வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2028ஆம் ஆண்டளவில் கடன் செலுத்தப்படவிருப்பதால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும் என்ற எண்ணம் தோற்றுவிக்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் 2022 - 2023களில் ஏற்பட்டது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது வெளிநாட்டு கையிருப்பை 2028ஆம் ஆண்டளவில் 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நாம் இருக்கிறோம்.
15.1 டொலர் பில்லியன்களை ஈட்டிக்கொள்ள முடியும் என்ற வலுவான நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இதுபற்றி பலரும் ஆலோசனைகளை வழங்கினர். அவை நல்ல ஆலோசனைகள். ஆனால், முக்கியமான விடயம் என்ன?
இப்போது நாம் 12.55 பில்லியன் டொலர்களையும் அதேபோல் செலுத்தத் தவறிய கடன் 1.7 டொலர் பில்லியன்களையும் நாம் மறுசீரமைப்புக்கு உட்படுத்தியுள்ளோம்.
இந்த 12.5 பில்லியன் டொலர்களில் 11.5 பில்லியன் டொலர்கள் 2015 - 2019 வரையான அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனாகும். அன்று இந்த ஆலோசனைகளை வழங்கியிருந்தால் எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்காது. அதனால் ஆலோசனைகள் தாமதமாகிவிட்டன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்குவதே அதற்கான பெறுமதியாகும். மிகத் தாமதமாகி ஆலோசனை வழங்கினால் அது வலிதற்றதாகிவிடும். இந்த விடயம் புரிகிறதா?
சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்து இரண்டாவது தவணைக்கும் அனுமதி பெறப்பட்டிருந்தது. நாம் அதிகாரத்தை கைப்பற்றும் வேளையில் மூன்றாவது மீளாய்வு தாமதமாகியிருந்தது. அதனை, செப்டம்பரில் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இருப்பினும் தேர்தல் நடக்கின்ற வேளையில் மூன்றாவது மீளாய்வுக்கு தயாரில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது.
அதன்படி, பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர் நவம்பர் 16ஆம் திகதி நாம் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மீளாய்வை ஆரம்பித்தோம். இரண்டாவது மீளாய்வில் முன்னைய அரசாங்கத்தினால் எட்டப்பட்ட அடைவுகள், இணக்கப்பாடுகள் பல காணப்பட்டன.
அவற்றில் ஒன்று, வாடகை வருமான சொத்துக்கள் மீது 2025ஆம் ஆண்டிலிருந்து வாடகை வருமான வரி விதிப்பது குறித்த இணக்கப்பாடு இரண்டாவது மீளாய்வில் எட்டப்பட்டிருந்தது. அதேபோல் ஏற்றுமதிச் சேவை மீது நூற்றுக்கு முப்பது வீதமான நிறுவன வரி, ஏற்றுமதிச் சேவைக்கு 30 வீத வரி விதிக்கவும் இரண்டாவது மீளாய்வில் இணக்கம் காணப்பட்டிருந்தது. அதேவேளை, ஜனவரியிலிருந்து விசேட வர்த்தக பொருட்கள் மீதான வரியை நீக்கி, பெறுமதி சேர் வரியுடன் இணைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த விசேட வர்த்தக பொருட்கள் மீதான சேவை வரியினாலேயே எமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக வரி விதிப்பு, வரி அதிகரிப்பு, வரி குறைப்பு ஆகியவற்றை செய்கிறோம். இரண்டாவது மீளாய்வு கூட்டத்தில் இந்த சட்டத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக 'வற்' வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டது. அதேபோல், தனிப்பட்ட வருமானம் மீதான வரியற்ற எல்லைகளை அவ்வண்ணமே தக்க வைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில், இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான இணக்கமும் எட்டப்பட்டிருந்தது. 'வற்' வரியின் ஊடாக வர்த்தகர்களுக்கு அவசியமான கடனை விரைவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அதனை நீக்குவதற்கான யோசனையொன்று கொண்டுவரப்பட்டிருந்தது.
உழைக்கும்போது செலுத்தும் வரி எல்லை அதிகரிப்பு
மூன்றாவது மீளாய்வை ஆரம்பிக்கும் வேளையில் எமது நாட்டின் தொழில்வான்மையாளர் மீது விதிக்கப்பட்டிருந்த வரி தொடர்பில் தொழில்வான்மையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம், வைத்தியர்களின் சங்கம், வங்கி முகாமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பெருமளவானோர் உழைக்கும்போது செலுத்தும் வரி தொடர்பில் அதிருப்தியில் இருந்தனர்.
வரி எல்லையை ஒரு இலட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சங்களாக அதிகரித்துள்ளோம். அதேபோல், நூற்றுக்கு ஆறு வீதத்துக்குள் அடங்கும் வகையில் தனிநபர் வருமான வரியின் முதல் தொகுதியை, 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் வரையில் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்ய எம்மால் முடிந்துள்ளது.
அதனால் ஒன்றரை இலட்சம் மாத சம்பளம் பெறுவோர் வரியிலிருந்து 100 வீதம் விடுவிக்கப்படுவர். 2 இலட்சம் சம்பளம் பெறுவோர் 75 வீதம் வரியிலிருந்து விடுவிக்கப்படும். இரண்டரை இலட்சம் சம்பளம் பெறுபவரின் வரி 61 சதவீதத்தினால் விடுவிக்கப்படுவர். 3 இலட்சம் சம்பளம் பெறுவோர் 47 வீதம் வரியிலிருந்து விடுவிக்கப்படுவர். மூன்றரை இலட்சம் சம்பளம் பெறுவோர் 25 வீதம் வரியிலிருந்து விடுவிக்கப்படுவர். அதனால் அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த சலுகையும், குறைந்த சம்பளம் பெறுவோர் அதிக சலுகையும் கிடைக்கும் வகையில் உழைக்கும்போது செலுத்தும் வரியினை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது.
யோகட் மற்றும் பால்சார் உற்பத்திகள் மீதான வெட் வரி திருத்தம்
அடுத்ததாக எமது பிள்ளைகளின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பிரச்சினை குறித்து சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். உங்களுக்கு நினைவிருக்கும் கடந்த அரசாங்கத்தினால் பால்மா மற்றும் யோகட் போன்ற உற்பத்திகளுக்கு வற் வரி விதிக்கப்பட்டிருந்தது. அதனால் மூன்றாவது மீளாய்வில் எமது நாட்டில் உற்பத்திச் செய்யப்படும் பால் சார் உற்பத்திகளின் மீதான பெறுமதி சேர் வரி குறைக்க வேண்டும் என்ற இணக்கப்பாட்டினை எட்டியுள்ளோம்.
கடந்த அரசாங்கம் இரண்டாவது மீளாய்வுக் கூட்டத்தில் 30 சதவீத ஏற்றுமதிச் சேவை வரி விதிக்கப்படும் என இணக்கம் காணப்பட்டிருந்தது. அதனை 15 சதவீதமாக குறைப்பதற்கான இணக்கப்பாட்டினை நாம் எட்டியுள்ளோம். சேவை ஏற்றுமதிக்கு 15 சதவீத வரி என்பது சர்வதேசத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிலையாகும். அந்தளவில் வரியை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது.
