தென் சென்னை - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 7

13 Dec, 2024 | 05:39 PM
image

தயாரிப்பு : ரங்கா ஃபிலிம் கம்பெனி

நடிகர்கள் : ரங்கா, ரியா, நிதின் மேத்தா, இளங்கோ குமணன், திலீபன் குமார், 'ஆறு' பாலா, சுபா, ராம், விஷால் மற்றும் பலர்

இயக்கம் : ரங்கா

மதிப்பீடு : 2/5

தமிழ் சினிமாவில் வடசென்னை- மத்திய சென்னை - என்ற பெயரில் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ஓரளவு வரவேற்பையும் பெற்றது.

மீதமுள்ள தென் சென்னை என்ற பெயரிலும் தற்போது திரைப்படம் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந் தொற்று பரவிய காலகட்டத்திய கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தென் சென்னை என்பது கிழக்கு கடற்கரை சாலையையும் உள்ளடக்கியது. கிழக்கு கடற்கரை சாலை ஒன்றில் உணவகம் ஒன்றினை இரண்டு தலைமுறைகளாக ஒரு குடும்பம் (கதை நாயகனின் குடும்பம்) நடத்தி வருகிறது. அந்த உணவகத்தை  நவீனப்படுத்தவும், மக்களின் ரசனைக்கேற்ப மதுபான கூடத்துடன் கூடிய உணவகமாக விரிவு படுத்துகிறார் நாயகனின் தந்தை.  இதனால் கடன் வாங்குகிறார்.

எதிர்பார்த்தபடி பிரத்யேக மதுபான கூடத்துடன் கூடிய உணவகத்தின் வியாபாரம் நடைபெறாததால் கடன் சுமை அதிகரிக்கிறது. இந்தத் தருணத்தில் அவரின் கடன் சுமையை குறைத்து, உணவகத்தை  தங்களுடைய சட்ட விரோத காரியங்களுக்காக ஒரு கும்பல் பயன்படுத்துகிறது.

இந்த கும்பலிடம் இருந்து உணவகத்தை கதையின் நாயகன் மீட்டாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

கதையின் நாயகன் ராணுவத்தில் அதிகாரியாக தெரிவு செய்யப்படுவதற்கு அனைத்து உடற் தகுதியையும் பெறுகிறார். ஆனால் இறுதிக் கட்டத்தில் தன்னுடைய குடும்பத்திற்காக ராணுவ பணியில் சேராமல் வீடு திரும்புகிறார். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் உணவகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனையில் நாயகன் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தத் தருணத்தில் அவருடைய உறவினர் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பல் மூலம் தங்களுடைய உணவகத்தை சட்டவிரோத காரியத்தில் பயன்படுத்தும் கும்பலிடம் இருந்து பணம் பறிப்பதற்காக முயற்சிக்கிறார். அதில் முதல் முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள்.

இதனால் பெரிய அளவில் வலை பின்னல் கொண்ட அந்த கும்பல் - தங்களை சேதப்படுத்திய அந்த  சிறிய குழுவினை கண்டறிவதில் தீவிரம் காட்டுகிறார்கள்.

அது கொரோனா தொற்று பரவிய காலகட்டம் என்பதால் வாடிக்கையாளர்களின் வருகை வெகுவாக குறைகிறது. இந்தத் தருணத்தில் கதையின் நாயகன் தன் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரை வெளியில் அழைத்து செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கைக்குழந்தை ஒன்றை வீதியில் கண்டெடுக்கிறார்கள். அந்த குழந்தை மீது கதையின் நாயகன் அலாதி பிரியம் காட்டுகிறார். பிறகு அந்தக் குழந்தை யார்?  என்ற விவரம் தெரிய வருகிறது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்- தங்களது தளமாக இயங்கும் அந்த உணவகத்தை அவதானிக்க தொடங்குகிறார்கள். இறுதியில் அந்த சிறிய கும்பலை கண்டுபிடிக்கிறார்கள். அது கதையின் நாயகனின் உறவினர் என்பது தெரிய வந்ததும் அவரை கதையின் நாயகன் எப்படி காப்பாற்றுகிறான்?  என்பதுதான் எக்சன் திரில்லர் ஜேனரிலான இப்படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகனாக நடித்து, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பதுடன் தயாரித்திருக்கும் நடிகர் ரங்கா கூடுதல் பொறுப்பினை எளிதாக சுமக்கிறார்.

கதையின் நாயகனாக நடிப்பதுடன் ரசிகர்களின் மனதிலும் இடம்பெற முயற்சிக்கிறார். எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டும் ஹீரோ காதல் காட்சிகளில் நடிப்பதில் தயக்கம் தெரிகிறது.  கதாபாத்திரங்கள் முழுமையாக எழுதப்படவில்லை என்றாலும்  திரைமொழியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். 

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை செய்து அவரை திருப்திப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களை மறந்துவிட்டார்கள். இயக்குநருக்கு ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர் - படத்தொகுப்பாளர்-  கலை இயக்குநர் - ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இருந்தாலும் படைப்பில் முழுமை இல்லை என்ற எண்ணமே ரசிகர்களிடத்தில் எழுகிறது. ஒரு குழந்தையை தத்து எடுப்பது குறித்த விடயங்களை விழிப்புணர்வுக்காக இடம்பெற வைத்திருக்கும் இயக்குநரின் சில அம்சங்களை மட்டுமே பாராட்டலாம்.

தென் சென்னை -  ஒரு வழி பாதை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்