ஆா்.பாரதி
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றிருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது உள்நாட்டில் உருவாகக்கூடிய நெருக்கடிகள் சிலவற்றை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உதவுவதாக இருந்தாலும், அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் பல உள்ளன. அதில் பிரதானமானது இலங்கை - இந்திய கடல் எல்லையில் காணப்படும் இரு நாட்டு மீனவர் நெருக்கடி!
புதிய அரசாங்கத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். இராமலிங்கம் சந்திரசேகரைப் பொறுத்தவரையில் அவர் அரசியலுக்கு புதியவரல்ல. 1980களின் பிற்பகுதியில் இருந்து ஜே.வி.பி.யின் தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்த ஒருவர். ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய அனுபவம் அவருக்கு ஏற்கனவே உள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வட மாகாண அமைப்பாளராக பல வருட காலம் பணியாற்றியமையால், வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். தற்போது, தேசிய மக்கள் சக்தி வடக்கில் பெற்றுக்கொண்டுள்ள வெற்றிக்குப் பின்னணியில் இருந்து செயற்பட்ட ஒருவர். அதனால், வட பகுதி மக்களின் நாடித்துடிப்பை நன்கறிந்த ஒருவர்.
அந்த வகையில், வட பகுதியில் இன்று காணப்படும் முக்கிய பிரச்சினை ஒன்றை கையாளக்கூடிய வகையிலான அமைச்சுப் பதவியொன்று அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்றொழில் அமைச்சு கையாள வேண்டியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று தற்போது கொதி நிலையில் இருக்கும் வட பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்திய மீனவர்களின் அத்துமீறலும், அதனால் உருவாகும் நெருக்கடியும்தான்!
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் யாழ்ப்பாணத்தில் வாக்காளா் தொகையில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள கடற்றொழில் சமூகத்தினர் முக்கிய பங்களிப்பை வழங்கியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. யின் வாக்கு வங்கியலிருந்து கணிசமான தொகையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டதாக கருதப்படுகின்றது. ஈபிடிபி வாக்குகளை காணப்படும் வீழ்ச்சியும் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட அதிகமான வாக்குகளும் இதனை வெளிப்படுத்துகிறது.
கடந்த காலங்களில் வட பகுதி மீனவர்கள் எதிா்கொண்ட பிரதான பிரச்சினை தமிழக மீனவா்களின் ஊடுருவல்தான். நெடுந்தீவு முதல் மருதன்கேணி வரையில் உள்ள மீனவா்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவா் அன்னலிங்கம் அன்னராசா சுட்டிக்காட்டியிருக்கிறார். வாரத்தில் மூன்று நாட்களுக்காவது இந்தப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை தொடர்கின்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன், வட பகுதியில் உள்ள கடல் வளங்களும் இதனால் பெருமளவுக்கு அழிவடைந்தன.
பல போராட்டங்களை வட பகுதி மீனவர்கள் நடத்தி மகஜா் களக் கையளித்திருக்கின்ற போதிலும், இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படாத நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது.
முன்னைய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தாலும், நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வடபகுதியிலுள்ள மீனவ அமைப்புகள் முன்வைத்திருந்தன. இந்தப் பிரச்சினை கவனிக்கப்படாதிருந்த நிலையும், பொதுத் தேர்தலின்போது மாற்றம் ஒன்றை நோக்கி கடற்றொழிலாளர் சமூகம் சிந்திப்பதற்கு காரணமாக இருந்தது என்பதையும் கடற்றொழிலாளர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் யாழ்ப்பாணம் பாஷையூரில் நடைபெற்றது. அதன்போது அதில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இந்த மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் முக்கியமாக குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
ஈ.பி.டி.பி. பக்கம் இருந்த கணிசமான வாக்கு வங்கிகள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்புவதற்கு இந்த நிலைமைகள் காரணமாக இருந்தது என்று வடபகுதி கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கிறார்.
தாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வினை தரும் என வட பகுதி மீனவர்கள் நம்புகின்றார்கள். தேர்தல் முடிவுகள் கூட அதனை உறுதிப்படுத்துவதாக தான் அமைந்திருந்தது. வடக்கு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது இந்த இடத்தில் முக்கியமானதாகும்.
அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் நேற்றைய தினம் கேசரிக்கு கருத்துத் தெரிவித்த, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இது தொடர்பாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
“கடற்றொழில் அமைச்சு சவால் நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” என்பதை ஏற்றுக்கொண்ட அவர், “கடந்த 76 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள், கடற்றொழில் அமைச்சை பயன்படுத்தி கடற்றொழிலாளா்களுடைய அல்லது நாட்டு மக்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை” என்று குறிப்பிட்டார்.
“கடற்றொழிலாளா்களின் தனிப்பட்ட முயற்சிகளின் காரணமாகத்தான் இந்தத் தொழில்துறை பாதுகாக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அரசாங்கத்தின் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டிய அமைச்சா் சந்திரசேகா், கடற்றொழிலாளா்களின் ஒத்துழைப்புடன் இதனை முன்னெடுப்பதற்கான திட்டங்களை தாம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
இந்தத் திட்டங்களை முன்னெடுக்கின்றபோது அதற்குத் தடையாக வரக்கூடிய பிரச்சினையாக இந்தியப் படகுகளின் அத்துமீறலே இருக்கும் என்றும் குறிப்பிட்ட அமைச்சா், இந்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், “எங்கள் கடல் எல்லைகளை அவா்கள் மீற முடியாது” என்றும், “அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எமது அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது” என்றும் குறிப்பிட்டாாா்
“இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவில் கூட இந்த “ட்ரோலா்” இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மீன்பிடி முறைக்கு கடுமையான எதிா்ப்புக்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறான செயற்பாடுகளில் அந்த மீனவா்கள் சிலா் எமது கடல் எல்லைக்குள் வந்து ஈடுபட்டுவருகின்றாா்கள். இவ்வாறான செயற்பாடுகள் எமது கடல் வளத்தையும், நீரியல் வளங்களையும் அழிப்பதாக இருக்கிறது. அது மட்டுமன்றி இங்குள்ள மீனவா்களின் வலைகள், படகுகள் என்பவற்றை சின்னாபின்னமாக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், எமது மீனவா்கள் பொறுமை இழந்தவா்களாக இருக்கின்றாா்கள்” என்றும் சந்திரசேகா் சுட்டிக்காட்டினாா்.
“நீண்டநாட்களாக உழைத்து - சம்பாதித்து இந்த வலைகளை வாங்கி தமது வாழ்வாதாரத்துக்கான தொழிலை அவா்கள் முன்னெடுக்கின்ற போது, அவா்களுடைய வலைகளை அறுத்தெறிவது என்பது அவா்களுடைய வாழ்க்கையையே அறுத்தெறிவது போன்றதாகிவிடுகிறது” என்றும் தெரிவித்த அமைச்சா் சந்திரசேகா், இதனால், மீனவா்கள் சிலா் தற்கொலை செய்யும் நிலைமைக்குச் சென்றிருந்ததாகவும் சுட்டிக்காட்டினாா்.
இந்தப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய சந்திரசேகர், இவ்விடயங்களைப் பொறுத்தவரையில் தாம் கடற்றொழிலாளா்களுடன் இணைந்து இவ்விகாரங்களை எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்தாா்.
இரு தரப்பு மீனவா் பிரச்சினை தொடா்பாக இந்தியத் தரப்புடன் இடம்பெறும் பேச்சுக்கள் தொடா்பாகக் கேட்ட போது, இந்தப் பேச்சுவாா்த்தைகளில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொள்கின்றாா்கள் என்றும் தெரிவித்தாா். இதில் கடல் எல்லைப் பிரச்சினை தொடா்பாகப் பேசப்படுவதாகவும், எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் சந்திரசேகா் உறுதியாகத் தெரிவித்தாா்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் என்று குறிப்பிட்ட அமைச்சர் சந்திரசேகர் தேவை ஏற்பட்டால் இதில் தான் கலந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளையில், இந்த விவகாரம் தொடா்பாகக் கருத்த தெரிவித்த கொழும்புப் பல்கலைகழகப் பேராசிரியா் ஒருவா், இது நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாக இருப்பதால் இதனைக் கையாள்வது கடினம் என்று குறிப்பிடுகின்றாா். இந்த விவகாரத்தில் இலங்கை அரசு இறுக்கமாகச் செயற்படும் போது தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவா்கள் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் கிளப்புவாா்கள் என்றும் அவா் தெரிவிக்கிறாா்.
இந்தப் பிரச்சினையில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று எல்லை தாண்டிவந்து மீன் பிடிப்பது. இரண்டாவது தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைக் கையாள்வது. இதனால், இலங்கையின் மீன் வளமும் நீரியல் வளங்களும் அளிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இலங்கை அரசாங்கம் கடுமையாக இந்த விடயங்களைக் கையாளலாம் என்பதற்கச் சொல்லக் கூடிய காரணங்கள் என்றும் அவா் குறிப்பிடுகிறாா்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், மீனவா் பிரச்சினையை அது எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை இந்தியத் தரப்பு அவதானித்துக்கொண்டிருக்கும் நிலையில், கொழும்பில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு நகா்வு அவா்களுக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கும்.
இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தமிழக மீன்வர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 படகுகளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்குமாறு புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் - நல்ல நிலையில் உள்ள படகுகளையே கடற்படையினரிடம் கையளிக்குமாறு கடற்றொரில் நீரியல்வளத் துறைபணிப்பாளர் பணித்துள்ளார்.
இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசிக்கும் இந்திய மீனவா்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதும், அவா்களுடைய படகுகளை கைப்பற்றுவதும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கைப்பற்றப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழக மீனவா்கள் தொடா்ச்சியாக குரல்கொடுத்து வருகிறாா்கள்.
இந்தப் பின்னணியில் இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட 13 படகுகளை கடற்படை தமது பாவனைக்கு எடுத்துக்கொள்வதென எடுக்கப்பட்டுள்ள தீா்மானம் தமிழகத்தில் பெரும் உணா்வலைகளை ஏற்படுத்தும் என்றே எதிா்பாா்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM