இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநரான இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட “குறை செலவு நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் 2018 – 2037 (Least Cost Long Term Generation Expansion Plan (LCLTGEP) 2018-2037)” தொடர்பில் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டிற்குப் பாதை அமைத்துள்ளது.

இந்த விரிவாக்கத் திட்டமானது(LCLTGEP), இலங்கை மின்சார சபையால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய மின் விரிவாக்கத் திட்டமிடற் கற்கைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே 2018-2037 எனும் காலப்பகுதிக்காகத் தொகுக்கப்பட்டது.

எதிர்காலத்தில் எழக்கூடிய மின் தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் அனுமதி கோரி இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான திரு. தம்மித்த குமாரசிங்க,

“இந்த குறை செலவு நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டமானது(LCLTGEP) தேசத்தின் மிக முக்கிய திட்டங்களுள் ஒன்று ஆகும். நாட்டின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான மின் தேவையை, குறைந்த செலவில் பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது. 

கொள்கை ஆக்குநர்கள் தேசிய கொள்கை நோக்குகளுடன் இயைந்ததாக கொள்கையை ஆக்கும் போது உதவக்கூடிய வழிகாட்டியாக இது சேவையாற்றும்.” என்று தெரிவித்தார்.

”இது பற்றி தங்கள் கருத்துகளை பொதுமக்களும் ஆர்வமுடைய தரப்பினரும் வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதன் ஊடாக, முடிவு எடுக்கும் செயன்முறையில் அனைவரையும் பங்கெடுக்கை வைக்க முடியும் என நாம் நம்புகின்றோம். அனுமதிக்கும் செயன்முறையின் வெளிப்படைத்தன்மையினை அதிகரிக்க முடியும் என நாம் நம்புகிறோம்.” என்று கூறினார்.

2016ம் ஆண்டு முடிவில் இலங்கையின் சக்தித் தொகுதி கொண்டிருந்த ஒட்டுமொத்த பொருத்தப்பட்ட கொள்ள்ளவு அண்ணளவாக 4018 MW ஆகும். இது ஒட்டுமொத்த வெளிச்செலுத்தும் கொள்ளளவான 3538 MW மற்றும் வெளிச்செலுத்தாத மின்னிலையங்களின் கொள்ள்ளவான 516 MW ஆகியவற்றையும் உள்ளடக்கியது. வெளிச்செலுத்துகைக் கொள்ளவின் பெரும்பான்மை அளவு இ.மி.ச. இற்குச் சொந்தமானதாகும். இதில் 1379.25MW ஆனது நீராலும் 1510.7 MW அனல் மின் பிறப்பாக்கத்தாலும் உருவானது. 

மீதி வெளிச்செலுத்துகைக் கொள்ளளவு ஆனது தனியார் மின் உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமானது. 2016ம் ஆண்டில் இலங்கையானது 2453MW இனை அதிகபட்ச மின் தேவைப்பாடாகப் பதிவு செய்துள்ளது. அதே ஆண்டில் 14250GWh அளவு மின்சாரத்தை பிறப்பித்துள்ளது. 2018 -2022 காலப்பகுதியில் மின் பிறப்பாக்கத் தேவைப்பாடானது ஆண்டுக்கு 5.9 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தரவுகளின்படி, உச்ச தேவைப்பாடானது ஆண்டுக்கு 5.1 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சிக்கு அமைவாக, மின் கட்டமைப்பானது 2018 ஆம் ஆண்டின் ஆரம்ம்பத்தின் 4269 MW கொள்ளளவினைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், 2037 ஆம் ஆண்டின் இறுதியில் 10783 MW கொள்ளளவினைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த இருபது ஆண்டுகளில் உத்தேசிக்கப்பட்ட சக்திக் கலவையானது நீர், நிலக்கரி, களஞ்சியப்படுத்தப்பட்ட நீரினைப் பாய்ச்சல், ஒருங்கிணைந்த வட்டம், எண்ணெய் மற்றும் வாயு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்தத் திட்டத்திற்கு அமைவாக, குறை செலவு ஆனது முக்கியத்துவம் பெறுகின்ற அதே வேளை சுற்றுச்சூழலுக்கு நட்பாக விளங்கும் தன்மையானது மேலதிக பெறுமதியினைச் சேர்க்கின்றது.

தேசிய சேவை வழங்குநர் குறு நீர்ச்சக்தியின் 15MW, சூரிய சக்தியின் 160MW, உயிர்திடச் சக்தியின் 5MW, எண்ணெய் அடிப்படையான சக்தியின் 320MW அளவுகளை 2018ல் அதிகரித்து தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. 2018 – 2037 காலப்பகுதியிலிருந்து, இலங்கையானது தன் மின் பிறப்பாக்கத் தொகுதியில், பாரிய நீர்ச் சக்தி மூலம் 842MW, குறு நீர்ச் சக்தி மூலம் 215MW, சூரிய சக்தி மூலம் 1389MW, காற்று மூலம் 1205MW, உயிர்த்திடச் சக்தி மூலம் 85MW எண்ணெய் அடிப்படையிலான சக்தி மூலம் 425MW, இயற்கை வாயு மூலம் 1500MW, நிலக்கரிச் சக்தி மூலம் 2700MW ஆகிய கொள்ளளவுகளைச் சேர்க்கவுள்ளது.

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை(LCLTGEP) அமுற்படுத்துவதற்கு தேவைப்படும் மொத்த முதலீடு ஆனது, 14.568 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது இலங்கை ரூபாய்களில் 2,168.93 பில்லியன் ஆகும். இத்திட்டத்தின்(LCLTGEP) அடிப்படையில், பிற புதுப்பிக்கக்கூடிய சக்தி 2938MW மொத்தக் கொள்ளளவு அபிவிருத்தி செய்யப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும். இதன் மூலம் 900MW கொள்ளளவுடைய நிலக்கரி மின்னிலையத்தின் கட்டுமானம் தவிர்க்கப்படும். காபனீரொட்சைட்டின் வெளியீடு 17 வீதத்தால் குறைக்கப்படும். மேலதிக பெறுமதியான 153 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரச கொள்கைகளுக்கமைய உள்ளெடுக்கப்பட்டது.

இந்தத்திட்டமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் (www.pucsl.gov.lk) பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதன் அச்சிட்டவடிவத்தை ஆணைக்குழுவின் தகவல் மையத்தில் பெற முடியும். கருத்துக்களை அளிக்க ஆர்வமுடைய தரப்பினர் தபால், தொலை நகல், இணையத்தளம் அல்லது மின்னஞ்சல் (consultation@pucsl.gov.lk) மூலம் தங்களின் கருத்துகளை 06-06- 2017 ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கலாம். தபால் மூலம் அனுப்புவதற்கான முகவரி “இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6 ஆம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், 28, புனித மைக்கிள்ஸ் வீதி, கொழும்பு 3.”.

மேலும், இந்தத் திட்டம்(LCLTGEP) தொடர்பான வாய் மொழி மூல கருத்து அளிக்கை நிகழ்வு 15-06- 2017 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் இடம், காலம் தொடர்பான தகவல்கள் ஆர்வமுடைய தரப்பினருக்கு முன்கூட்டி அறிவிக்கப்படும்.