கலாநிதி ஜெகான் பெரேரா
பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்டக்கூடிய சாத்தியத்துக்கு மத்தியில் இலங்கை கடுமையாக பதிக்கப்படக்கூடிய நிலையிலேயே தொடர்ந்தும் இருக்கிறது எனபது எல்லோரையும் போன்று அரசாங்கத்துக்கும் தெரியும். கத்தி முனையில் நாடு இருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கும் நிலையில் தேசிய நிபுணர்களும் சர்வதேச நிபுணர்களும் இதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இத்தகைய ஒரு நிலவரத்தின் ஊடாக நாட்டைக் கொண்டு செல்வதில் அரசாஙகம் மிகவும் கவனமாக எடுத்த நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட அதன் செயலும் அடங்கும். அந்த உதவித் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சி எதிர்த்தபோதிலும், முன்னைய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி அதைப் பெற்றுக்கொண்டது. அதை தனியொரு பெரிய வெற்றியாகவும் அந்த அரசாங்கம் கருதியது. முன்னைய அரசாங்கத்தைப் போன்று பாரிய விரய செலவினங்களுக்கு வழிவகுக்கக்கூடிய தன்னல நடவடிக்கைகளில் இன்றைய அரசாங்கம் ஈடுபடவில்லை.
தேர்தல் நோக்கங்களுக்காக அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்ததன் மூலமாக பெரிதும் மெச்சத்தக்க ஒழுங்கு முறையும் கட்டுப்பாட்டையும் அரசாங்கம் வெளிக்காட்டியிருக்கிறது. இது சட்டத்துக்கு மேலானவர்களாக தங்களைக் கருதிச் செயற்பட்ட முன்னைய தலைவர்களைப் போலன்றி சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியை நடத்துவதில் கடப்பாடு கொண்டவர்களாக இன்றைய அரசாங்க தலைவர்கள் நடந்து கொள்வதை காட்டுகிறது.
நாட்டின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தல் உட்பட முன்னைய தேர்தல்களில் அரசாங்கங்கள் அரச வளங்களை அப்பட்டமான முறையில் துஷ்பிரயோகம் செய்ததை அந்த அமைப்புக்கள் நினைவுபடுத்தின.
ஹெலிகொப்டர்கள் உட்பட அரச வாகனங்களை அந்த அரசாங்கங்கள் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தியதுடன் அபிவிருத்த நடவடிக்கைகள் என்ற அடிம்படையில் தங்களது கட்சிகளின் உறுப்பினர்கள் செலவு செய்வதற்கு பெருமளவு நிதியையும் அவை ஒதுக்கீடு செய்தன.
முன்னைய அரசாங்கங்களில் இருந்து தெளிவான முறையில் வேறுபட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடந்துகொள்வதுடன் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதை விரும்புகிறது.
புதிய அரசாங்கத்தை அமைப்பதில் மற்றைய கட்சிகளுடன் கைகோர்ப்பதற்கு காட்டும் வெறுப்பின் மூலமாக முன்னைய அரசாங்கங்களில் இருந்து தங்களது அரசாங்கம் வேறுபட்டது என்பதை தேசிய மக்கள் சக்தி தெளிவாக வெளிக்காட்டுகிறது.
அரசாங்கத்தின் மேன்மையான திட்டங்களுக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அதற்காக அரசாங்கத்தில் இணைந்துகொள்ள விரும்புவதாகவும் முண்டியடித்துக்கொண்டு கூறுகின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களில் எவருக்கும் அரசாங்கத்தில் எந்த பதவியையும் கொடுக்கப் போவதில்லை என்று அரசாங்கத்தின் முன்னணி பேச்சாளர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய அரசாங்கத்தை அமைக்கும்போது ஆளும் கட்சியில் இருப்பவர்களுக்கு மாத்திரமே அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தெளிவாகக் கூறியிருக்கிறார்.
போதுமான பிரதிநிதித்துவம்
அழைப்பு விடுக்கப்பட்டால் அமைச்சர்களாக அரசாங்கத்தில் இணைந்துகொள்ள தயாராயிருப்பதாக மற்றைய கட்சிகளின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலளிக்குமுகமாகவே ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாத்திரமே அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்று அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கான தங்களது விருப்பத்தை ஜனாதிபதி திசாநாயக்கவே ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூட மற்றைய கட்சிகளைச் சேர்ந்த சிலர் கூறுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், உடனடியான கடந்த காலத்தில் பதவியில் இருந்த இரு அரசாங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் எந்தவொருவரையும் தனது அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி பிரத்தியேகமாக கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. வாய்ப்புக்கள் வரும்போது ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுகின்ற நடைமுறையை நிராகரிப்பதே ஜனாதிபதியின் அந்த அறிவிப்பின் அடிப்படையாகும்.
தங்களுக்கு பெருமளவு ஆற்றல் இருப்பதாக உணருகிறவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அவர்கள் தங்களது பணிகளின் தாக்கத்தை பெருக்குவதற்கு அரசாங்கத்தில் இணைய விரும்புகிறார்கள். மறுபுறத்தில், அதே அரசியல் தலைவர்கள் ஆட்சிமுறையைப் பொறுத்தவரை மிகவும் மோசமான கடந்த காலத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஊழல்வாதிகளாகவும் குற்றச்செயல்களுக்கு பொறுப்புக் கூறாதவர்களாக தண்டனையில் இருந்து விலக்கு பெற்றவர்கள் போன்று செயற்பட்டதுடன் நிர்ணயிக்கப்பட்ட செயன்முறையை பின்பற்றி நடக்காதவர்களாகவும் இருக்கிறார்கள்.
அதனால் அவர்களுடனும் பழைய தலைமுறை அரசியல்வாதிகளுடனும் ஒரு தூரத்தை பேணுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரும்புகிறது. அனேகமாக அவர்களில் சகலருமே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களாகவும் அவர்களில் கூடுதல் பலம் பொருந்தியவர்கள் கொலையைச் செய்துவிட்டுக்கூட தண்டனையில் இருந்து தப்பி வாழக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆனால், நாட்டுக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு சொந்த கட்சியில் தங்கியிருப்பது உசிதமானதல்ல. இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி மற்றும் பல்சாதிகளைக் கொண்ட ஒரு சமூகமாகும். தேசிய மக்கள் சக்திக்குள் தீர்மானத்தை எடுக்கும் மையக்குழு அவர்களை நேரடியாக பிரதிநிதித்துவம் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இந்த மையக்குழுவில் இருப்பவர்கள் பெருமளவுக்கு வெளியில் தெரியாதவர்களாகவும் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
கோட்பாட்டு அடிப்படையில் அவர்கள் சகலரும் சமத்துவமானவர்கள் என்ற மார்க்சிய நம்பிக்கையை கொண்டவர்களாக இருந்தாலும் கூட, இன,மத சிறுபான்மைச் பிரதிநிதித்துவம் செய்யக்கூடியவர்களா என்ற கேள்வி எழுகிறது. ஒரு குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய குழுமங்களைச் சேர்ந்தவர்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் முழுமையாக விளங்கிக் கொள்வது சிரமமானது என்பதால் தீர்மானங்களை மேற்கொள்வதில் போதுமான பிரதிநிதித்துவம் அத்தியாவசியமாகிறது.
நிலைத்திருக்கும் வல்லமை
இன்னமும் தீர்வு காணப்படாமல் இருக்கும் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான கால வன்முறை இனமோதலை அனுபவித்த ஒரு நாடு என்ற வகையில் அரசாங்கத்தில் இன, மத சிறுபானமைச் சமூகங்களின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் விவகாரம் முதல்நிலை முக்கியத்துவத்துக்கு உரிய ஒன்றாக கையாளப்பட வேண்டியது அவசியமாகும்.
அதே போன்றே, பெண்களுக்கான குறைந்தது 25 சதவீத ஒதுக்கீடு அரசியல் விவாதத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் நிலையில் அரசியலில் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் விவகாரமும் அக்கறையுடன் கையாளப்படவேண்டியது அவசியமாகும்.
அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து கவனிக்கவேண்டிய வேறு பல பிரச்சினைகள் இருக்கும். ஆனால், இன,மத சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் உயர்மட்டத்தினால் தெரிவு செய்யப்படுவதாக இல்லாமல் மக்களினால் தெரிவு செய்யப்படுவதாக இருக்கவேண்டியது அத்தியாவசியமானது.
உறுதியானதும் சுதந்திரமானதுமான சிறுபானமைப் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சில ஒப்பனை நடவடிக்கைகளில் காணக்கூடியதாக இருக்கிறது. யாழ்ப்பாண விமானநிலையப் பகுதியில் சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த வீதி ஒன்று அண்மையில் திறக்கப்பட்டது.
ஆனால், அந்த பகுதியில் வாழும் மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கிறார்கள். குன்றிய அபிவிருத்தியைக் கொண்டதாகவும் அந்த பகுதி இருக்கிறது. இந்த பிரச்சினைகளை தணிப்பதற்கு அந்த வீதி திறப்பு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. அந்த வீதி அதன் முடிவில் விசேடமான எந்தவொரு இடத்தையும் இணைக்கவில்லை. தங்களது வாழ்க்கை முறையில் எந்தவிதமான முன்னேற்றத்துக்கு அல்லது வாழ்க்கை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கக்கூடியதாக அந்த வீதியை வடக்கில் உள்ள மக்கள் பார்க்கவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பது தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி மறுதலையாக்கியது வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களுக்கு மனச்சோர்வைக் கொடுத்திருக்கிறது. அதன் கடுமை காரணமாக கொடூரமான சட்டம் என்று அழைக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை தங்களை துன்புறுத்துவதற்கும் அடக்கியொடுக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகவே தமிழ், முஸ்லிம் மக்கள் பார்க்கிறார்கள்.
சிங்கள மக்கள் வேறுவிதமாக இந்த பிரச்சானையைப் பார்க்கிறார்கள். அதாவது அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டினதும் மக்களினதும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மிகவும் பயனுடைய ஒரு ஏற்பாடாக பயங்கரவாத தடைச்சட்டத்தை கருதுகிறார்கள். இதன் காரணத்தினால்தான் வேறுபட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு அத்தியாவசியமாகிறது. அவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் உள்ளக விவாதங்களை அடிக்கடி நடத்தி நாட்டையும் அதன் சட்டங்களையும் பற்றி அவர்களால் மீள்சிந்தனையைச் செய்ய்க்கூடியதாக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM