ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1979இல் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அதிபயங்கரமானது. அது ஜனநாயகத்துக்கும் அடிப்படை உரிமைக்கும் எதிரானது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
பயங்கவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் கடந்த ஆட்சிக் காலங்களிலிருந்து பேசப்பட்டு வரப்படுகின்றன. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரமானது. அது பல அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கியது. சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியது. அப்பாவிகளின் உயிர்களையும் குடித்தது.
அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்காக சித்திரவதைகள் மூலமாக ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு உதவியது. பல தமிழர்களை நடைப்பிணங்களாக மாற்றியது.
மனிதகுலம் வெட்கித் தலை குனியக்கூடிய அனைத்து கொடூரங்களையும் அச்சட்டம் செய்தது. இப்படியான கொடூரச் சட்டம் தற்காலிகமாகவே கொண்டுவரப்பட்டது.
ஆனால், 45 ஆண்டுகளாக நிலையாக நிற்கிறது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளாகியும் அந்த சட்டத்தை நீக்க அதிகார வர்க்கத்தால் முடியவில்லை.
அண்மையில் ஆட்சிப்பீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப் போவதாக தேர்தல் பிரசாரங்களின்போது கூறியது.
அதனை செய்வதன் மூலமாக இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது.
அதனைச் செய்யாது தவிர்த்தால், பச்சை, நீலக் கட்சிகளின் பாதைகளில் பயணிக்கும் கட்சியாகவே சிவப்பு கட்சியும் அமைந்துவிடும்.
அதாவது ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
இதனை உணர்ந்து தேசிய மக்கள் சக்தி செயற்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாடு அழிவுப்பாதையை நோக்கியே சென்றது.
இதனை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளாவிட்டால், நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் ஜே.வி.பி.யினரின் உயிர்களையும் குடித்திருந்தது என்பதை தேசிய மக்கள் சக்தி நன்கறியும். அதிகார இருப்பால் அதனை மறக்க முடியாது. மறைந்த உறவுகளையும் நினைவேந்த தடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அடிப்படை உரிமைக்கு விரோதமானதாகும்.
அண்மையில் நினைவேந்தல் செயலால் மூன்று தமிழர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை கண்டனத்துக்குரிய விடயமாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதையில் சறுக்கல் ஏற்படக்கூடாது. கைதானவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM