ஐ.பி.எல்.தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய பூனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

தொடரின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடிவரும் மும்பை அணி இவ்வருடம் பூனே அணியுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை அந்த அணியை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

நேற்றைய போட்டி மும்பையின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி பூனே அணி சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய அஜின்னே ரஹானே 56 ஓட்டங்களை பெற அடுத்து அடுத்து களத்துக்கு வந்த டிருபாதி மற்றும் ஸ்மித் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த டோனி மற்றும் திவாரி சிறப்பாக துடுப்பெடுத்தாட பூனே அணி 20 ஓவர்களி நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

டோனி அதிரடியாக  40 ஓட்டங்களை குவிக்க, திவாரி நிதானமாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களை குவித்தார்.

மும்பை அணியின் பந்துவீச்சை பொருத்தவரையில் லசித் மலிங்க 14 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கட்டினை கைப்பற்றினார்.

இந்நிலையில் 163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு, 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை அணி சார்பில் தனியொருவராக நிலைத்தாடிய பார்த்திவ் பட்டேல் மாத்திரம் 52 ஓட்டங்களை பெற, ஏனைய வீரர்கள்  அணிக்கு ஏமற்றமளித்து ஆட்டமிழந்தனர்.

பூனே அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாசிங்டன் சுந்தர் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

அரையிறுதியில் வெற்றிபெற்ற பூனே அணி இறுதிப்போட்டிக்கு  தகுதிப்பெற்றுள்ளதுடன், தோல்வியடைந்துள்ள மும்பை அணி இன்று நடைபெறவுள்ள கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் வெற்றிபெறும் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.