இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

13 Nov, 2024 | 12:45 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (13) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடம் சொந்த மண்ணில் விளையாடிய நான்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றியீட்டிய இலங்கை, அந்த வெற்றி அலையைத் தொடரும் குறிக்கோளுடன் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

ஸிம்பாப்வே (2-0), ஆப்கானிஸ்தான் (3-0), இந்தியா (2-0), மேற்கிந்தியத் தீவுகள் (2-1) ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இலங்கை வெற்றியிட்டியிருந்தது.

எவ்வாறாயினும் அந்நிய மண்ணில் விளையாடிய ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என பெரிதும் நம்பப்படுகிறது.

உபாதை காரணமாக பிரதான சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இலங்கை குழாத்தில் துஷான் ஹேமன்த இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும் அவரை விட அனுபவசாலியும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் 2ஆவது போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியவருமான ஜெவ்றி வெண்டசேக்கு இறுதி அணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார்.

அவருடன் மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரும் சுழல்பந்துவீச்சாளர்களாக இடம்பெறுவர்.

ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியபோதிலும் அவரது முன்னைய ஆற்றல்களைக் கவனத்தில்கொண்டு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் எனவும்  அசலன்க  குறிப்பிட்டார்.

அத்துடன் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை இறுதி அணியில் இணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

இந்த 6 வீரர்களுடன் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவர் (குசல் பெரேரா அல்லது சதீர சமரவிக்ரம) அணியில் சேர்க்கப்பட்டால் பந்துவீச்சாளர்களில் ஒருவர் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

நியூஸிலாந்து அணியில் புதிய வீரர்கள்

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டெவன் கொன்வே போன்ற பிரதான வீரர்கள் இந்தத் தொடரிலிருந்து விடுகை பெற்றுள்ளனர்.

மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிரான தொடரை நியூஸிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.

நியூஸிலாந்து குழாத்தில் டிம் ரொபின்சன், ஸக்கரி பௌல்க்ஸ், மிச்செல் ஹே, நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர்.  டீன் பொக்ஸ்க்ரொவ்ட், ஜொஷ் க்ளாக்சன், ஜேக்கப் டவி ஆகியோர் மிகக் குறைந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிவர்களாவர்.

இந்த வருடம் நியூஸிலாந்து அணி விளையாடவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய வீரர்களின் ஆற்றல்கள் பரீட்சிக்கப்படவுள்ளது.

பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரே நியூஸிலாந்து கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடராகும்.

இலங்கை அணியைப் போன்றே நியூஸிலாந்து அணியிலும் சுழல்பந்துவீச்சாளர்கள் தாராளமாக இடம்பெறுகின்றனர்.

அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், க்ளென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், இஷ் சோதி ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

துடுப்பாட்ட வீரர்களாக ஹென்றி நிக்கல்ஸ், டிம் ரொபின்சன், வில் யங், விக்கெட்காப்பாளர் மிச்செல் ஹே ஆகியோரும் சகலதுறை வீரர்களாக ஜொஷ் க்ளார்க்சன், ஸக்கரி பௌல்க்ஸ், டீன் பொக்ஸ்க்ரொவ்ட் ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜேக்கப் டவி, அடம் மில்னே (உபாதைக்குள்ளான லொக்கி பெர்கஸனுக்கு பதில்), நேதன் ஸ்மித் ஆகியோரும் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூஸிலாந்து 5ஆம் இடத்திலும் இலங்கை 6ஆம் இடத்திலும் இருக்கின்றன.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 102 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவுகளின் பிரகாரம் நியூஸிலாந்து 52 - 41 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட்டில்...

2024-12-11 09:11:17
news-image

பிரிமா சன்ரைஸ் வலுவூட்டும் ஸ்ரீலங்கா கனிஷ்ட...

2024-12-10 22:12:00
news-image

6 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண லங்கா...

2024-12-10 17:26:14
news-image

தென் ஆபிரிக்காவிடம் 2ஆவது டெஸ்டில் 109...

2024-12-09 15:38:10
news-image

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி...

2024-12-09 14:08:43
news-image

37 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஆசிய...

2024-12-09 14:01:06
news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07
news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46