(எம்.சி.நஜிமுதீன்)

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கமைவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச்  சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளடங்கலாக ஆறு பேரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். 

மேலும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் தமக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ளமையினால் பாராளுமன்ற உறுப்புரிமை வகிக்க தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மூன்றாம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது. 

அதனையடுத்து பாராளுமன்ற செயலாளர் நாயகம், கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்கு மற்றுமொருவரை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் விடுத்திருந்தார்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்ததையீட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கமைய நடவடிக்கை எடுப்பதை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.