“மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்தது பற்றி கூட்டு எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுவதைக் காண வேடிக்கையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

இது குறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“மதிப்புக்குரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்திருப்பது குறித்து கூட்டு எதிரணியினர் கூக்குரலிடுகின்றனர். இது எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது. இதே நாட்டின் முன்னாள் ஜனாதிபதியொருவரின் பாதுகாப்பை மதிப்புக்குரிய ராஜபக்ச முற்றிலும் அகற்றியமை குறித்து இங்கு குறிப்பிடுவது ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

“இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் கடுமையாகியிருந்த 2005ஆம் ஆண்டு நான் பதவி விலகினேன். புலிகள் ஆக்கிரமிப்பில் இருந்த யாழ்ப்பாணத்தை எனது ஆட்சிக் காலத்தில் மீண்டும் கைப்பற்றி, புலிகளை கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற குறுகிய பரப்புக்குள் கொண்டுவந்தேன். இதனால், என் மீது கடும் கோபம் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் என்னைக் கொல்லப் போவதாக பல உத்தியோகபூர்வ அறிக்கைகளைக் கூட வெளியிட்டனர்.

“அவ்வேளையில், எனது பாதுகாப்புக்காக 300 பாதுகாப்பு வீரர்களையும், பாதுகாப்பு வாகனங்களையும், ஆயுதங்களையும் வழங்க பாதுகாப்பு அமைச்சின் விசேட கமிட்டி முன்வந்திருந்தது. ஆனால், அரசின் செலவைக் குறைக்கும் எனது வழக்கப்படி, அமைச்சு எனக்கு வழங்க முன்வந்த பாதுகாப்பு வசதிகளில் சரி பாதியளவையே நான் ஏற்றுக்கொண்டேன்.

“எனினும், பதினைந்து மாதங்களின் பின், அதாவது 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில், அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரும் நாட்டின் மொத்த பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இருந்த அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவும் சேர்ந்து, எனக்கான பாதுகாப்பை முற்றிலுமாக அகற்ற உத்தரவிட்டனர். அன்று முதல் சுமார் இரண்டு மாதங்கள் எந்தவித பாதுகாப்பும் இன்றியே நான் விடப்பட்டேன்.

“பின்னர், ஐ.தே.க. அமைச்சர்கள் சிலரும் மற்றும் சில சர்வதேச நாடுகளும் கொடுத்த அழுத்தத்தினால் (சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரும் இது பற்றி வாய் திறக்கவில்லை அல்லது வாய் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை) 40 பாதுகாப்பு வீரர்களையும், பாவனைக்கு உதவாத ஐந்து பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்பட்டன. இன்று வரை, இதே பாதுகாப்பு வசதிகள் மட்டுமே எனக்கு வழங்கப்பட்டுள்ளன.”