மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை வெளிக்காட்டியுள்ளது - ஜனாதிபதி

10 Dec, 2024 | 03:20 PM
image

கடந்த மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை வெளிக்காட்டியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

நேற்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

எமது நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமாக மக்கள் ஆணை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.ஒரு சமயம் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் காரணமாக மக்கள் ஆணை வெளிப்படுத்தப்பட்டது. மற்றொரு சமயம்  நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக மக்கள் ஆணையின் பிரதான போக்கு பிரதிபலிப்பானது. 

2024 மக்கள் ஆணையில் இலஞ்ச ஊழலுக்கு எதிரான மக்களின் எதிர்பார்ப்பே பிரதானமானதாக உள்ளது. இந்த இடத்தில் இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள் ,பொலிஸ் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள்  நீதித் சேவையை பிரதிநிதித்துவப்படுத்துவோர் உட்பட பல முக்கிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவோர் உள்ளனர். அரசியல் அதிகாரம் சார்பில் நான் இருக்கிறேன்.

அரசியலமைப்பின் ஊடாக நாம் ஒவ்வொருவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் ஊடாக  ஒவ்வொருவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.சட்டங்கள் விதிமுறைகள்,  சுற்றுநிருபங்கள் மூலம்  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருக்கும் அதிகார எல்லைகள் அரசியலமைப்பின் ஊடாகவும் சட்டத்தின் ஊடாகவும் விதிக்கப்பட்டுள்ளன.   அனைத்து அதிகாரங்களும் மக்களின் இறைமையில் இருந்தே உருவாகிறது. நாம் கட்டுப்பட்டுள்ள சட்டம்,எமக்குள்ள வரையறைகள் இவை அனைத்திற்கும் அப்பால் நாம் அனைவரும் மக்கள் ஆணைக்கும் இறைமைக்கும்  கட்டுப்பட்டுள்ளோம். 

"கௌரவமான நாட்டில் முன்மாதிரியான முன்னோடிகளாக நாம் மாறுவோம்" என்ற தொனிப்பொருளை நான் கண்டேன்.நாம் என்றால் எம்மைப் பற்றி குறிப்பிடப்படுகிறது.இங்கு யார் இல்லை. அரசியல் அதிகாரத்தின் சார்பில் நான் இருக்கிறேன். ஜனாதிபதி செயலாளர்.பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள்.உச்ச நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிபதிகள் உள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளனர்.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்  தலைவர் மற்றும் ஆணையாளர்கள் இருக்கிறார்கள்.

வேறு யார் குறைவாக உள்ளனர்?அவ்வாறானால் எங்கு பிரச்சினை உள்ளது?நாம் நேர்மையாக ஆராய்ந்து பார்த்தால் பிரச்சினை இருப்பது இங்குதான்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள கோப்பொன்று  எவ்வாறு மேலேயும்  கீழேயும் செல்கிறது?  ஏழு எட்டு வருடங்களாக கோப்புகள் அலுமாரிகளுக்குள் எவ்வாறு சிக்கியிருக்கிறது ?பிரச்சினை இங்கு கிடையாதா? நான் இங்கு சொல்லும் விடயத்தை எவரும் தனிப்பட்ட ரீதியில் பார்க்காதீர்கள். சமூகத்தில் ஏற்பட்டுள்ள அவலத்தின் பாரதூரமான நிலையைத்  தான் நான் இங்கு கூறுகிறேன்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பும்  ஆவணம் எந்த நடவடிக்கையும் இன்றி எவ்வாறு இருக்க முடியும்?பிரச்சினை எங்குள்ளது? 

நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் ஒரு வழக்கு எவ்வாறு ஏழு,எட்டு மாதங்களாகத் தாமதமாகிறது?வேறு தினமொன்றைப் பெறுவதற்காக எவ்வாறு தாமதம் ஏற்படுகிறது? அனைவருக்கும் தமது நிறுவனத்தில் அவ்வாறான பிரச்சினை ஏற்படுவது தொடர்பில் காரணம் இருக்கலாம்.காரணம் கூற முடியும். தங்களிடம் சட்ட அதிகாரிகள் இத்தனை பேர் தான் உள்ளனர்.இத்தனை பேருக்கு குறைபாடுள்ளது. அதனால் தாமதம் ஏற்படுகிறது என சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கூற முடியும். இந்தளவு முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்றும் அவற்றை விசாரணை செய்து முறையாக வழக்குத் தொடர முடியாதுள்ளது என்றும்   குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கூற முடியும். இலஞ்ச ஊழல் திணைக்களத்திற்கும் அதே விடயத்தை கூற முடியும். சட்டமா அதிபர் திணைக்களமும் அதே போன்று கூறலாம். ஆனால் பிரச்சினை இங்குள்ளது. பிரச்சினை எமக்கு வெளியில் உள்ளது என யாராவது நினைத்தால் இல்லை, பிரச்சினை எம்மில் தான் உள்ளது.

நாம் அனைவரும்  நேர்மையாக முயலாவிட்டால் 'முன்மாதிரியான முன்னோடிகளாவோம்' என்று கூறும் எம்மில் தான் பிரச்சினை உள்ளது. பிரச்சினை இங்கு தான் உள்ளதென்றால்  பொதுமக்கள் எவ்வாறு அதற்குப் பொறுப்புக் கூற முடியும் ?பிரச்சினை இங்கென்றால்  லஞ்சம் , மோசடியை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? 

முதலில் நாம் எமது மனச்சாட்சியிடம் வினவ வேண்டும். அரசியல் அதிகாரம் என்ற வகையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முழுமையாகவும் நேர்மையாகவும்  இந்த மோசடிகளை ஒழிக்க பயன்படுத்துவேன் என நான் உங்களுக்கு  உத்தரவாதம் அளிக்கிறேன். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

ஆனால் எனக்கு இருக்கும் எல்லைகள் குறித்து நான் அறிவேன். அரசியல் அதிகாரத்திற்கான தலைமைத்துவத்தை எனக்கு வழங்க முடியும்.தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்கலாம்.தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க முடியும். ஆனால் யார் அவற்றை மேற்கொள்ள வேண்டும்? அவற்றை இங்குள்ள நீங்கள் தான் செய்ய வேண்டும்.

நாம்  தற்பொழுது 115 ஆவது இடத்தில் இருக்கிறோம். ஆனால்  சரியான தகவல்கள் இல்லாததால் தான் அந்த மட்டத்தில் இருக்கிறோம். சரியான தகவல்களைப் பெற்றால் அதனை விட மோசமான நிலை இருக்கும். அண்மைக்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  சம்பவங்கள் தொடர்பில் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் ஒன்று தான் அமெரிக்க சி.ஜ.ஏ உறுப்பினரான இமாம் சுபேறு  சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டார். அந்த விசாரணையின் போது, அவருக்கு இலங்கை மத்திய வங்கியினால் 6 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இலங்கை மத்திய வங்கி தொடர்பாக அமெரிக்காவில் வழங்கொன்று விசாரிக்கப்படுகிறது.

விமானக் கொள்வனவின் போது எயார்பஸ் நிறுவனமொன்று லஞ்சம் வழங்கியது தொடர்பில்  இங்கிலாந்து  மேல் நீதிமன்றத்தில்   வழக்கு விசாரணையொன்று நடைபெற்றது.  அமெரிக்காவும், பிரான்சும் இங்கிலாந்தும் ஒன்றிணைந்து இந்த விசாரணையை நடத்தின. இந்த விசாரணையில் இலங்கை  எயார் லங்காவிற்கு   எயார்பஸ் நிறுவனத்தினால் இலஞ்சம் வழங்கப்பட்டது அம்பலமாகியது.

தூதுரகத்திற்கு அலுவலகம் ஒன்றைப் பெறுவது தொடர்பில் சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமெரிக்காவில்   விசாரிக்கப்பட்ட வழக்கில்  இலங்கை தூதுவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.

அதே போன்று பென்டோரா விசாரணைப் பத்திரம் வெளியிடப்பட்ட போது  அதில் இலங்கையர்களின் பெயர்களும் இருந்தன. பெனாமா விசாரணை பத்திரம் வெளியில் வந்த போது இலங்கையர்களின் பெயர்களும் அதில் இருந்தன. ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குகையில்  அவுஸ்திரேலிய நிறுவனமொன்று இலஞ்சம் வழங்கியது தொடர்பிலும் விசாரணை நடைபெற்றது.

எமது நாட்டில் நடந்தவற்றை சற்று ஓரமாக வைத்தாலும்  இப்படித்தான் எமது நாட்டில் நடந்துள்ளது. ஆனால்  இது தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தி  தவறு செய்தோருக்கு நீதிமன்றத்தின் முன் நிறுத்தி நாம் தண்டனை வழங்கியுள்ளோமா? நாம் அனைவரும் இந்த நாட்டுப் பிரஜைகளினால் வழங்கப்பட்ட அதிகார மூலத்தின் ஊடாக அதிகாரம் பெற்றிருக்கிறோம். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில், உழைப்பில் இருந்து எமக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்குப் பதிலீடாக நாம் அவர்களுக்கு நீதியை நிலைநாட்டியிருக்கிறோமா? இல்லை . 

கிடைத்துள்ள அதிகாரத்தை  மீண்டும் மீண்டும்  மோசடியில் ஈடுபடவே அதிகமாக  பயன்படுத்துகிறோம். மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். மக்கள் எமக்கு சலுகைகள் வழங்கியுள்ளனர். சம்பளம் வழங்கியுள்ளனர்.ஆனால்  அவற்றைப் பெறுவோர்  இந்த  அதிகாரத்தையும் தமது சலுகைகளையும்  மீண்டும் மீண்டும் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவதற்காக பயன்படுத்துகின்றனர். இது தான் யதார்த்தம்.அவ்வாறு இல்லையா?

நியாயத்தை நிலைநாட்டவே  அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த அதிகாரத்தை அநீதிக்காகப் பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட நன்மைகளுக்காக பயன்படுத்துகின்றனர். சொத்துக்களை சேகரிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அவ்வாறானால் இந்த அதிகாரத்தினால் என்ன பயனுள்ளது?

எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மக்களினால் வழங்கப்பட்ட அதிகாரம். அதன் ஊடாக மக்களுக்கு நீதி , நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என உண்மையாக உறுதி பூண வேண்டும். அவ்வாறின்றி எத்தனை நிறுவனங்கள் உருவாக்கினாலும் சட்டங்கள் இயற்றினாலும் பலனில்லை.

சட்டம் பயனற்றது என்று நான் கூறவில்லை. நிறுவனங்களை பலப்படுத்தத் தேவையில்லை என்று நான் கூறவில்லை.சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் மேலும் சட்டங்கள் இயற்றுவோம். நிறுவனங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் மேலும் நிறுவனங்களை உருவாக்குவோம்.ஆனால் எத்தனை சட்டங்கள் உருவாக்கினாலும் எத்தனை நிறுவனங்கள் அமைத்தாலும்  அவற்றில் அதிகாரம் பெற்றுள்ளவர்கள் தமக்குறிய பொறுப்புகளை நிறைவேற்றத் தயாரில்லை என்றால் அவற்றினால் பயனில்லை. பலர் தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததையே நான் எனது காலப்பகுதியில்  கண்டுள்ளேன்.

தனது பொறுப்பை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்திருந்தால் 7 வருடங்களாக கோப்பு ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடங்கிக் கிடக்கத் தேவையில்லை. சில கோப்புகள் இழுப்பறைக்குள் வைத்து பூட்டிய நாளில் இருந்து திறக்கப்படாமல் இருக்க வாய்ப்பில்லை.  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆவணமொன்று பக்கங்கள் சிதையும் வரை விசாரணை நடத்தப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. அது சட்டத்தின் பிரச்சினையோ நிறுவனத்தின் பிரச்சினையோ அல்ல.   தனக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை தானே துஷ்பிரயோகம் செய்வதாகவே நான் கருதுகிறேன். அதனை தடுப்பதில் நாம் தோல்வியுறும் வரை எமக்கு இந்தச் செயலில் வெற்றி கொள்ள முடியாது.

2021 ஆம் ஆண்டில் 69 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது . அதில் 40 வழக்குகள் வாபஸ்  பெறப்பட்டுள்ளன. 69 வழக்குகளில் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.பிரசித்தமான மல்வானை காணி வழக்கில்   சாட்சிகள் அழைக்கப்படாமல் நிறுத்தப்பட்டது ஏன்? சில வழக்குகளில் பரிசோதனை அதிகாரிகள் அவ் வழக்கின் சாட்சியாளர்களாக குறிப்பிடப்படாமைக்கான காரணம் என்ன? சானி அபேசேகர இதற்குச் சான்றுபகர்வார். அவர் முற்றாக விசாரணை அதிகாரியாவார். ஆனால் வழக்கில் அவர் சாட்சியாளர் அல்ல.  எப்படி இவ்வாறு நடக்கும்??

2022 இல் 89 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு அதில் 45 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன. ஏன்? எது நாட்டு பிரஜைகளுக்குப் பொறுப்புக் கூறுவதாக இருந்தால் இதற்கான காரணத்தை நாம் கூற வேண்டாமா? குறித்த  வழக்கின் விசாரணை அதிகாரி அவ் வழக்கின் சாட்சியாளராக இல்லாமல் இருப்பது எதனால்? நாம் மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோமாயின் நாம் விளக்கமளிக்க வேண்டும். சில வழக்குகளில் சாட்சியாளர்களை அழைக்காமல் வழக்குகளை மீளப் பெற அனுமதிப்பது எதனால்? நாம் மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோமாயின் நாம் விளக்கமளிக்க வேண்டும். நாம் வழக்குகளை மீளப் பெற்றால் ஏன் மீளப் பெற்றோம் என மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். ஆவணங்கள் 7,8 வருடங்களாக இழுப்பறைக்குள் பூட்டப்பட்டு கிடந்தால் ஏன் அவ்வாறு பூட்டப்பட்டு கிடக்கிறது என நாம் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டாமா?

எமது இந்த முழு தேகமும் கட்டமைப்பாக உடைந்து விழுந்துள்ளது.  மீண்டும் எமது நாட்டை கட்டியெழுப்புவதாயின் இந்த முழுக் கட்டமைப்பையும் மீளமைக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் சிறு சட்ட சீர்த்திருத்தங்கள் மூலம் நிறுவன மீளமைப்புகள் மூலம் மாத்திரம் இதனை முழுமையாக செய்ய முடியாது. அதற்கு எனது 5 வருடங்களையும் செலவழிக்க முடியும். சில சட்டங்களை உருவாக்கி, சில நிறுவன கட்டமைப்புகளை மீளமைத்துவிட்டு 5 வருடங்களில் என்னால் சென்று விடமுடியும். ஆனால் மாற்றம் வேண்டும் எனில் ஒட்டுமொத்த முறைமையையும் சீரமைக்காமல் இவ் வெற்றியை அடைய முடியாது. தனிப்பட்ட ரீதியில் இவ் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சீரமைத்து இந் நாட்டை ஆரோக்கியமான   நாடாக மாற்ற நான் முயற்சிகளை மேற்கொள்கின்றேன். 

இச் சந்தர்ப்பத்தில் நாம் இதனை மேற்கொள்ள தவறினால் எம் நாட்டு மக்கள் கனவில் கூட ஆரோக்கியமான நாடொன்றை காண மாட்டார்கள் என நினைவில் கொள்ளுங்கள்.  2024 ஆம் ஆண்டில் எமக்கு கிடைக்கப்பெற்ற பெரும்பான்மையில் அம் மக்களது எதிர்ப்பார்ப்புகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்ற நாம் தவறினால், எமது மக்கள் கனவில் கூட நல்ல சிறந்த நாடொன்றைக் காண மாட்டார்கள். 2024  மக்கள் ஆணை ஊடாக மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் எமது மக்கள்  கனவில் கூட நல்ல விடயங்களைக் காணமாட்டார்கள்.

வடக்கு,கிழக்கு, சிங்கள ,தமிழ், முஸ்லிம் ,வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஓரிடத்தில் கூடி நல்ல நோக்கம் நல்ல எதிர்ப்பார்ப்பிற்காக ஆட்சியொன்றை அமைத்துள்ளார்கள்.அவ் நோக்கம் அவ் எதிர்ப்பார்ப்புகளை நாம் நிறைவேற்றத்  தவறினால் மீண்டும் மக்கள் கனவில் கூட நல்ல நாள் ஒன்றை பற்றி நினைக்க மாட்டார்கள். 

அதனால் இக் காரியத்தை செய்து முடிப்பதற்கான கடமை எமக்கு உள்ளது. அதனால்  இக் காரியத்தை நிறைவேற்றுவதற்கு தனிப்பட்ட ரீதியில் எனக்கும் எனது அரசிற்கும் கொடுக்கப்பட்டுள்ள பணியை நாம் சரியாக நிறைவேற்றுவோம். ஆனால் உங்கள் ஒத்துழைப்பும் அதற்கு அத்தியாவசியமானது. விசாரணை மேற்கொள்ளும் நிறுவனங்கள், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனங்கள் அவ் விசாரணைகளை மேற்கொண்டு முறையாக தீர்ப்பு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக முறையாக ஒத்துழைப்பு வழங்காவிடில் எமக்கு இன்னும் பல தசாப்தங்களுக்கு ஊழல் எதிர்ப்பு தினத்தை கொண்டாட முடியும். நாம்  அனைவருக்கும் நிறைவான மனதுடன்  அழகாக அமர்ந்து ஊழல் எதிர்ப்பு தினத்தை கொண்டாடி கைத்தட்டலுடன் வெளியேறி செல்ல முடியும். 

ஆனால் எம்மால் மாற்றத்தினை ஏற்படுத்தக் முடியுமாயின் அடுத்த ஆண்டில் எம்மால் இங்கு ஏதேனும்  செய்ய முடியுமாயின் இதனை வெற்றிபெற்றதாக அனுஷ்டிக்கலாம்.  எமது தலைவர் கூறியபடி 2012 இல் 40 புள்ளிகள் காணப்பட்டது. அது 2024 இல் 34 ஆக குறைவடைந்துள்ளதாயின் நாம் ஏன்  இந்தத் தினத்தை இங்கு  கொண்டாட வேண்டும்?  அங்கு எமக்கு கொண்டாட என்ன இருக்கிறது?? ஊழலுற்ற நாடாக முன்செல்கையில் எம்மால் டிசம்பர் 9 ஆம் திகதி கொண்டாட முடியுமா?. 

2012 இல் இருந்து கொண்டாடுகிற போதும்  ஒவ்வொரு வருடமும்  இருக்கும் இடத்தை விட மோசமாக மோசடி  உயர்ந்துள்ளது. நாம் டிசம்பர் 9 ஆம் திகதி கொண்டாடுகிறோம்.ஆனால்  அந்தத் தினத்தினால் அன்றி அந்தத் தினத்தில் உள்ள  எதிர்பார்ப்பிற்கு எந்தளவு நியாயம்  செய்துள்ளோம் என்பதிலே  கொண்டாடுவதற்கான உரிமை அடங்கியுள்ளது. அவ்வாறின்றி  அடுத்த வருடம் இதே போன்று டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கொண்டாடுவதில் பயனில்லை.

புதிய எதிர்பார்ப்பிற்காகவும் முக்கியமாக திருப்பத்திற்காகவும் தான் கொண்டாடுவதாக இருந்தால்  அதனை அந்த ஆழத்தில் இருந்து கொண்டாட வேண்டும். அதனால் அடுத்த வருடம் கொண்டாடும் போது பிரஜைகளுக்கு நம்பிக்கையான செயற்பாடுகள் நடைபெற்றால் தான்  அது தொடர்பில் பிரஜைகளுக்கு  கௌரவமும் பெறுமதியும் ஏற்படும். 

உங்களுக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் குறித்து நான் அறிவேன். ஊர்,பெயர் விபரங்கள் எனக்குத் தெரியும்.அந்த முறைப்பாடுகள் செய்யப்பட்ட காலம் தொடர்பில் அறிவேன். அந்த முறைப்பாடு களுடன் தொடர்புள்ள நபர்கள்  தொடர்பில் ஓரளவு தெரியும். நான் இன்னும் கோப்புகளை முழுமையாகப் பார்க்கவில்லை.ஆனால் கோப்புகளின் எடை கூடுவதும் குறைவதும் அதில் உள்ள நபரின் பெயரின் அடிப்படையிலே தீர்மானிக்கப்படுகிறது என்றால் இதில் என்ன பிரயோசனம் உள்ளது.

குறைந்த பட்சம் இந்தப் பொருளாதாரத்திற்கு பிரதான காரணமாக இருந்த முக்கியமான வற்றையாவது நாம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். இத்தவெல பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாக இருந்த போது நான் பாராளுமன்றத்தில் ஒருதடவை இது தொடர்பில் உரையாற்றினேன்.

ஒரு வருடத்தில்  இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் கிராம சேவகர் ஒருவருக்கும் எழுது வினைஞர் ஒருவருக்கும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும்  இன்னும் இருவருக்கும்  தான் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது. சட்டம் சிலந்தி வலையைப் போன்று தான் செயற்பட்டுள்ளது. சிறிய விலங்குகள் சிக்கிக் கொள்ளும். பெரிய விலங்குகள் சிலந்தி வலையை கிழித்துக் கொண்டு தப்பிவிடும்.அவ்வாறு நடப்பதை இந்த நாட்டுப் மக்கள் அறிவார்கள். என்னைவிட சட்டம் தொடர்பில்  மிகுந்த அனுபவம் உள்ள,அந்தத் துறையில் பணியாற்றிய  நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் சட்டம் செயற்படுத்தப்படுவதைப் போன்றே சட்டம் நியாயமாக  நிலைநாட்டப்படுகிறது என மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் மத்தியில் அவ்வாறான நம்பிக்கை கிடையாது என நான் கருதுகிறேன்.

அதனால், நீதியை நிலைநாட்ட தாமதிப்பதும் ஒரு வகையில் நீதியை நிலைநாட்டப்படாமை என்றே நான் கூறுவேன். நீதியை மிக விரைவில் நிலைநாட்டுவதே நீதிக்கு செய்யக்கூடிய நியாயமாகும். நீதியை நிலைநாட்டத் தாமதிப்பதும் நீதி நிலைநாட்டாமை என்றே நாம் கருதுகிறோம்.எனவே நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளதாக நம்புகிறோம். நாம் 

நமக்கு நியாயமான இந்த பணிக்கு எந்த அளவில் ஈடுகொடுக்க போகிறோம் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

உங்கள் நிறுவனங்கள், உங்கள் பணிகள் உங்கள் சுய விருப்பத்தின் பேரில் மாத்திரம் சரிவடையவில்லை. இயற்கையாக நடந்த காரணங்களினால் இந்த நிறுவனங்கள் வீழ்ச்சியடையவில்லை. எமது நாட்டின் வெறுக்கத்தக்க அரசியல் கலாசாரமே இந்த அனைத்து வீழ்ச்சிக்கும் காரணமாகும். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்த பணிப்பாளர் ஒருவரை ஒரே இரவில் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்த வரலாறு நினைவில் உள்ளதா?. குருணாகலை சேர்ந்த ரணசிங்க என்பவரே அவ்வாறு அழைக்கப்பட்டார் என்று நினைக்கிறேன்.ஒரே இரவில் அவர் அழைப்பிக்கப்பட்டார். ஒரு அமைச்சர் தொடர்பிலான விசாரணையை ஆரம்பிக்குமாறு கூறியமைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். எமது நாட்டிலிருந்து வெறுக்கத்தக்க அரசியல் எமது நாட்டின் சகல நிறுவங்களிலும் காணப்பட்ட சாதகமான பெறுமதிகளை தூசியாக்கியுள்ளது. அதனால் நிறுவன கட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எல்லா நிறுவனங்களும் தமக்கான அதிகாரங்கள் தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளன. ஒவ்வொரு நிறுவனங்களையும் நிர்வகிப்பவர்களுக்கு அந்த நிறுவனத்தை நடத்திச் செல்பவர்களுடைய பொறுப்புகள் கரைத்துவிடப்பட்டுள்ளன. ஏன்? அரசியல் கலாசாரத்தினால் தான் அவ்வாறு நடந்துள்ளது. 

அதனால் நீதிபதி  கூறியது போல ஓரிரு வருடங்களில் இவற்றை முழுமையாக மாற்றிவிட முடியும் என்றும் நாம் நினைக்கவில்லை. ஆனால் நாம் நல்லதொரு முயற்சியை மேற்கொள்வோம். அடுத்த தலைமுறைக்கு அந்தப் பொறுப்பை கொடுக்க மாட்டோம். எமது தலைமுறை அதனை சாத்தியப்படுத்திக்கொள்ள போரடியவர்களாக, மாற்றத்துக்காக   போராடியவர்களாக எமது பணியை நிறைவு செய்யும். எமது காலத்திலேயே இதனை நிறைவுக்கு கொண்டு வர எதிர்பார்க்கிறோம். அரசாங்கம் என்ற வகையில் மாற்றத்திற்கான துவக்கத்தை ஏற்படுத்த நாம் தயார்.

இது தொடர்பில் முக்கிய பொறுப்புள்ள குழு  இங்குள்ளது. அவர்களிடமும் ஒத்துழைப்பை கோருகிறேன். இங்கு கூடியிருக்கும் நாம் இதனை செய்யாவிட்டால் தூரப் பிரதேசமான தெஹியத்தகண்டியவில் வசிக்கும் விவசாயியா இதைச் செய்வார்? இன்றேல் கிராமத்திலிருக்கும் சாதாரண பிரஜையால் அதனை செய்ய முடியுமா? அந்தப் பணியை நாமே செய்ய வேண்டும். இந்த பணியை செய்வதற்கு  நாம் தலையீடு செய்யாவிட்டால் எவரும் இதனைச் செய்யப்போவதில்லை. 

அதனால் உங்கள்  மீது சார்ந்துள்ள இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காகவும்  அடுத்த வரும் டிசம்பர் 09 ஆம் திகதி நாம்  இந்த நாளை பெறுமதி சேர்த்துக் கொண்டாடுவதற்காகவும் அனைவரும் பாடுபடுவோம் என்று கூறி நிறைவு செய்கிறேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக...

2025-01-24 16:53:17
news-image

புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து...

2025-01-24 22:22:24
news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17