(நா.தனுஜா)
மனித உரிமைகள் என்பது மேற்குலக நாடுகளால் நம்மீது திணிக்கப்பட்ட கருத்தியல் எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த மக்கள், பின்னாளில் குறிப்பாக 2022 இல் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் பின்னர் மனித உரிமைகளை அடிப்படையாகக்கொண்டே ஜனநாயகம் உருவாகிறது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அம்மனித உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருப்பினும், அதனை மக்களின் பங்கேற்பின்றி செய்யமுடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு தலைவருமான பேராசிரியர் தீபிகா உடகம தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் அறிமுகப்படுத்தப்பட்டு 76 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை நினைவுகூரும் விதமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே தீபிகா உடகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உரையின் தொடக்கத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் 'ஏ' தரத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் வெளிப்படுத்திய அவர், தரப்படுத்தலில் மனித உரிமைகள் ஆணைக்குழு அடைந்திருக்கும் இம்முன்னேற்றம் ஆணைக்குழுவுக்கு மாத்திரமன்றி, நாட்டுமக்களுக்கும் இன்றியமையாததாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பலரது தொடர் போராட்டத்தினாலும், அர்ப்பணிப்பினாலும் தான் இப்போது எம்மால் மனித உரிமைகளை அனுபவிக்கமுடிவதாகத் தெரிவித்த தீபிகா உடகம, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னோடிகள் எனும்போது சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா போன்றோரின் பெயர்கள் பெரும்பாலும் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை என்றும், ஆனால் அவரது முயற்சியினாலேயே இலவசக்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு எமக்குக் கிட்டியது என்றும் நினைவுறுத்தினார்.
'இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளான 'எமது உரிமைகள் மற்றும் எதிர்காலத்துக்காக இப்போதே நடவடிக்கை எடுப்போம்' எனும் வாசகம் தற்போதைய சூழ்நிலைக்கு மிகப்பொருத்தமானது எனக் கருதுகிறேன். ஏனெனில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் பிரஜைகளின் பங்களிப்பு மிகமுக்கியமானது எனும் உண்மையை இத்தொனிப்பொருள் உணர்த்துகின்றது. ஆட்சியாளர்கள் தமது மனித உரிமைகளைப் பாதுகாப்பர் எனும் உத்தரவாதம் மற்றும் நம்பிக்கையின் நிமித்தமே மக்கள் அவர்களைத் தெரிவுசெய்கிறார்கள். ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை வழங்குவதில் மக்களின் பங்கேற்பு தொடரவேண்டியது அவசியமாகின்றது' எனவும் பேராசிரியர் தீபிகா உடகம சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான கருத்தியலின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பகிர்ந்துகொண்ட அவர், ஆரம்பத்தில் 'மனித உரிமைகள்' என்பது மேற்குலகத்தினால் திணிக்கப்பட்ட ஒரு கருத்தியல் என்பதுடன், அது எமக்கு அவசியமற்றது என்ற நிலைப்பாடே மக்கள் மத்தியில் பெருமளவுக்கு நிலவியதாகக் குறிப்பிட்டார். ஆனால் அக்காலப்பகுதியிலும் கூட மக்கள் ஜனநாயகத்தையும், அதனை வலுப்படுத்தக்கூடிய தேர்தல்களையும் கோரியதாகத் தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டு உருவான 'அரகலய' என்று அறியப்படும் மக்கள் தன்னெழுச்சிப்போராட்டத்தின் பின்னர் தான் ஜனநாயகம் என்பது முற்றுமுழுதாக மனித உரிமைகளை அடிப்படையாகக்கொண்டது எனும் புரிதல் பெருமளவானோர் மத்தியில் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 'புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையின்போது, சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை அரசியலமைப்பில் உள்வாங்கவேண்டிய அவசியமில்லை என வெகுசிலர் ஆலோசனை வழங்கினர். ஆனால் அப்போதே அக்கருத்துக்கு வலுவான எதிர்ப்புக்கள் நிலவின. இருப்பினும் கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவலின் பின்னர் சமூக, பொருளாதார உரிமைகள் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தைப் பலர் புரிந்துகொண்டனர். அதன்படி மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. ஆனால் அதற்குரிய அழுத்தங்களை வழங்கவேண்டிய பொறுப்பு மக்களுக்கு உண்டு' எனவும் பேராசிரியர் தீபிகா உடகம வலியுறுத்தினார்.
அத்தோடு மனித உரிமைகள் பாதுகாப்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்களிப்பு குறித்து கருத்து வெளியிட்ட அவர், சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மிகவும் வலுவான ஆணை வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும், அந்த ஆணை குறித்தவொரு மீறல் சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அதனைக் கையாள்வதற்கே பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் குறித்த சம்பவம் இடம்பெறுவதைத் தடுக்கக்கூடிய விதமாக அந்த ஆணை பிரயோகிக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் தொடர்பில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியவகையில் மக்களுக்கு சிவில் கல்வி போதிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM