(நா.தனுஜா)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனித உரிமைகள்சார் விவகாரங்களைப் பொறுத்தமட்டில் மிகமோசமாகவே செயற்படுவார் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. இருப்பினும் தற்போதைய அரசாங்கம் இவ்விடயத்தில் சர்வதேசத்துக்கு 'நல்லவர்கள்' போல ஒரு முகத்தைக் காண்பித்துக்கொண்டு, மறுபுறம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதையே இக்குறுகிய காலத்துக்குள் அவதானிக்கமுடிவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விசனம் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுடன் ஒப்பிடுகையில் மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை திருப்தியளிக்கிறதா எனவும், அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டிய கரிசனைக்குரிய மனித உரிமை பிரச்சினைகள் எவையென்றும் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'அரசாங்கம் உடனடியாகக் கவனம்செலுத்தவேண்டிய மனித உரிமைகள்சார் பிரச்சினையில் பிரதானமானது பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கமாகும். தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என உத்தரவாதமளித்திருந்த அவர்கள், தேர்தல் முடிவடைந்தவுடன் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறார்கள். சட்டவாட்சி என்று வருகிறபோது, இந்நாட்டில் தான் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது என்பது குறித்து ஒவ்வொரு பிரஜைக்கும் போதிய தெளிவு இருக்கவேண்டும். அதனூடாகவே அப்பிரஜை தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லை எதுவென்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயற்படுவார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஊடாக விதிக்கப்பட்டிருக்கின்ற அந்த எல்லை மிகப்பரந்துபட்டதாக இருக்கிறது. ஆகையினாலே இச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும், அவசியமேற்படின் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவரவேண்டும் என்றும் சர்வதேச சமூகம் வலியுறுத்தியிருக்கிறது' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனித உரிமைகள்சார் விவகாரங்களைப் பொறுத்தமட்டில் மிகமோசமாகவே செயற்படுவார் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்ததாகக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், இருப்பினும் தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்துக்கு 'நல்லவர்கள்' போல ஒரு முகத்தைக் காண்பித்துக்கொண்டு, மறுபுறம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதையே இக்குறுகிய காலத்துக்குள் அவதானிக்கமுடிவதாக விசனம் வெளியிட்டார்.
அதேவேளை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகல அரசியல்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், அரசாங்கத்தினால் இதுவரை இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான நகர்வுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
மேலும் மனித உரிமைகள் எனும்போது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அதனுள் உள்ளடக்கமுடியும் எனத் தெரிவித்த அவர், இருப்பினும் அவ்வுரிமைகளை நிராகரிக்கும் போக்கினையே தற்போதைய அரசாங்கம் கடைப்பிடித்துவருவதாகவும், தாம் இனவாதிகள் இல்லை என்று அவர்கள் கூறிக்கொண்டாலும், இனவாதிகள் போன்றே செயற்படுவதாகவும் அதிருப்தி வெளியிட்டார்.
இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தேர்தல் பிரசாரத்தின்போது மனித உரிமைகள் சார்ந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும், இருப்பினும் புதிய அரசாங்கம் பதவியேற்று மிகக்குறுகிய காலமே கடந்திருப்பதனால், அவர்களுக்குரிய கால அவகாசத்தை வழங்கவேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் இன்றைய தினம் (10) தாம் ஒழுங்குசெய்திருக்கும் நிகழ்வில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்தவேண்டிய மனித உரிமைகள்சார் கரிசனைக்குரிய 10 விடயங்கள் குறித்து நினைவுறுத்தவிருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM