முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களின் ஒழுங்குப்படுத்தல்களில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தபுரம், பேராறு, கற்சிலைமடு, சம்மளங்குளம், கூழாமுறிப்பு, மானுருவி, கருவேலங்கண்டல் ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. கரைதுறைபற்றில் மாமூலை கிராமம் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. பல கிராமங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. மாவட்டத்தில் வரட்சி நிலைமை அதிகரிக்குமானால் குடிநீர் நெருக்கடியும் கூடுதலாக உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.