குறைத்தல், இசைவாக்கம், உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் நிலைபெறுதகு தன்மைக்கான அர்ப்பணிப்பு தொ
டர்பில் கவனஞ் செலுத்துவதன் மூலமாக எதிர்காலச் சந்ததியினருக்காக புவியன்னையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக செயலாற்ற மானிட வர்க்கத்திற்கு இயலுமானதாக அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM