இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின் அங்கு இடம்பெறும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

குறித்த கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள இந்தியப பிரதமர் மோடி, மலையக மக்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் தொடர்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஆறுமுகன் தொண்டமான தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சந்தித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிபேச்சுவார்ததை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.