அபிலாஷனி லெட்சுமன்
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன், ஜே.சுஜீவகுமார்)
கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நாட்டிய கலா மந்திர் நடன கலாசாலையின் ஸ்தாபக இயக்குனர் “கலாசூரி” “கலைமாமணி” வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியும் ராஜேந்திரன் - வாசுமதி தம்பதியினரின் மகளுமான காயத்ரி ராஜேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு டெல்லியைச் சேர்ந்த பரதநாட்டிய கலை வல்லுனர் பத்மஸ்ரீ கீதா சந்திரன் பிரதம விருந்தினராகவும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் கௌரவ அதிதியாகவும், பிரின்ட் கெயார் பி.எல்.ஸியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெ.ஆர். ரவிந்திரன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டதுடன், அருட்சகோதரி அலெக்ஸான்ரா மென்திஸ் உட்பட பலர் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வுக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆடற்கலையின் அதிதியான நடராஜ பெருமானின் திருப்பாதங்களில் சதங்கைகளை வைத்து பூஜை நடாத்தி பரதநாட்டிய அரங்கேற்றத்தை ஆரம்பித்துவைத்தார், பிரம்ம ஸ்ரீ நாகராஜ குருக்கள்.
ஆடல் அரங்குக்கு கொழும்பு நாட்டிய கலா மந்திர் நடன கலாசாலையின் ஸ்தாபக இயக்குநர் “கலாசூரி” “கலைமாமணி” வாசுகி ஜெகதீஸ்வரன் நட்டுவாங்கம் நிகழ்த்தியதோடு, குரலிசைக் கலைஞராக “இசை முதுமணி” கலாநிதி அருணந்தி ஆருரன், மிருதங்கம் “லய விசாரத” ஸ்ரீ சண்முகலிங்கம் நாகராஜன், வயலின் “இசைக்கலைமணி” ஸ்ரீ.கேதீஸ்வரன் வேலதீபன், தாள தரங்கம் “விசாரத” ஸ்ரீ ரத்னம் ரத்னதுரை, புல்லாங்குழல் “சாஷ்திரபதி” ஸ்ரீ பிரியந்த தசநாயக்க மற்றும் வீணை “வீணை இசை கலைமணி” என்.எஸ் வகீஷன் ஆகியோர் இசை பங்களிப்பு வழங்கியிருந்தனர்.
காயத்ரி ராஜேந்திரன் நடன உருப்படிகள் ஒவ்வொன்றையும் அருமையாக ஆடல் அரங்குக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டியம் என்பது பரதநாட்டியத்தில் கதையை அடிப்படையாகக் கொண்டு கதாபாத்திரங்களை தனித்தனியாக சித்திரித்து ஆடும் ஆடல் முறை என்பதற்கு இணங்க புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம் , தேவாரம், வர்ணம் ஆகிய நடன உருப்படிகளை அழகிய அசைவுகளோடும் கதாபாத்திரங்களை தனித்தனியாக சித்திரித்து ஆடும் அரங்கேற்றத்தை காணக்கூடியதாக இருந்தது.
அத்தோடு, ஆங்கிக அபிநயங்களுடன் பாவங்களை முன்னிறுத்தி இறைவனுக்கு சமர்ப்பிக்கும் கீர்த்தனைகளாக “ஆடுகின்றான் அய்யன்...”, “கற்பனை என்றாலும்...” மற்றும் “விஷமக்கார கண்ணன்...” ஆகிய பாடல்களுக்கு இறைவனின் பல அவதாரங்களை தன் அபிநயங்களினூடாக ஆடியமை குறிப்பிடத்தக்கது.
அரங்கிலே ஆடப்பட்ட “புஸ்பாஞ்சலி” முதல் “தில்லானா” வரையிலான உருப்படிகளுக்கு நடன மங்கை காயத்ரி அரங்கில் வழங்கிய ஒவ்வோர் அசைவுகளும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காணப்பட்டது.
நவரசங்களையும் முகபாவனையுடன் முன்னிறுத்தி தன் ஆடற்கலையினை அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.
அரங்கில் காயத்ரியின் நடனம் எவ்வாறு சிறப்புற காணப்பட்டதோ அவ்வாறே இசைப் பங்களிப்பும் மாய வித்தைகளை தோற்றுவிக்கும் ஒன்றாக மளிர்ந்தது.இசையும் நடனமும் இரண்டற கலந்து பார்வையாளர்களை ஈர்த்தன.
அத்தோடு, தாளக்கட்டுக்கு ஏற்ப நடனமாடிய காயத்ரியின் கலையில் அவர் கொண்ட ஈடுபாடு, தனது குருவின் மீது கொண்ட பக்தி, அனைத்துக்கும் மேலாக ஒரு கலைஞன் கலையை எவ்வாறெல்லாம் நேசிப்பான் என்பதை தெளிவுபடுத்தும் ஆடலே இந்த அரங்கேற்றம் என்றால், அது பொய்யில்லை.
“சிம்மவாஹினி....” என்ற வர்ண உருப்படியே பார்வையாளர்களை அதிகம் ஈர்த்த நடனமாக நான் அறிவேன். ரசிகர்களை பிரமிக்கவைத்த, நவரசங்களையும் வெளிப்படுத்திய ஆடலாக காணப்பட்டது.
நடனத்துக்கு தகுந்தாற்போன்ற அவரது ஆடை, அலங்காரங்கள், ஒப்பனை என அனைத்தும் வீரம் பொருந்திய ஆடலை மெருகூட்டின.பரதநாட்டியத்துக்கே உரிய அனைத்து பண்புகளும் அவரது ஆடலில் தென்பட்டது.
ஒரு கலைஞன் தனக்காக வழங்கப்பட்ட அரங்கை எவ்வளவு பயன்படுத்துகிறான் என்பது கலையின் சிறப்பு. அவ்வாறே காயத்ரி அரங்கேற்றத்தின்போது அரங்கினை முழுமையாக பயன்படுத்தியிருந்தார்.
காயத்ரியின் அரங்கேற்றத்தில் பார்வையாளர்கள் ஒன்றித்து இருந்ததை பார்வையிட முடிந்தது.ஆடல் அரங்கேற்றத்தில் வாத்திய இசைக்கருவிகளின் இசையும் அரங்கத்தினரை மெய்சிலிர்க்க வைத்தது.
ஒவ்வொரு நடன உருப்படியும் நிறைவடைந்த பின்னர், அரங்கம் நிரம்பிய கரகோசம் காயத்ரி ராஜேந்திரனின் அரங்கேற்றத்தை மேலும் அழகுபடுத்தியது.
ஆங்கிக அபிநயங்களுடன் பாவங்கள் காட்டி, இறைவனுக்கு சமர்ப்பிக்கும் ஆடலாக யதுகுல திலகன் கண்ணனை முன்னிறுத்தி பக்திபூர்வமாக ஆடப்பட்டது.
சிறு பிள்ளையின் குறும்புத்தனங்கள் நிரம்பிய களிப்புறு கதாமிர்தமாக “விசமகார கண்ணன்....” பாடலுக்கான ஆடல் நிகழ்த்தப்பட்டது.
அரங்கேற்றத்தை நிகழ்த்திய காயத்ரி ராஜேந்திரனையும் நாட்டிய கலா மந்திர் நடன கலாசாலையின் ஸ்தாபக இயக்குநர் “கலாசூரி” “கலைமாமணி” வாசுகி ஜெகதீஸ்வரனையும் டெல்லியைச் சேர்ந்த பரதநாட்டிய கலை வல்லுனர் பத்மஸ்ரீ கீதா சந்திரன் தனது உரையின்போது பாராட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரங்கேற்றம் ஒரு நடனக் கலைஞரின் நடன வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாகும். ஒரு தனி செயல்திறனை நிலைநிறுத்துவதற்கான மாணவர்களின் திறனில் குரு போதுமான நம்பிக்கை வைத்திருப்பதை இந்த அரங்கேற்றம் காட்டுகிறது. குருவும் பெற்றோரும் நடனக் கலைஞர்களின் இயல்பான திறமைகளை வெளிப்படுத்த காரணமாக இருப்பது பாராட்டுக்குரியது.
இந்த அரங்கில் இருளை நீக்கி ஒளியை கொண்டுவந்த ஒன்றாக காயத்ரியின் நடன அரங்கேற்றம் காணப்பட்டது.
காயத்ரியின் அரங்கேற்றம் மிகவும் பாராட்டுக்குரியது. இனிவரும் காலங்களிலும் நடனக்கலையுடன் தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
காயத்ரியின் குரு “கலைமாமணி” வாசுகி ஜெகதீஸ்வரனின் கீழ் காயத்ரி அரங்கேற்றத்தினை அழகாக நிகழ்த்தியமைக்கும் இந்த அழகான பயணத்தில் காயத்ரிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM