“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது பெற்ற முதல் பெண்மணி!

28 Dec, 2024 | 12:49 PM
image

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த நவம்பர் 27ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கல் விழாவில் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியிடமிருந்து “சாகித்திய ரத்னா” விருதினை பெற்றுக்கொண்டார். 

அதன்படி, இலங்கையில் சாகித்திய ரத்னா விருது பெற்ற “முதல் பெண்மணி” என்ற பெருமைக்குரியவராக திருமதி அன்னலட்சுமி இராஜதுரை விளங்குகிறார். 

இவர் யாழ்ப்பாணம், திருநெல்வேலி மேற்கு, காளி கோவிலடியை சேர்ந்த செல்லர் இராசையா - இராசம்மா தம்பதியினருக்கு மகளாக 1939 ஜூன் 8ஆம் திகதி பிறந்தார். 

திருநெல்வேலி சைவத் தமிழ் கலவன் பாடசாலை, செங்குந்தா இந்துக் கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று இலண்டன் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தி பெற்றார். 

அதன் பின்னர் ஓவிய ஆசிரியர் டிப்ளோமா, ஆங்கில மொழி டிப்ளோமா மற்றும் பத்திரிகையியல் டிப்ளோமா பாடநெறிகளை பூர்த்தி செய்தார். 

இவரது முதல் சிறுகதை 'யாழ் நங்கை’ எனும் பெயரில் தினகரனில் வெளிவந்தது. முதல் கவிதை இலங்கையின் முதலாவது கலைச்செல்வி இதழில் வெளிவந்தது. 

1962இல் வீரகேசரியில் உதவி பத்திரிகை ஆசிரியராக இணைந்து செய்தி எழுதுதல், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு செய்திகளை மொழிபெயர்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். 

மாணவர் கேசரி பக்கத்துக்கு பொறுப்பாக இருந்து தானும் எழுதி மற்றவர்களையும் எழுதத் தூண்டியிருந்தார். 

தொடர்ந்து பத்திரிகையில் கவிதைகள், சிறுகதைகள், தொடர் கதைகள், கட்டுரைகள், கலை இலக்கிய நிகழ்வுகளின் விமர்சனங்கள், நேர்காணல்கள், கதை மொழிபெயர்ப்புகள் என ஓயாது எழுத்துப் பணியில் ஈடுபடுபவராக இருந்தார். 

இவரின் சிரித்திரன் இதழில் “தீவாந்தரம்” தொடர்கதையும் வீரகேசரியில் “சந்திரனில் சுந்தர்” என்ற தொடர்கதையும் பிரசித்தமானவை. 

1966இல் வீரகேசரி வெளியிட்ட ஜோதி குடும்ப வார இதழுக்கு ஆசிரியராக இருந்தார். வீரகேசரியின் விவரணப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த இவர், 1973 தொடக்கம் 1984 வரை மித்திரன் வாரமலர் ஆசிரியராக செயற்பட்டார். 

பின்னர், வீரகேசரி பத்திரிகையில் 1984ஆம் ஆண்டிலிருந்து செய்திப் பகுதி, மகளிர் அரங்கு, இலக்கிய உலகு, கலைக்கேசரி, மங்கையர் கேசரி, சங்கமம், நிலா முற்றம், இலக்கிய பக்கம் எனும் பத்திரிகை அனுபந்த பக்கங்களுக்கு பொறுப்பாக இருந்து பொது மக்களுக்கான தமிழ்ப்பணி ஆற்றினார். 

2010இலிருந்து வீரகேசரியின் மாத வெளியீடான சர்வதேச சஞ்சிகையாகக் கருதப்படும் கலைக்கேசரி சஞ்சிகையை பொறுப்பேற்று நடத்தினார். 

இலங்கை வானொலியிலும் பிரதிகளை அளிப்பவராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் நாடகங்கள் எழுதுபவராகவும் இசைப்பாடல்களை ஆக்குபவராகவும் பல்வேறு பங்களிப்புகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். 

1967 காலப்பகுதியில் வானொலியின் கிராம சஞ்சிகை நிகழ்ச்சியில் பூஞ்சோலை எனும் கிராம மகளிர் நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பின்னர் மகளிர் அரங்கம், மாதர் அரங்கம், கலைகோலம், சிறுவர் நிகழ்ச்சி முதலியவற்றை நடத்தினார். 

பிபிசி தமிழோசைக்காக “இலங்கைக் கடிதம்” எனும் பகுதியை 1994 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை தயாரித்துள்ளார். 

ஜெர்மனி தமிழருவி வானொலியில் 2022 - 2023 ஆண்டு பகுதியில் மனோரஞ்சிதம் இலக்கிய நிகழ்ச்சியை நடத்தினார். 

இரு குறுநாவல்களை கொண்ட “விழிச்சுடர்” (1970), நாவலான “உள்ளக்கதவுகள்” (1975), சிறுகதை தொகுப்பான “நெருப்பு வெளிச்சம்” (1984), கவிதைத் தொகுப்பான “இரு பார்வைகள்” (1994), தனது பெண் பத்திரிகையாளர் அனுபவப் பதிவான “நினைவுப் பெருவெளி” (2012) சிறுகதை தொகுப்பான “அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்” (2023), கட்டுரைகள் அடங்கிய “ஈழத்து இலக்கிய ஆளுமைகள்” (2023) என்பவை இவரது நூல்களாகும். 

Child of the Same Mothers என்ற இன ஐக்கியத்துக்காக தொகுக்கப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்து ஒரு தாய் மக்கள் எனும் பெயரில் தந்துள்ளார். 

தனது வாழ்நாள் சாதனைக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

தமிழ் மணி (1992), எட்மன் விக்கிரமசிங்க விருது (1993), பத்திரிகையாளர் சங்க விருது (2002), உழைக்கும் பத்திரிகையாளர் சங்க விருது (2007), பெண் பத்திரிகையாளர் ஜனாதிபதி விருது (2008), ரோட்டரி கழக விருது (2012), சிவத் தமிழ் விருது (2014), கொடகே சாதனையாளர் விருது (2015), இலங்கை லண்டன் தமிழ் இலக்கிய நிறுவக வாழ்நாள் சாதனையாளர் விருது (2019), கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தமிழ் நிதி விருது (2023)என்பன குறிப்பிடத்தக்கவை. 

இவ்வாறு தமிழ் எழுத்துத்துறையில் நீண்ட கால சாதனை படைத்த திருமதி அன்னலட்சுமி இராஜதுரைக்கு வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே பெறக்கூடிய உயர் அரச விருதான “சாகித்திய ரத்னா” விருது 2024ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டமை சிறப்புமிகு விடயமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25