இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், வாக்ளிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெறும் என்றும் அனைவரும் தாமதமில்லாமல் வாக்களிக்கச் செல்லுமாறும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுத்தேர்தலுக்கான சகல பணிகளும் சிறந்த முறையில் நிறைவடைந்துள்ளதாகவும் வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு செல்லுமாறும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் செயற்படுங்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 13,421 வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அதிகவளான வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தரப்பினரது முழுமையான ஒத்துழைப்புடன் பொதுத்தேர்தலுக்கான சகல பணிகளும் திட்டமிட்ட வகையில் சிறந்த முறையில் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிமுதல் பி.ப 4 மணிவரை வாக்களிப்பு நடைபெறும். தாமதமில்லாமல் வாக்களிக்கச் செல்லுங்கள்.
வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அட்டை, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு செல்லுங்கள். வாக்காளர் அட்டையில்லாதவர்கள் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலைய உத்தியோகஸ்த்தர்களுக்கும், வாக்காளர்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆகவே வாக்காளர் அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் தவறாமல் வாக்காளர் அட்டையை கொண்டுச் செல்ல வேண்டும்.
தாமதமில்லாமல் வாக்களிக்கச் செல்லுங்கள். வாக்களித்ததன் பின்னர் வீட்டில் இருங்கள். சிறந்த முறையில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சட்டத்துக்கும், நாட்டின் பொதுச்சட்டத்துக்கும் அமைய செயற்படுவது சிவில் பிரஜைகளின் பொறுப்பாகும். ஆணைக்குழு வெளியிடும் உத்தியோகபூர்வ முடிவுகள் மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றார்.
இதேவேளை, வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என்றும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
பொதுத்தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும். வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின்போது வாக்காளரின் இடது கை கட்டை விரலில் உரிய அடையாளம் இடப்பட்டது. அத்துடன் கடந்த மாதம் 26ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெற்ற காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் உரிய அடையாளம் இடப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38(3) (ஆ) பிரிவின் பிரகாரம், வாக்களிப்பின்போது வாக்களிப்பதை அடையாளப்படும்போது எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்களிப்பின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும். வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது
நாடளாவிய ரீதியில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் பொலிஸ்மா அதிபரும், சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள், பொது இடங்களில் ஒன்று சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுங்கள். அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் பொலிஸ்மா அதிபரும், சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ குறிப்பிடுகையில்,
வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்டவிரோதமானது. விசேட தேவையுடையவர்கள். வயதுமுதிர்ந்தோர் ஆகியோருக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதாயின் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திடம் முன்கூட்டியதாகவே அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் பணிகளின் நிமித்தம் 63,145 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் நேரடியாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் 3200 விசேட அதிரடி படையினரும், 6000 இணை சேவை உத்தியோகஸ்த்தர்களும், 11 ஆயிரம் முப்படையினரும் 12227 சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
3109 நடமாடும் சேவைகளும், வாகன சோதனைகளுக்காக 269 வீதி தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 1591 தற்காலிக தொழிலாளர்கள் கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கடமைகளுக்காக 4525 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பொதுத்தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் உட்பட முப்படையினர் உள்ளடங்களாக சுமார் 90 ஆயிரம் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் மற்றும் பொதுச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செயற்படுத்தப்படும் என்றார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன. அத்துடன் 8,361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM