மணிப்பூரில் பதற்றம் - மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

12 Nov, 2024 | 02:42 PM
image

இம்பால்: மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் நேற்று (நவ. 11) கொல்லப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த குகி-ஜோ கவுன்சில், இன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, கடைகள் அடைக்கப்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதனிடையே 11 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக நேற்று மாலை, இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்பால் பள்ளத்தாக்கில் பல இடங்களில் மோதலில் ஈடுபடும் இரு தரப்பிலிருந்தும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகளையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மணிப்பூர் பதற்றம்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம்ஆண்டு மே மாதம் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 237 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த சூழலில், பாதுகாப்பு படையினர், பொதுமக்களை குறிவைத்து குகி பழங்குடியினத்தை சேர்ந்த சில தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்திவருகின்றன. கடந்த 8-ம் தேதி ஜிரிபாம் பகுதியில் 6 வீடுகளை தீவிரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர். கடந்த 9-ம் தேதி அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரின் ஜிரிபாம் பகுதி காவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக் கொண்ட போலீஸார், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் விரைந்து வந்தனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இது குறித்து கூறிய போலீஸார், “ஜிரிபாம் காவல் நிலையத்துக்கு அருகே அகதிகள் முகாம் உள்ளது. காவல் நிலையம் மற்றும் அகதிகள் முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.” என தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களாக மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பாதுகாப்புப் படையினர், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஐஇடி வெடிபொருள்களை கைப்பற்றியதாக அசாம் ரைபிள்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரிய ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சி வீழ்ந்தது...

2024-12-08 20:10:06
news-image

ஆசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் – ரஸ்யா

2024-12-08 18:06:43
news-image

ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி...

2024-12-08 10:31:49
news-image

சிரிய தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் வசம்

2024-12-08 10:14:41
news-image

சிரிய ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பி வெளியேறினார்

2024-12-08 10:16:43
news-image

சிரியாவில் கிளர்ச்சிப் படையால் பதற்றம்: இந்தியர்கள்...

2024-12-08 09:58:09
news-image

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரம் ஹோம்ஸ்-...

2024-12-08 07:10:38
news-image

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல்...

2024-12-07 20:03:47
news-image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற...

2024-12-07 17:21:55
news-image

மீண்டுவரும் லெபனான் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்...

2024-12-07 13:32:04
news-image

காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம்...

2024-12-06 20:03:34
news-image

காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம்...

2024-12-06 20:03:33