135 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 18 சிவில் அமைப்புக்களும், இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் திறந்தை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசு முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை கௌரவிக்கவும் பாதுகாக்கவும் பொறுப்புடையது. நீங்கள் செயலற்றவர்களாக இருக்கப் போகின்றீர்களா?
அண்மையில் வெளிவந்த காணொளி ஒன்றில், அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் அவர்கள், 1951ம் ஆண்டு 13ம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தத் தேவையுமில்லை என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தச் சட்டம் தொடர்பாக கூறப்படும் கருத்துக்களை கருத்துக்களாக மாத்திரம் பார்ப்பதாகவும், கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கருத்தாழமற்ற இவருடைய பேச்சினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், அச்சட்டத்தை திருத்தத்திற்கு உள்ளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசியலமைப்பு உறுப்புரை 12 உப பிரிவு 1 இலங்கை மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சரி சமமானவர்கள் என்று கூறுகின்றது. அத்துடன் இவ்வடிப்படை உரிமையானது எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை நீதமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி அரசின் பொறுப்பாகும். இந்த அரசியலமைப்பினூடனான அடிப்படை மனித உரிமை அறிவுறுத்தலானது அரசு ஏற்றுக் கொள்ளாமல் பொறுப்பை அரசாங்கம் மதத் தலைவர்கள் மீது சாட்டுவது அரசு தன் கடமையில் இருந்து விலகுவதாக நாங்கள் கருதுகின்றோம்.
தேசிய மக்கள் சக்தி அரசு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாரபட்சங்களை சரிகாணும் நிலைப்பாட்டில் இருக்குமாயின் தற்போது அமுலில் இருக்கும் இந்த பாராபட்சமான சட்டத்தின் குறைபாடுகளால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன முறைமைகளைக் கையாளப் போகின்றது?
மேற்குறித்த அரசியலமைப்பு கோட்பாடுகளின் பிரகாரம், சமூகத்தில் உள்ள இளவயது திருமணங்களையும், பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களையும் தடுத்து குடும்ப வாழ்வுகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
மேலும், ஒரு வரைமுறை இல்லாத பலதாரமணக் கோட்பாட்டில் சிக்கித் தவிக்கும் மனைவிகளையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது?
மேலும் ஆணாதிக்க கட்டமைப்பை மாத்திரம் முன்நிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது பெண்களை எந்த வகையிலும் உள்வாங்க முடியாத அளவு பாராபட்சத்தை வெளிபடுத்திக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக காதிகள் முறைமை பெரும்பாலானவை ஊழல் நிறைந்ததாகவும் பாராபட்சம் மிகுந்ததாகவும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது மேற்குறிப்பிட்ட இலங்கையின் 1978ம் ஆண்டுக்கான யாப்பின் அடிப்படை மனித உரிமை வலியுறுத்தல்களை முற்று முழுதாக மீறுகின்றது. எனவே இதனை இவ் அரசாங்கம் எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகின்றது? மேலும் காதி முறைமையானது முழுவதுமே அரசாங்கத்தின் பாதீடினூடாக வரி செலுத்துபவர்களின் வரிப்பணத்தில் இருந்து அமுல்படுத்தப்படுகின்றது. ஆகவே இதனைக் கேள்விக்குட்படுத்துவது அரசாங்கத்தின் கடமையுடன் இந் நாட்டு மக்கள் எல்லோரதும் பொறுப்புமாகும்.
ஆகவே முழுமையாக அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய விடயத்தை பொடுபோக்காக "இது சமூகத்தின் கருத்துச் சுதந்திரம்" என்று தட்டிக் கழிப்பது பொறுப்புக் கூறும் ஒரு அரசாங்கத்திற்கு முறையாகுமா? ஆகவே அமைச்சுப் பேச்சாளர் விஜித ஹேரத் அவர்கள் பொறுப்பற்ற வகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் தேசிய மக்கள் சக்தி நிலைப்பாடு என்ன? அதாவது தேர்தல் விஞ்ஞாபனத்தில் " பெண்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு பாகுபாடு காட்டுகின்ற மேலும் அழுத்தங்களுக்கு ஆளாக்குகின்ற சட்டங்களைத் திருத்துதல்", என்று கூறியிருக்க ஏன் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவைப் பேச்சாளர் அவர்கள் இவ்வாறான கருத்தை ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்?
தேசிய மக்கள் சக்தி கட்சியானது முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறான மாயையான போக்கைக் கடைப்பிடிக்கின்றதா? கட்டாயம் தேசிய மக்கள் சக்தி கட்சியானது பாரிய அளவு பாதிப்புக்கள்ளாக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்களினது வாக்குகளைப் பெற வேண்டுமாயின் பெண்களாகிய எங்களுக்குத் தெரிய வேண்டும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்தம் சார்ந்து தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன என்பதைத் தேர்தலுக்கு முன்பதாகத் தெரிவிக்க வேண்டும் அப்படி இல்லாமல் நழுவிப் போவீர்களேயானால் முஸ்லிம் பெண்களுக்கு வகைப் பொறுப்புக் கூற முடியாத ஓர் ஆட்சியாகவேதான் உங்களது ஆட்சியும் அமையும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்ததற்கு காரணம் ஏனெனில் தேசிய மக்கள் சக்தி கட்சியானது பாராபட்சமான கட்டமைப்புக்களை மறுசீரமைத்து எல்லோருக்கும் மாற்றத்தை உருவாக்கும் ஒரு கட்சியாக தங்களை பிரதிபலித்தமையால்.
கடந்த 40 வருடங்களாக ஆட்சியில் இருந்த எல்லாக் அரசியல்க் கட்சிகளும் இந்தச் சட்டத்தை ஆண்களுடன் மாத்திரம் கலந்துரையாடி எந்த திருத்ததிற்கும் உட்படுத்தாமல் இருந்ததே. இதே போல் தேசிய மக்கள் சக்தி கட்சியும் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கட்டமைப்பு ரீதியாக இருக்கின்ற பாராபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவராமல் முஸ்லிம்களினது வாக்குகளிற்காக மாத்திரம் ஏனைய ஆட்சியாளர்கள் சென்ற வழியிலேயே கொண்டு செல்லப் போகின்றதா? அப்படி நடக்குமாக இருந்தால் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் ஒரு விடிவு காலத்தைக் கொடுக்காத ஒரு ஆட்சி முறையைத்தான் நீங்கள் வைத்துள்ளீர்கள் என்பது நிரூபணமாகின்றது.
அப்படி இல்லை என்றால் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM