குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ அபார சதங்கள்; DLS முறையில் இலங்கை வெற்றியீட்டியது

Published By: Vishnu

14 Nov, 2024 | 11:41 AM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (13) மழையினால் பாதிக்கப்பட்டு தொடரப்பட்ட இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 45 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்தை முதல் தடவையாக இலங்கை வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பெற்ற சதங்களும் அவர்கள் பகிர்ந்த இரட்டைச் சத இணைப்பாட்டமும் இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டிருந்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மாலை 6.35 மணியளவில் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

வெகு நேரம் மழை தொடர்ந்ததால் இலங்கையின் இன்னிங்ஸ் அத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் இரவு 9.00 மணிக்கு ஆட்டம் தொடர்ந்துபோது நியூஸிலாந்துக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

வில் யங், டிம் ரொபின்சன் ஆகிய இருவரும் 80 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

வில் யங் 48 ஓட்டங்களையும் டிம் ரொபின்சன் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆனால், அதன் பின்னர் சிரான இடைவெளியில் விக்கெட்கள்  சரிந்தன.

28 பந்துகளில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  5 விக்கெட்கள் சரிந்ததால் நியூஸிலாந்து ஆட்டம் காணத் தொடங்கியது. இந்த 5 விக்கெட்களும் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் களால் வீழ்த்தப்பட்டது. (110 - 5 விக்.)

அதன் பின்னர் மைக்கல் ப்றேஸ்வெல், அறிமுக வீரர் மிச்செல் ஹே ஆகிய இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

ஆனால், 22ஆவது ஓவரில் பந்துவீச அழைக்கப்பட்ட டில்ஷான் மதுஷன்க மிக சாதுரியமாக பந்துவீசி மிச்செல் ஹேயை ஆட்டம் இழக்கச் செய்தார்.

மத்திய வரிசையில் மைக்கல் ப்றேஸ்வெல் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சரித் அசலன்க 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இலங்கையின் இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் தத்தமது நான்காவது சதங்களைக் குவித்து இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

இந்தப் போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்த போதிலும் ஒரு பந்து வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு தடைப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்த சற்று நேரத்தில் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 206 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

அவிஷ்க பெர்னாண்டோ சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதில் 9 பவுண்டறிகளும் 2 சிக்ஸ்களும் அடங்கியிருந்தன.

குசல் மெண்டிஸ் 128 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 143 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

சதீர சமரவிக்ரம 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

சரித் அசலன்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரது ஆட்டமிழப்புடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு இலங்கையின் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.  

பந்துவீச்சில் ஜேக்கப் டவி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிச்செல் ஹே, டிம் ரொபின்சன், நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர்.

ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07
news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46
news-image

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; 2ஆம் நாள்...

2024-12-06 23:00:27
news-image

ஸ்டாக் 6 விக்கெட்களை வீழ்த்த இந்தியா...

2024-12-06 18:53:12
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:35:06
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:29:25
news-image

ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் பதவியை ...

2024-12-06 16:40:42
news-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100...

2024-12-06 15:35:44