இளம் தாய் ஒருவர் பிரசவித்து 15 நாட்களான தனது பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து விட்டு உறங்க வைத்த பின் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை சவூத் மடக்கும்புர தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

20 வயதான குறித்த இளம் தாய் பிரசவித்து 15 நாட்களான தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்து சென்றதாகவும், சில நிமிடங்களுக்கு பின் தாய் தனது பிள்ளையை பார்ப்பதற்காக சென்ற பொழுது குழந்தை உயிரிழதுள்ளதாக தலவாக்கலை பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தை உயிரிழந்திருப்பதற்கான காரணத்தை கண்டறிய முடியாமல் சந்தேகத்தை ஏற்பட்டுத்தியதன் காரணமாக பொலிஸார் குழந்தைக்கும் வீட்டிற்கும் நேற்று பாதுகாப்பு வழங்கினர்.

இதனையடுத்து இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவத்தை விசாரணையை செய்த பின் குறித்த குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.