(நா.தனுஜா)
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடையை அடுத்து உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராக இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (9) மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும் (10) முன்னிட்டு உலகளாவிய ரீதியில் ஊழல் மோசடிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்துள்ளது. அந்தத் தடை பட்டியலில் ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
ஏற்கனவே இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நுழைவு அனுமதித்தடை உள்ளடங்கலாகப் பல்வேறு தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் அனுப்பிவைத்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஊழல் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், 'ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்குக் காரணமாக அமைந்த மிக் விமானக்கொள்வனவில் மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராகவும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவுக்கு எதிராகவும் அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது' எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராகவும், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் உதயங்க வீரதுங்கவுடன் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஏ.வி.எம்.ஜயநாத் குமாரசிறி என்பவருக்கு எதிராகவும் இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM