(நா.தனுஜா)
ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து, கடந்தகாலத்தில் இயங்கிவந்த உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளன.
நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூல வரைபைத் தயாரிப்பதற்குமென கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகமொன்று நிறுவப்பட்டு இயங்கிவந்தது.
மேற்குறிப்பிட்ட பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய ஆளணியுடன் இயங்கிவந்த இச்செயலகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பிராந்திய மட்ட அதிகாரிகள், புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுமார் 6 மாதங்களுக்கும் மேற்பட்ட காலம் பல சுற்றுக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.
அச்செயலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும், கருத்தறியும் கலந்துரையாடல்களிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெருமளவுக்கு உள்வாங்கப்படவில்லை எனவும், செயலகத்தினால் முன்மொழியப்படும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை வழங்கக்கூடிய பொறிமுறைகள் உள்வாங்கப்படவில்லை எனவும பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும் இவற்றுக்கு அப்பால் கலாநிதி அசங்க குணவன்ச தலைமையிலான இடைக்கால செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையில் உண்மைக்கும், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு சட்டமூலம்' கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதனையடுத்து பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன்கூடிய இறுதி வரைபு முதலாம் வாசிப்புக்காக கடந்த ஓகஸ்ட் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவானதையடுத்து, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி அசங்க குணவன்ச உடனடியாக இராஜினாமா செய்தார்.
அதனைத்தொடர்ந்து ஓரிரு தினங்களில் புதிய அரசாங்கத்தின் கொள்கைத்தீர்மானத்துக்கு அமைவாக இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதாக அறிவித்து, அச்செயலக ஊழியர்கள் சகலருக்கும் அரசாங்கத்தினால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டதை அடுத்து, அந்த இடைக்கால செயலகத்தின் பணிகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த இடைக்கால செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைபு மற்றும் அதனுடன் தொடர்புடைய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வினவியபோது, தாம் பணிகளை ஆரம்பித்து இரண்டு வாரங்களே பூர்த்தியடைந்திருப்பதாகவும், எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய கோப்புகளை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அதுபற்றி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM