எமக்கு எதிரான பொய் பிரசாரத்தினை மக்கள் விரைவில் உணர்ந்துகொள்வர் - பொதுஜனபெரமுவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ செவ்வி

Published By: Digital Desk 7

10 Nov, 2024 | 04:14 PM
image

நேர்காணல்: எம்.மனோசித்ரா

ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஆதரவளிக்காத தொகுதி அமைப்பாளர்கள் மாத்திரமின்றி முன்னாள் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பொதுத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து மறைமுகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

கட்சியை விட்டுச் சென்ற சில பிரபல உறுப்பினர்கள் மீது ஆதரவாளர்களுக்கு சிறிதளவும் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. எனவே அவ்வாறானவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்தாலும் அவர்களுக்காக கட்சியில் தற்போதுள்ள பதவிகளில் எவ்வித மாற்றங்ளையும் ஏற்படுத்த தயாராக இல்லை என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதன் முழு வடிவம் வருமாறு : 

கேள்வி : ஜனாதிபதித் தேர்தலில் இதற்கு முன்னர் ராஜபக்ஷர்கள் பெற்றுக் கொண்ட அபார வெற்றியை இம்முறை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனமை குறித்து உங்கள் நிலைப்பாடு? 

பதில் : ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எமக்கு சிறந்த பாடத்தை கற்பித்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்தலுக்கு சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றோம். எம்மில் காணப்பட்ட குறைபாடுகள், தவறுகளை திருத்திக் கொண்டு தற்போது பயணிக்க ஆரம்பித்துள்ளோம். புத்துணர்ச்சியுடன் பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றோம். மக்கள் எமது வேலைத்திட்டங்களை வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அவர்கள் வழங்கும் தீர்ப்பிற்கமைய நாம் எமது பொறுப்பை நிறைவேற்றுவோம். 

கேள்வி : பொதுஜன பெரமுனவின் பின்னடைவுக்கான காரணம் என்ன? 

பதில் : உண்மையில் இது பின்னடைவு இல்லை. காணப்பட்ட நிலைவரத்துக்கமைய ஒரு அடி பின்வைத்துள்ளோம். 2022 ஏப்ரல் 3ஆம் திகதி நான் தான் முதலில் அமைச்சுப்பதவியை இராஜிநாமா செய்தேன். அதன் பின்னர் அன்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ராஜபக்ஷக்கள் அற்ற அமைச்சரவையை நியமிப்பதற்கு இடமளித்தோம். அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட எதிரணியினர் எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இவற்றை சரி செய்வதற்கான உரிய நேரத்துக்காக காத்திருக்கின்றோம். 

பொதுஜன பெரமுனவால் முன்னிலைப்படுத்தப்பட்ட வேட்பாளர் பின்வாங்கியதன் காரணமாக, நான் அந்த சவாலை ஏற்றேன். உண்மையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் தேர்தலில் களமிறங்கவில்லை, மாறாக கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டேன். எதிரணியினரால் எம்மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டுக்களே எமது தோல்விக்கான பிரதான காரணியாக அமைந்தது. 

கேள்வி : அந்த பின்னடைவு பொதுத் தேர்தலில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? 

பதில் : எல்பிட்டி பிரதேசசபைத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது நாம் சற்று முன்னேறியிருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று ஒரு மாதத்துக்குள் தான் எல்பிட்டி தேர்தல் முடிவு வெளியானது. 2.5சதவீதமாகக் காணப்பட்ட எமது வாக்கு எண்ணிக்கை 10சதவீதம் வரை உயர்வடைந்துள்ளமை தெளிவாகிறது. அதேவேளை அரசாங்கத்தின் வாக்குவீதம் குறைவடைந்துள்ளது. எனவே மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர் என்று நம்புகின்றேன். எனவே பொதுத் தேர்தலில் எம்மால் கனிசமானளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 

கேள்வி : பொதுஜன பெரமுனவை சூழ்ந்திருந்த அந்த பாரிய கூட்டம் தற்போது எங்கு சென்றது? 

பதில் : பொதுஜன பெரமுனவுடன் இருந்தவர்கள் என நீங்கள் குறிப்பிடுவது தொகுதி அமைப்பாளர்கள் என்றால், அவர்கள் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற கற்பனையில் எம்மை விட்டுச் சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் எம்மால் முன்னிலைப்படுத்தப்பட்ட வேட்பாளர் தொடர்பில் அவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்பட்டது. நான் களமிறங்கிய பின்னரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு தற்போது எம்முடன் இணைய முடியாமலுள்ளது. வெட்கத்தால் எம்முடன் இணையாமலிருக்கும் அவர்கள், பொதுஜன பெரமுனவின் கொள்கையைப் பாதுகாப்பதற்காக முன்னிற்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

கேள்வி : அவ்வாறெனில் அவர்கள் மறைமுகமாக பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறுகின்றீர்களா? 

பதில் : ஆம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஆதரவளிக்காத தொகுதி அமைப்பாளர்கள் மாத்திரமின்றி முன்னாள் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பொதுத்தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து மீண்டும் எம்முடன் இணைந்து எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

கேள்வி : கட்சியை விட்டுச் சென்ற ஏனைய பிரபல உறுப்பினர்களையும் மீண்டும் இணைத்துக் கொள்வீர்களா? 

பதில் : அது தொடர்பில் எமது கட்சிக்குள் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. கட்சியை விட்டுச் சென்ற சில பிரபல உறுப்பினர்கள் மீது ஆதரவாளர்களுக்கு சிறிதளவும் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. ஆனால் ஒரு சிலர் குறித்து அவ்வாறு எதிர்மறையான நிலைப்பாடுகள் இல்லை. எவ்வாறிருப்பினும் எம்மை விட்டுச் சென்றவர்களுக்காக கட்சிகளில் தற்போதுள்ள பதவிகளில் எவ்வித மாற்றங்ளையும் ஏற்படுத்த நாம் தயாராக இல்லை. 

கேள்வி : பொதுத் தேர்தலின் பின்னர் உங்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எவ்வாறிருக்கும்? 

பதில் : பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கும் பொறுப்புக்களுக்கமையவே எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் அமையும். எது எவ்வாறிருப்பினும் எம்மீது சுமத்தப்பட்டுள்ள போலி குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நீக்கி, கட்சியை பலப்படுத்தி அடுத்தடுத்த தேர்தல்களின் வெற்றியை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அதேபோன்று நாட்டின் அபிவிருத்திக்காக 'உங்களுக்காக அபிவிருத்தியடைந்த நாடு' , 'நாமலின் இலக்கு' என்ற தொனிப்பொருளின் கீழ் எமது அடுத்த கட்ட நகர்வுகள் அமையும். 

கேள்வி : ராஜபக்ஷக்கள் தேசிய சொத்துக்களை கொள்ளையடித்து அவற்றை உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதே? 

பதில் : எமது அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ராஜபக்ஷக்கள் உகாண்டாவிற்கு விமானம் மூலம் டொலர்களை கொண்டு சென்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பலமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் டொலர்கள் இன்மையினாலேயே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடும் வரிசையும் ஏற்பட்டது என்பதை பலரும் அறிந்திருந்தனர்.

ராஜபக்ஷக்களால் தான் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பகிரப்பட்டன. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் இன்று அமைதியாகவுள்ளனர். எனவே பொய்களால் தாம் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கின்றோம் என்பதை இப்போதாவது மக்கள் உணர வேண்டும். பொதுத் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும். 

கேள்வி: நீங்கள் இம்முறை  நேரடியான தேர்தல் களத்தில் இருந்து நீங்கியுள்ளமைக்கான காரணம் என்ன?

பதில்: நான் அம்பாந்தோட்டை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியே கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தேன். அம்பாந்தோட்டை மக்கள் என்னை இளவயது முதல் பாராளுமன்ற உறுப்பினராக ஆணைவழங்கி வந்திருக்கின்றார்கள். ஆகவே தோல்விப் பயத்தினால் நான் நேரடியான தேர்தல் போட்டிக்களத்தில் இருந்து விலகவில்லை.

நான் அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை கட்சிக்குள் நடத்தினோம். அதனடிப்படையில், கட்சியில் பெரும்பாலானவர்கள், நான் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டால் எனது வெற்றியை மையப்படுத்தி அம்பாந்தோட்டையை விட்டு வெளியேற முடியாத நிலைமைகயே ஏற்படும். அதனால் முழுநாட்டினையும் மையப்படுத்திய பிரசாரப்பணிகளில் பங்கேற்க முடியாத நிலைமையே ஏற்படும். 

இம்முறை எம்முடன் இளையவர்களே கைகோர்த்துள்ளனர். அவர்களில் பலர் பாராளுமன்ற தேர்தல் களத்துக்கு புதியவர்கள். அவர்களை வழிநடத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. அத்துடன் தேசிய அமைப்பாளர் என்ற வகையிலும் நாடாளாவிய ரீதியில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே தான் நேரடியாக களமிறங்குவதை தவிர்த்திருந்தேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுள் அதிகம்

2024-12-08 12:55:25
news-image

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் சிபாரிசுகளில் தொடரும் மர்மம்...

2024-12-08 11:08:15
news-image

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல !

2024-12-07 10:32:52
news-image

சாகோசியன்களும் வல்லரசுகளும்

2024-12-08 11:06:36