வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் அரச உத்தியோகத்தர்களை ஏற்றாது பழிவாங்கும் நோக்குடன் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் செயற்படுவதாக அரச உத்தியோகத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இ.போ.சபை பஸ்கள் உரிய நேரத்திற்கு சேவையில்  ஈடுபடாததால் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை எனத் தெரிவித்து கடந்த மார்ச் மாதம் வவுனியா பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருந்ததுடன், அரசாங்க அதிபர் மற்றும் இ.போ.சபை சாலை முகாமையாளரிடம் மகஜரும் கையளித்திருந்தனர்.

இந்நிலையில் அதற்கு பழிவாங்கும் நோக்குடன் தற்போது அரச உத்தியோகத்தர்கள் வீதியில் நின்று இ.போ.சபை பஸ்களை மறித்தால் நிறுத்தாது செல்வதாகவும், தமது அலுவலகங்களுக்கு கடந்து தூரத்தில் பஸ்களை நிறுத்தி தம்மை இறக்குவதாகவும் அரச உத்தியோகத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி தாம் உரிய நேரத்திற்கு வேலைக்குச் செல்ல உதவ வேண்டும் எனவும் தெரிவித்தனர்.