(நா.தனுஜா)
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், வெகுவிரைவில் அதற்குரிய திகதியைத் தீர்மானிப்பதற்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அண்மையில் நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங்காலங்களிலேனும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்கவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஏற்கனவே கடந்த 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அந்த அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்ற கருத்தும் பரவலாகக் காணப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமுன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடலின் ஓரங்கமாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சிறிதரன், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு குறித்துக் கலந்துரையாடுவதற்கு இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை இதுகுறித்து கலந்துரையாடும் நோக்கில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பி.ப 7.00 மணியளவில் கிளிநொச்சியில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் தீர்வு விவகாரத்தைப் பொறுத்தமட்டில் பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுபட்டுச்செயற்படவேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது 'ஏக்கிய இராச்சிய' உள்ளடக்கத்தைத் தாம் ஒன்றுபட்டு எதிர்ப்பதுடன், அதற்கு மாற்றாக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றை முன்மொழியவேண்டிய தேவை காணப்படுவதாகவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.
அதனை ஏற்றுக்கொண்ட செல்வம் அடைக்கலநாதன், அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றையும், சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வின்போது இதற்கான திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM