இலங்கையும் தென் ஆபிரிக்காவும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு குறிவைத்து விளையாடவுள்ளன

05 Dec, 2024 | 12:18 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (05) ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் டேர்பன் கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அமோக வெற்றியீட்டியதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆபிரிக்கா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

எனவே இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.

அதனையும் விட இலங்கை மட்டுமல்லாமல் தென் ஆபிரிக்காவும் முதல் தடவையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதியை பெறும் குறிக்கோளுடன் விளையாடவுள்ளதால் இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளது.

இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை அடைந்த போதிலும் இலங்கை அணியினால் எதிர்நீச்சல் போட முடியும் என்பது எத்தனையோ சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான லோர்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை, சில தினங்கள் கழித்து தி ஓவல் விளையாட்டரங்கில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்திருந்தது.

அதற்கு முன்னர் 2018இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அந்நிய மண்ணிலும் 2022இல் அவுஸ்திரேலியாவுக்கு எதராக சொந்த மண்ணிலும்   முதல் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இலங்கை, இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் வெற்றியீட்டி தம்மால் மீண்டெழ முடியும் என்பதை நிரூபித்திருந்ததை மறக்கலாகாது.

இந் நிலையில் இலங்கை அணியில் மீண்டெழக்கூடிய அனுபசாலிகள் பலர் இருப்பதாக துடுப்பாட்டப் பயிற்றுநர் திலின கண்டம்பி தெரிவித்துள்ளார்.

'எமது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெறுகின்றனர். இதற்கு முன்னர் இதேபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் மீண்டு வந்துள்ளனர். எமது அணியும் மீள் எழுச்சி பெற்றிருந்தது. வீரர்கள் மனதளவில் வீழ்ந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் போதியளவு நம்பிக்கையை ஊட்டிக்கொண்டிருக்கிறோம்.

'நாங்கள் இங்கிலாந்தில் இதே நிலையில்தான் ஆரம்பித்தோம். அத் தொடரில் நாங்கள் பின்னிலையில் இருந்தபோதிலும் கடைசியில் மீண்டெழுந்து வெற்றிபெற்றோம். எவ்வாறாயினும் இந்த டெஸ்ட் போட்டியில்  எமது வீரர்கள்  முதல் நாளிலிருந்தே மிகத் திறமையாக விளையாடவேண்டும்' என தில்லின கண்டம்பி தெரிவித்தார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலை

தென் ஆபிரிக்காவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை 5ஆம் இடத்திற்கு பின்தள்ளபட்டது. அதேவேளை தென் ஆபிரிக்கா 2ஆவது இடத்திற்கு தாவி உள்ளது.

ஆனால், மந்தகதி ஓவர் விகிதம் காரணமாக இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் மொத்த புள்ளிகளிலிருந்து தலா 3 புள்ளிகள் தண்டனையாக குறைக்கப்பட்டதை அடுத்து இலங்கை 4ஆம் இடத்தை அடைந்துள்ளது.

எவ்வாறாயினும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் பின்னிலை அடைந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது.

மறுபுறத்தில் போர்டர் - காவஸ்கர் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றி கொண்டதால் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான தென் ஆபிரிக்காவின் வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை அணியில் மாற்றம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் அணியில் இடம்பெறும் அதேவேளை பந்துவீச்சில் மாத்திரம் ஒரு மாற்றம் இடம்பெறவுள்ளது.

சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரியவுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் மிலன் ரட்நாயக்க இன்றைய போட்டியில் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக இணைத்துக்கொள்ளளப்படலாம் என அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

இங்கிலாந்தில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் மிலன் ரத்நாயக்க திறமையாக செயற்பட்டிருந்தார்.

மேலும் தென் ஆபிரிக்காவில் தான் திறமையாக பந்துவீசியுள்ளதால் இந்தப் போட்டியில் பந்துவீசவுள்ளதாகவும் அவர் கூறினார.

இது இவ்வாறிருக்க, தென் ஆபிரிக்க அணியில் உபாதைக்குள்ளான வியான் முல்டர், ஜெரால்ட் கோயெட்ஸீ ஆகிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக 18 வயதுடைய க்வேனா மஃபாக்கா, டேன் பெட்டசன் ஆகிய இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள் 

இலங்கை: திமுத் கருணராட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார.

தென் ஆபிரிக்கா: ஏய்டன் மார்க்ராம், டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், கய்ல் வெரின், மாக்கோ ஜென்சன், டேன் பெட்டசன், கேஷவ் மஹாராஜ், க்வேனா மஃபாக்கா, கெகிசோ ரபாடா. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்கொட்லாந்துடனான போட்டியில் அவசியமான வெற்றியை ஈட்டியது...

2026-02-15 07:41:54
news-image

நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் 3ஆவது...

2026-02-14 23:17:09
news-image

நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் அதிகூடிய...

2026-02-14 23:01:44
news-image

நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது...

2026-02-13 23:06:26
news-image

கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய...

2026-02-13 21:04:04
news-image

அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது...

2026-02-13 16:47:36
news-image

2026 உலக விமான சேவை கிரிக்கெட்...

2026-02-13 16:08:54
news-image

அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-13 15:50:31
news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04