தென் கொரியாவின் ஜியொஞ்சு உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற 10ஆவது ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரிடம் 26 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி அடைந்து இறுதி ஆட்ட வாய்ப்பை நழுவவிட்டது.

அரை இறுதிப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய சிங்கப்பூர் 58 – 32 என்று கோல்கள் அடிப்படையில் அமோக வெற்றிபெற்றது. 

இடைவேளையின்போது 27 – 17 என்ற கோல்கள் அடிப்படையில் சிங்கப்பூர் முன்னிலையில் இருந்தது.

இப் போட்டியின் ஒரு பகுதியிலேனும் இலங்கை அணியினால் 10 கோல்களைத்தானும் போட முடியாமல் போனதன் மூலம் இலங்கை அணி எந்தளவு மோசமாக விளையாடியது என்பது புலனாகின்றது.

பத்து நிமிடங்களைக் கொண்ட நான்கு ஆட்ட நேர பகுதிகளையும் முறையே 16 – 8, 11 – 9, 14 – 6, 17 – 9 என்ற கோல்கள் அடிப்படையில் சிங்கப்பூர் இளையோர் அணி தனதாக்கிக்கொண்டது.

இலங்கை சார்பாக கவீனா ராஜபக்ஷ 33 முயற்சிகளில் 24 கோல்களையும் ரஷ்மி பெரேரா 15 முயற்சிகளில் 8 கோல்களையும் போட்டனர். இவர்கள் இருவரும் கோல்களைத் தவறவிட்டமையும் இல்ஙகை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.