அதேபோல் (Withholding Tax) நிறுத்திவைத்தல் வரியினை 5 சதவீத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரித்துக்கொள்ள இணக்கம் எட்டப்பட்டது. முதியவர்கள், ஓய்வுபெற்றவர்கள், ஒரு தொகை பணத்தை வைப்பிலிட்டு அந்த வட்டியில் வாழ்கிறார்கள். அவ்வாறானவர்கள் மாதம் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான வரியை பெற்றால் மட்டுமே அவர் வரி விதிப்புக்குள் உள்வாங்கப்படுவார். சாதாரணமாக ஒன்றரை இலட்சம் வருமானம் இருக்க வேண்டும். ஆனால், நிறுத்திவைத்தல் வரியின் ஊடாக ஒன்றரை இலட்சத்துக்கு குறைவான வரியை பெற்றாலும், நிறுத்திவைத்தல் வரி என்ற வகையில் பேணிச் செல்லும் இயலுமை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு உள்ளது. அதனால் இறைவரித் திணைக்களத்துக்குள் எந்தவொரு பிரஜையும் தான் குறித்ததொரு வரிக்கு உரித்தானவர் அல்லவென நினைக்கும் பட்சத்தில், மாத வருமானம் அல்லது வட்டி வருமானம் ஒன்றரை இலட்சமாக இல்லாமல் இருக்குமாயின், தனக்கு வருடமொன்றுக்கு கிடைக்கும் வருமானம் 18 இலட்சம் அல்ல என எவரேனும் நினைத்தால், அவர்கள் உள்நாட்டு வருமான வரி திணைக்களத்துக்குச் சென்று தமது வரி தொடர்பில் தகவல்களை வழங்கி வரிவிதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும்.
இதனால், ஓய்வூதியதாரர்கள் போன்ற மாதாந்தம் ஒன்றரை இலட்சம் என்ற வரி வரம்புக்கு குறைந்த வருமானத்தை ஈட்டும், 10 சதவீதத்துக்கும் குறைந்த வருமானத்துக்கு வரி செலுத்துவோரிடத்திலிருந்து நிறுத்திவைத்தல் வரியினை அறவிடாமலிருக்கவும், குறைந்த வருமானம் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கும் சந்தர்ப்பம் உள்ளது. அவ்வாறானவர்களுக்கு விரைவான ஆலோசனைகளை வழங்குவதற்கான நிலையங்களை கொழும்பில் உள்ள தலைமையகத்திலும், நாடளாவிய ரீதியில் உள்ள அலுவலகங்களிலும் ஸ்தாபிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளியோம். அதனால் எமது வரி வலையை விஸ்தரிப்பதற்கான நோக்கமே அன்றி, குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மேலதிக நிறுத்திவைத்தல் வரியினை விதிப்பதற்கான தேவை ஏற்படாது.
வாகன சந்தையை கட்டம் கட்டமாக திறந்து விடுவது குறித்து கவனம்
அடுத்ததாக, வாகனச் சந்தையை கட்டம் கட்டமாக திறந்துவிட வேண்டும். ஏனென்றால் அதனுடன் இணைந்த தொழிற்துறை ஒன்றுள்ளது. அதனுடன் தொடர்புள்ள தொழில்முனைவோர் உள்ளனர். நீண்ட காலத்துக்கு வாகன சந்தையை தடுத்து வைக்க முடியாது. அதனால் 3 கட்டங்களில் இந்த வாகன சந்தையை திறந்துவிட திட்டமிட்டுள்ளோம்.
பயணிகள் போக்குவரத்து பஸ் மற்றும் விசேட தேவைகளுக்கு பயன்படுத்தும் கார் என்பவற்றை கடந்த 14ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு ஏற்ற வகையில் திறந்துவிட்டுள்ளோம். பண்டப் போக்குவரத்துக்கான கார் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார் என்பவற்றுக்கு அனுமதி வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார் அனுமதியை 2025 பெப்ரவரி முதல் அமுல்படுத்த இருக்கிறோம். இதனால் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படும் என யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
மத்திய வங்கியுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தி இந்த வாகன இறக்குமதியினால் வெளிச்செல்லும் டொலரின் அளவு தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம். அது எந்தளவுக்கு எமது பொருளாதாரத்துக்கு தாங்கக்கூடியதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம்.
எமது பொருளாதாரத்தை மீளமைக்க வேண்டுமானால், இந்த வாகன சந்தையை திறந்துவிட வேண்டும். அதனால் கடுமையான நிலைப்பாட்டிலிருந்து இந்த வாகன சந்தையை திறந்துவிடுகிறோம். ஏனென்றால், இது முக்கியமானது என நாம் கருதுகிறோம்.
பராட்டே சட்டம் சலுகை நீடிப்பு
குறிப்பாக மூன்றாவது மீளாய்வுடன் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த பராட்டே சட்டம் 2024 டிசம்பர் 15ஆம் திகதி முதல் முடிவுக்கு வருகிறது. சிறு மற்றும் மத்திய தர தொழில்முனைவோர் இன்னும் வழமை நிலைக்குத் திரும்பவில்லை. எனவே, அவர்களுக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும்.
2024.09.31ஆம் திகதியளவில் செலுத்தவேண்டிய முழு கடன் 1385 பில்லியன் என கணிப்பிடப்பட்டுள்ளது. முழு கடன் பெற்றோர் எண்ணிக்கை 752,896 ஆகும். முழு கடன் பெற்றோர் தொகையில் 99 வீதமானோர் பெற்ற தொகை 25 மில்லியனை விடக் குறைவாகும். இது தான் புள்ளிவிபரம்.
கடன் பெற்றோர் 752,896 பேர் இருந்தபோதும் அதில் 99 வீதமானவர்கள் 25 மில்லியனை விட குறைவாக கடனை செலுத்தாதோர் ஆவர். அதனால் பராட்டே சட்டம் முழுமையாக இடைநிறுத்தப்பட்டிருப்பதால் வங்கிக் கட்டமைப்பிலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், அவர்களிடம் இருப்பதும் மக்களின் வைப்புப் பணமாகும். அது தவிர வேறு வழியில் வங்கிக் கட்டமைப்புக்கு நிதி கிடைப்பதில்லை. எனவே, மக்களின் வங்கிக் கட்டமைப்பிலுள்ள நிதியின் பாதுகாப்பு தொடர்பிலும் உத்தரவாதம் வழங்க வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் பல நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்தன. அதன் பாதிப்பு பணிப்பாளர் சபையினரையோ வங்கித்துறையினரையோ சென்றடையவில்லை. வைப்பாளர்கள் தான் அதன் பாதிப்பை அனுபவித்தனர். பாரியளவில் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததில் வைப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்றும் ஈடிஐ போன்றவற்றில் பணம் வைப்புச் செய்தோர் பெரும் வேதனையுடன் உள்ளனர்.
இவ்வாறு பல நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததால் வைப்பாளர்களும் பொதுமக்களும் தான் பாதிக்கப்பட்டனர். அதனால் நாம் வங்கிக் கட்டமைப்பை பாதுகாப்பது மற்றும் சிறு, மத்திய தொழில்முனைவோரை பாதுகாப்பது ஆகிய இரண்டையும் சமமாக கருத்திற்கொள்ள வேண்டும்.
அதன்படி, டிசம்பர் 15ஆம் திகதி நிறைவடைய 2025 மார்ச் 31 ஆம் திகதி வரை சுமார் மூன்றரை மாதங்கள் நீடிக்க நாம் முடிவு செய்துள்ளோம். அதில் செலுத்தவேண்டிய வட்டி தவிர கடன் தொகை 25 மில்லியனுக்கு குறைவான கடனை மறுசீரமைக்க 2025 டிசம்பர் 15 வரை கால அவகாசம் வழங்குவதற்கு நாம் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளோம்.
இந்த மறுசீரமைப்புக்கு அவர்கள் தயாரா என்பது தொடர்பில் மார்ச் 31ஆம் திகதி வங்கிகளுக்கு அறிவிக்க முடியும். வங்கிகளும் கடன் பெற்றோரும் கலந்துரையாடி முடிவெடுக்க 31ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளது. தான் செலுத்தவேண்டிய கடன் தொடர்பில் மறுசீரமைப்பு திட்டமொன்றை தயாரிக்க முடியும். 99 வீதமான தொழில்முனைவோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
செலுத்தவேண்டிய வட்டி தவிர்ந்த தொகை 25 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைப்பட்ட கடன் செலுத்தவேண்டியோர் மார்ச் 31ஆம் திகதி மறுசீரமைப்புத் திட்டத்துக்கான தமது விருப்பத்தை வங்கிகளுக்கு முன்வைக்க முடியும். புதிய மறுசீரமைப்புக்கு 2025.09.15ஆம் திகதி வரை மூன்று மாத காலம் வழங்குவோம். வங்கிக்கும் கடன் பெற்றோருக்கும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் பற்றி கலந்துரையாட 9 மாதகாலம் உள்ளது.
செலுத்தவேண்டிய கடன் தொகை தவிர 50 மில்லியனுக்கு மேற்பட்ட கடன் பெற்றோரின் கடன் மறுசீரமைப்புக்கு 2025.06.15 வரை 6 மாத கால அவகாசம் வழங்குகிறோம். அவர்களும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கான உடன்பாட்டை வங்கிக்கு அறிவிக்க வேண்டும்.
வங்கிக்கும் அவர்களுக்கும் இடையில் ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் மறுசீரமைப்புத் திட்ட உடன்பாடு எட்டப்பட வேண்டும். அதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பாதுகாப்பையும் வங்கிகளின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டே இந்தத் திட்டத்தை தயாரித்துள்ளோம். இது தொடர்பான உடன்பாட்டுக்கு நாம் வந்துள்ளோம்.
இந்த பொருளாதார நெருக்கடி நிலையில் எமது பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் உள்ள மக்கள் கருத்திற்கொள்ளப்படாத பொருளாதாரமாக மாறியது. அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அவர்கள் குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்கு சில நிவாரணங்கள் வழங்க எதிர்பார்க்கிறோம். அதற்கு முன்னர் இந்தப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டிய சில சட்டங்கள் உள்ளன. ஏப்ரல் மாதத்திலிருந்து செயற்படுத்துவதாக இருந்தால் அதற்கு முன்னர் அதனை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.
அதனால் சிலவற்றை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். மேலதிகமாக நான் இந்த விடயத்தை முன்வைக்கிறேன். சிலவற்றுக்கு சட்டம் தேவை. சிலவற்றுக்கு அவசியமில்லை. அவை ஏற்கெனவே செயற்படுத்தப்படுகின்றன. ஓய்வூதியம் பெறுவோருக்கு இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவை ஒக்டோபர் மாதம் முதல் 3000 ரூபாவினால் அதிகரித்தோம்.
பொருளாதார நெருக்கடி நிலையுள்ள சூழலிலும் அவர்களுக்கு வாழ்வதற்கு கடினமான நிலை உள்ளது. விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 25 ஆயிரம் ரூபா வரை பசளை நிவாரணத்தை அதிகரித்தோம். சில இடங்களில் இந்த பணம் கிடைப்பதில் தாமதம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நிதி அமைச்சுடன் பேசி எந்தத் தாமதமும் இன்றி அந்த நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்க திட்டம் தயாரித்துள்ளோம். இது தவிர விவசாயிகளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
கஷ்ட நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவு
அடுத்து பொருளாதார நெருக்கடியினால் பாரிய தாக்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிலர் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர். மேலதிக புத்தகங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர். தேவையான உபகரணங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர். எந்த வகையிலும் இது உகந்த நிலைமையல்ல. வரவு செலவுத் திட்டத்தில் அவர்கள் குறித்து கவனம் செலுத்தும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளதோடு இந்த வருட இறுதிக்குள் அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு 6000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அஸ்வெசும பயனாளர்களை தெரிவு செய்கையில் சரியாக தெரிவு நடந்ததா என்ற கேள்வி கிராமங்களில் எழுப்பப்படுகிறது. அஸ்வெசும பெற தெரிவு செய்யப்படவோ பிள்ளைக்கு பாடசாலைக் கல்விக்கான கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்படவோ இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் அஸ்வெசும திட்டத்துக்கு உள்வாங்கப்படாத, ஆனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய பிள்ளைகளை தெரிவுசெய்து அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த 6000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அடுத்து விசேடமாக அஸ்வெசும 4 கட்டங்களாக செயற்படுத்தப்பட்டன. அதிலுள்ள 4 இலட்சக் குழுக்கள் இரண்டு டிசம்பர் 31ஆம் திகதி அஸ்வெசும திட்டத்தில் இருந்து அகற்றப்பட உள்ளன. ஒரு குழு 4 இலட்சம், மற்றொரு குழு 4 இலட்சம் ,அடுத்த குழு 8 இலட்சம், அடுத்தது 4 இலட்சம் என 20 இலட்சம் பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். அந்த குழுக்களில் இருந்த இரு 4 இலட்சம் பேர் கொண்ட குழுக்கள் டிசம்பர் 31ஆம் திகதியுடன் அஸ்வெசும திட்டத்தில் இருந்து ஓரங்கட்டப்பட இருந்தன. அதில் கீழுள்ள குழுவை மார்ச் 31 வரை 3 மாதத்தினால் நீடித்துள்ளோம். இரண்டாவது குழுவை 2025 டிசம்பர் 31ஆம் திகதி வரை ஒரு வருடத்தினால் நீடித்துள்ளோம். அதேபோன்று அஸ்வெசும பெறுவோருக்கும் பெறாதோருக்கும் இடையில் கிராமங்களில் பிரச்சினை உள்ளது. இதனை மீளமைக்க வேண்டும். பழைய கட்டமைப்பின் கீழ் தான் முன்னர் மீளமைப்பு நடந்தது. அது வெற்றிகரமாக நடந்ததா என்பதை கிராமங்களில் உள்ளோர் அனுபவிக்கின்றனர்.
அந்தக் கட்டமைப்பின் ஊடாக பெறும் தகவல்கள், கிராம உத்தியோகத்தரும் சமுர்த்தி உத்தியோகத்தரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் சிலவேளை சமூக சேவை உத்தியோகத்தரின் ஒத்துழைப்புடன் மீள ஆராய்ந்து தற்பொழுது அஸ்வெசும கிடைக்காத ஆனால் நிவாரணம் கிடைக்க வேண்டியவர்களை மீண்டும் தெரிவு செய்து அடுத்த ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு அஸ்வெசும வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று வங்கியூடாகத்தான் அஸ்வெசும வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. பொதுவாக வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை பெற பிறப்புச் சான்றிதழ் வேண்டும். அஸ்வெசும கிடைக்கவேண்டிய குடும்பமாக அடையாளம் காணப்பட்டாலும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் ஒன்றரை வருடங்களாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. 67 ஆயிரம் குடும்பங்கள் இதில் அடங்கும். அஸ்வெசும பெற தகுதி பெற்றும் ஆனால் அந்தப் பயனைப் பெற வங்கிக் கணக்கு ஆரம்பிக்க அடையாள அட்டையோ அடையாள அட்டை பெற பிறப்புச்சான்றிதழோ பெற முடியாத நிலையை அந்தக் குடும்பங்கள் எதிர்கொண்டுள்ளன.
ஆட்சியாளர்கள் மிக நெருக்கமாக அவதானித்து தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் அல்லவா இவை. ஆனால், ஒன்றரை வருடங்களாக கருத்திற்கொள்ளாமல் விட்டனர். மத்திய வங்கியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அடையாள அட்டையின்றி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க அவகாசம் வழங்க நாம் முடிவு செய்துள்ளோம்.
அதனால் அந்த அனைவருக்கும் நிலுவைத் தொகையுடன் அந்த பயனை வழங்க நடவடிக்கை எடுப்போம். சில விடயங்களை வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். சிலவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். மார்ச் 21ஆம் திகதியளவில் வரவு செலவுத் திட்ட விவாதம் நிறைவடைய இருக்கிறது.
அதன் பின்னர், சட்டத்தை நிறைவேற்ற முயன்றால் இதனை ஏப்ரல் மாதம் வழங்க முடியாமல் போகும். இந்தப் பயன்களை துரிதமாக வழங்கும் வகையில் இவற்றை விரைவாக வர்த்தமானியில் வெளியிட்டு அடுத்த ஜனவரியில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், 'வற்' வரி திருத்தம் உள்ளது. அஸ்வெசும சட்டத்தில் பல திருத்தங்கள் உள்ளன. திருத்தங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM