ரொபட் அன்டனி
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வந்துகொண்டிருக்கின்ற சூழலில் மற்றுமொரு பொருளாதார ரீதியான ஆபத்து இலங்கையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவே எதிர்வுகூறப்படுகிறது. இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான ஒரு சர்வதேச சூழல் உருவாகி வருகின்றமையை நிபுணர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க ஏற்பாடாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். தொடர்ந்து நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ட்ரம்பின் பொருளாதார கொள்கை
அமெரிக்காவின் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள், ஒப்பீட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையில் பொருளாதார, சமூக விடயங்களே ட்ரம்பின் வெற்றியில் தாக்கம் செலுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ட்ரம்ப் பல்வேறு விடயங்கள் தொடர்பாக தேர்தல் காலத்தில் பேசினார். முக்கியமாக குடியேற்றவாசிகள் தொடர்பான கொள்கையை அவர் கடுமையாக விமர்சித்தார். அதாவது குடியேற்றவாசிகளால் அெமரிக்கா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற விடயங்களை அவர் முன்வைத்தார். அதேபோன்று அமெரிக்கர்களின் பொருளாதார தேவைகள், பணவீக்கத்தை குறைத்தல், ஏற்றுமதி, இறக்குமதியின் இடைவெளியைக் குறைத்தல், இறக்குமதிக்கு தீர்வைகளை விதித்தல் போன்றவைகள் தொடர்பாக ட்ரம்ப் பல்வேறு விடயங்களை தேர்தல் காலத்தில் முன்வைத்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகள் இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பது தொடர்பில் இங்கு ஆராய்வது மிக முக்கியமாக இருக்கின்றது.
இலங்கையை எப்படி பாதிக்கும்?
பிரச்சார காலத்தில் அமெரிக்காவின் ஏற்றுமதி-–இறக்குமதிக்கு இடையிலான பாதகமான வர்த்தக மீதியை குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்திருக்கின்றார். அதற்காக தீர்வைகளை விதிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது அமெரிக்க இறக்குமதிகளுக்கு அதிகளவு தீர்வைகளை விதிப்பதாகவே அவர் கூறுகிறார். இது இலங்கையை நிச்சயமாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
‘‘ட்ரம்பின் இந்தப் புதிய தீர்வை விதிப்புகள் நிச்சயமாக இலங்கையின் ஏற்றுமதியைப் பாதிக்கும். எனவே நாம் உடனடியாகவே இது தொடர்பாக மாற்று நடவடிக்கைகளை நாட வேண்டும். இலங்கை 25 வீதமான ஏற்றுமதி வருமானத்தை அமெரிக்காவிடமிருந்து பெறுகிறது. இது பாதிக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்’’ இவ்வாறு குறிப்பிடுகிறார் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ.
உண்மையில் என்ன நடக்கப் போகிறது என்பதை விவரமாகப் பார்க்க வேண்டிய தேவை காணப்படுகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட உலக நாடுகளுக்கு மூன்று ட்ரில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதேநேரம் கிட்டத்தட்ட 3.6 ட்ரில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்கிறது. அப்படி பார்க்கும்போது 0.6 ட்ரில்லியன் டொலர்கள் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவுக்கு பற்றாக்குறையாக வருகின்றன. அதனை சீர் செய்வதாக ட்ரம்ப் தேர்தல் காலத்தில் பிரசார காலத்தில் உரையாற்றியிருக்கின்றார். அதற்காக அவர் கையிலெடுத்திருக்கிற ஆயுதம் தீர்வைகளை விதிப்பதாக அமையும். அதாவது உலக வர்த்தகத்தின் மிக முக்கியமான ஆயுதமாக தீர்வைகள் காணப்படுகின்றன. தீர்வைகள் அதிகரிக்கும் போது ஒரு விளைவும் குறைக்கும் போது மற்றொரு விளைவும் பொருளாதாரத்தில் ஏற்படும். எனவே ட்ரம்ப் அமெரிக்காவுக்கு செய்யப்படுகின்ற இறக்குமதிக்கு தீர்வைகளை விதிக்கும் பட்சத்தில் அது நிச்சயமாக இலங்கையைப் பாதிக்கும். ஏன் என்பதை விபரமாக பார்க்க வேண்டியிருக்கிறது.
‘‘இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வர்த்தகக் கொள்கை நடவடிக்கைகளாக கணிசமான தீர்வை உயர்வுகளை மீண்டும் முன்மொழிகிறார். அமெரிக்காவின் தீர்வை கொள்கைகளில் ஏற்படும் இந்த சாத்தியமான மாற்றங்கள் இலங்கையின் ஏற்றுமதி தொழில்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையின் தனிப்பட்ட ஏற்றுமதி இலக்கில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா, அதன் மொத்த ஏற்றுமதியில் 23.6% ஆகும்.’’ இவ்வாறு இலங்கை கொள்கைகள் கல்வி நிறுவனத்தின் டாக்டர் அசங்க விஜேசிங்க மற்றும் மஜிதா செல்வலிங்கம் ஆகியோர் அண்மையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் அமெரிக்காவுக்கு வருடந்தோறும் கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் ஆடை உற்பத்திகள், இறப்பர், தேயிலை போன்றன உள்ளடங்குகின்றன. மிக முக்கியமாக ஆடைகளே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தனி நாடு என்ற வகையில் அமெரிக்காவுக்கு அதிகளவு உற்பத்திகளை இலங்கை ஏற்றுமதி செய்கிறது. அதேநேரம் அமெரிக்காவிலிருந்து இலங்கை கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்கள் அளவுக்கு வருடாந்தம் இறக்குமதி செய்கிறது. அப்படிப்பார்த்தால் பத்தில் ஒரு மடங்கு மட்டுமே இலங்கை இறக்குமதி செய்கிறது. மாறாக ஏற்றுமதி 10 மடங்கு அதிகமாக இருக்கின்றது.
எனவே ட்ரம்பின் நிர்வாகம் அடுத்த வருடத்திலிருந்து உலக நாடுகளில் இருந்தான அமெரிக்காவின் இறக்குமதியை குறைக்க முற்பட்டால் அல்லது தீர்வைகளை விதித்தால் அது இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருவேளை அவ்வாறு ஒரு தீர்மானத்தை எடுத்து இலங்கையில் இருந்தான இறக்குமதிகளை குறைத்தால் அது இலங்கைக்கு மிக நெருக்கடியான ஒரு சூழலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.
இது தொடர்பில் பொருளாதார நிபுணர் கலாநிதி கணேசமூர்த்தி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘’அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி இறக்குமதிக்கு தீர்வைகளை விதித்தால் அது நிச்சயம் இலங்கையைப் பாதிக்கும். காரணம், இலங்கை அதிகளவு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. உலக நாடுகள் இதற்கு தற்போது தயாராகி வருகின்றன. இலங்கை இது தொடர்பில் சிந்திக்கிறதா என்பது தெரியவில்லை. அதாவது, ஆடைகளையே இலங்கை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதற்கு பத்து வீதம் தீர்வை விதிக்கப்பட்டால் இலங்கை நிச்சயமாக பாதிக்கப்படும். அதாவது, இலங்கையானது அந்தத் தீர்வையும் சேர்த்து விலையை நிர்ணயித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால் அமெரிக்காவில் இலங்கையின் ஆடையின் விலை அதிகரிக்கும். அப்போது அங்கு அந்த விற்பனை குறைவடைய வாய்ப்பிருக்கிறது. மறுபுறம் இலங்கை அந்தத் தீர்வையை தான் ஏற்று விலையைக் குறைத்து ஏற்றுமதி செய்தால் அந்தப் பாதிப்பு இலங்கை ஏற்றுமதியாளர்களை வந்து சேரும்’’ என்று சுட்டிக்காட்டுகிறார்.
ஆடைத்துறை பாதிக்கப்படுமா?
கலாநிதி கணேசமூர்த்தி கூறுவதைப் போன்று, இலங்கை ஏற்றுமதியாளர்கள் தீர்வையை ஏற்று, விலையைக் குறைத்து ஏற்றுமதி செய்தால் அது இங்கு ஆடைத் தொழிற்சாலையில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழிலாளர்களின் நலன்புரி செலவுகள் குறைக்கப்படலாம், சம்பளம் குறைக்கப்படலாம், நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்படலாம், இலங்கைக்கான டொலர் வருகை பாதிக்கப்படலாம். இது போன்ற நெருக்கடிகள் இந்த விடயத்தில் ஏற்படும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அமெரிக்கா சீனாவிலிருந்தே அதிகளவு இறக்குமதிகளை செய்கிறது.
2023ஆம் ஆண்டின் அமெரிக்க புள்ளி விபரத்தின் பிரகாரம் அமெரிக்கா கிட்டத்தட்ட 3 ரில்லியன் டொலர்களுக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இது மொத்த இறக்குமதியின் மிக அதிகமான பங்காகும். எனவே சீனாவில் இருந்தான இறக்குமதிகளை இலக்கு வைத்தே ட்ரம்ப் நிருவாகம் தீர்வைகளை அதிகளவில் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 65 வீத தீர்வை விதிக்கப்படலாம். அப்படியானால் சீனாவிலுள்ள முதலீட்டு நிறுவனங்கள் வேறு நாடுகளை நோக்கி பயணிக்கலாம். குறிப்பாக அமெரிக்கா இந்தியாவிலிருந்தான இறக்குமதிகளுக்கு குறைந்தளவு தீர்வைகளை விதித்தால் சீனாவிலிருந்து முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி நகரும் வாய்ப்பும் காணப்படுகிறது.
இந்தியாவின் தயார் நிலை
இதனை புரிந்துகொண்டிருக்கின்ற இந்தியா தற்போது தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் விசேட பொருளாதார வலயங்களை உருவாக்கியிருக்கிறது. அந்தப் பொருளாதார வலயங்களின் பரப்பளவு லக்சம்பேர்க் நாட்டின் அளவுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு இந்த வாய்ப்பை இலங்கை பெற்றுக் கொள்ள முடியாதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அதற்கு இலங்கை வெளிநாட்டின் நேரடி முதலீட்டுக்கான சூழலை சரியான முறையில் அமைக்க வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள், ஊழலற்ற தன்மை, வரி கட்டமைப்பு, இலகுவான பிரவேச செயற்பாடுகள் என்பன இடம்பெறும் பட்சத்தில் மட்டுமே இலங்கை அவற்றை அடைய முடியும். அப்படியானால் இலங்கை அதனை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கிறது.
இலங்கையின் ஏற்றுமதி நிலை
இது இவ்வாறிருக்க அமெரிக்காவின் புதிய நிர்வாகம் ஒருவேளை இலங்கையிலிருந்த இறக்குமதிகளுக்கு தீர்வையை விதித்தால் அது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தைப் பாதிக்கும். ஏற்கனவே இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் ஒரு நெருக்கடியான நிலையிலே இருக்கின்றது. இலங்கையின் வருடாந்த இறக்குமதி செலவானது கிட்டத்தட்ட 22 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது. ஆனால் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாக இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வர்த்தக மீதியானது 10 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அதாவது நாம் ஏற்றுமதி செய்வதைவிட இறக்குமதி செய்வதற்கு 10 பில்லியன் டொலர்கள் அதிகளவில் கொடுக்கின்றோம். இந்த 10 பில்லியன் டொலர்களை தேடிக்கொள்வதே எமக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்து வருகிறது.
சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருமானம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி மற்றும் கடன்கள் போன்றவைகளூடாக இதனை நாம் சமாளித்துக்கொண்டிருக்கின்றோம். அது தவிர இலங்கை ஒவ்வொரு வருடமும் 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் கடன்களையும் செலுத்த வேண்டியிருக்கிறது. 2027 இலிருந்து கடன் செலுத்தவேண்டும். எனவே ஏற்றுமதி வருமானத்தை மேலும் நாம் அதிகரிக்க வேண்டுமே தவிர அதனை குறைக்க முடியாது.
புதிய ஏற்றுமதிகளுக்கு செல்வது அவசியம்
ஆனால் தற்போது ட்ரம்பின் நிர்வாகம் இலங்கையில் இருந்தான இறக்குமதியை குறைத்தால் அல்லது புதிய தீர்வைகளை விதித்தால் அது ஒரு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
‘‘இலங்கை புதிய உற்பத்திகளை நாட வேண்டும். பூகோள உற்பத்திச் சங்கிலியில் இணைந்துகொள்ள வேண்டும். இலங்கை வாகனங்களை இணைப்பு செய்து ஏற்றுமதி செய்வதில் பயனில்லை. மாறாக உலக உற்பத்தி செயற்பாட்டில் இலங்கை பங்கெடுக்க வேண்டும். அதுமாத்திரமன்றி இலங்கை அறிவுசார் வள ஏற்றுமதியில் சிறந்த இடத்தை அடைய முடியும். கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் இலங்கையின் மனிதவள சேவைகளை ஏற்றுமதி செய்ய முடியும். அதனை நோக்கி இலங்கை சிந்திக்க வேண்டும். முதலீட்டு சூழல்களை சரியான முறையில் உருவாக்க வேண்டும். அப்போது இந்த புதிய நிலைமைக்கு நாம் முகம் கொடுக்க முடியும்’’ இவ்வாறு கூறுகிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொருளாதார நிபுணர் டாக்டர் கணேசமூர்த்தி.
அந்தவகையில் இது எவ்வாறு நடைபெறப்போகிறது என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. காரணம் இலங்கை இந்த விடயத்தில் சுதாகரித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை ட்ரம்ப் நிர்வாகம் வெளிநாடுகளுக்கு அமெரிக்கா செய்கின்ற ஏற்றுமதிகளை அதிகரிக்கலாம். அந்த யுக்தியை கையாண்டால் அது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அது மேலும் இலங்கைக்கு சந்தர்ப்பங்களை கொடுக்கலாம்.
இந்த விடயத்தில் ஆய்வு ரீதியான, திட்டமிடல் ரீதியான நடவடிக்கை தேவையாக இருக்கின்றது. அரசாங்கம் இந்த விடயம் குறித்து மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
‘‘இலங்கை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பது அவசியமாகும். தொடர்ந்து ஒரு நாட்டுக்கான ஏற்றுமதியில் தங்கியிருக்காமல் இந்தியா போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதால் இலங்கைக்கு பயன்தருவதாக அமையும். இதற்காக புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளப்படுவதும் மிக அவசியமாகும். அத்துடன் ஏற்றுமதியை பல்வகைப்படுத்த வேண்டும். ஒரு சில பொருட்களிலேயே தங்கியிருக்காமல் ஏற்றுமதி பொருள் பல்வகைப்படுத்தலுக்கு பிரவேசிக்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமையை சமாளிக்க முடியும்’’ என்று குறிப்பிடுகிறார் பொருளாதார நிபுணர் ரொஹான் சமரஜீவ.
பொறுப்புக்கூறல்
இங்கு அனைவருக்கும் பொறுப்பு கூறல் என்பது மிக முக்கியத்துவமாக இருக்கின்றது. அதாவது இந்த நாட்டுக்கு சகல பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு மக்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒரு பொறுப்பு கூறல் இருக்கின்றது. அந்த பொறுப்பு கூறலில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மிக முக்கியமாக இருக்கின்றது. அதில் அரசாங்கம் இலங்கைக்கான ஏற்றுமதி வருமான அதிகரிப்பை உறுதி செய்ய வேண்டும். அதுவும் ஒரு அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலாகவே காணப்படுகிறது.
மாற்றுத்திட்டங்கள் அவசியம்
எனவே இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கும் சமாளிப்பதற்குமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதாவது ஏற்படவுள்ளதாக பொருளாதார நிபுணர்களினால் எதிர்வு கூறப்படுகின்ற இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி அதற்கேற்ற மாற்றுத் திட்டங்களை வகுப்பது அவசியமாகும். ஒருவேளை சீனாவிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறினால் அவற்றை இலங்கைக்கு உள்ளீர்ப்பதற்கான முயற்சிகள் சரியான முறையில் இடம்பெறுவது அவசியமாகும். அதாவது இவ்வாறு இலங்கையின் ஏற்றுமதிக்கு தாக்கம் ஏற்பட்டால் அது டொலர் உள்வருகையைக் குறைக்கும். டொலர் உள்வருகை குறையும் பட்சத்தில் டொலரின் பெறுமதி அதிகரிப்பதுடன் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கும். இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.
எனவே இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்காமல் மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டும். ஏற்கனவே 2022ஆம் ஆண்டு இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து தற்போது படிப்படியாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. இவ்வாறான பின்னணியில் மீண்டுமொரு நெருக்கடி ஏற்பட்டால் அதனை சமாளிக்க முடியாமல் போய்விடும். எனவே இது குறித்து திட்டமிடல்கள் அவசியமாகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM