(க.கமலநாதன்)

 

பல்கலைக்கழக சமூகத்தின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் மிலேச்சத்தனமானது. இதனால் அரசாங்கத்தின் அடக்குமுறை நிறைந்த மனோபாவமே வெளிப்படுகின்றதென தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஒன்று திரண்டு சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு வெளியிட்ட பல்கலைக்கழக சமூகத்தின் மீது பொலிஸாரால் நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 

இதனால் அரசாங்கத்தின் எண்ணப்பாடுதான் வெளியாகின்றது. அரசாங்கத்தை எதிர்த்தால் ஜனநாயகத்தை சிறிதும் மதிக்காமல் அடித்து கலைப்போம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

 

அதனால் அரசாங்கம் செய்தது பெறும் தவறு. இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிரானவர்களை தாக்கி முடக்கிவிட்டு அரசாங்கம் நீண்ட தூரம் பயணிக்க எதிர்பார்க்குமாயின் அந்த எதிர்பார்ப்பு மாயமாகிப் போய்விடும். 

மாணவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தடிகளாலும், கண்ணீர் புகைக் குண்டுகளினாலும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினராலும் முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.