ஐக்கிய மக்கள் சக்திக்கு மட்டுமே தமிழரின் உரிமைகளில் கரிசனை - யாழ் - கிளிநொச்சி தலைமை வேட்பாளா் சந்திரகுமார்

Published By: Digital Desk 7

10 Nov, 2024 | 04:11 PM
image

நோ்காணல் - ஆர்.பாரதி

“ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பற்றிய கரிசனையைக் கொண்டுள்ளது. இதை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனமே உறுதிப்படுத்தியது. அதனால்தான், அப்போது தமிழரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவை வெளிப்படையாகவே ஆதரித்தது. அதன் தொடர்ச்சியாகவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாம் பொதுத் தோ்தலை எதிர்கொள்கின்றோம்” என்று சமத்துவக் கட்சியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் - கிளிநொச்சி தோ்தல் மாவட்ட தலைமை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.வீரகேசரிக்கு அவா் அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்தார். அவரது செவ்வியின் முழுவடிவம் வருமாறு

கேள்வி - ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து பொதுத்தேர்தலை சந்திப்பதற்கு நீங்கள் எடுத்த முடிவுக்கு என்ன காரணம்?

பதில் - நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்டாலும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பொதுக்கட்டமைப்பாகவே இணைந்திருக்கிறோம். எங்களுடைய சமத்துவக் கட்சி மற்றும் மலையகக் கட்சிகள் இணைந்திருக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ் என தமிழ்பேசும் தரப்புகளும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியை அமைத்துள்ளன. 

இலங்கையின் பல்லின, பன்மைத்துவ அடிப்படையில் தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக சமூகங்கள் என அனைத்துத் தரப்பையும் கொண்ட ஒரே தரப்பாக இருப்பது ஐக்கிய மக்கள் கூட்டணி மட்டும்தான். தற்போதைய அரசியற் சூழலில் இவ்வாறானதொரு வலுவான பன்மைத்துவக் கூட்டணி அவசியமாகும். 

ஏனெனில் அரசியற் சமனிலையைப் பேண முடியாதவாறு, தென்னிலங்கையிலும் வடக்குக் கிழக்கிலும் ஏனைய அரசியற் கட்சிகள் அனைத்தும் உடைந்து துண்டு துண்டாகிச் சிதறிக் கிடக்கின்றன. இது மிக ஆபத்தான ஒரு நிலை. ஒற்றையாட்சியை மறுதலித்து பன்மைவத்துவத்தைக் கோருகின்ற நாட்டில் ஒரு கட்சி ஆதிக்கமோ ஒரு தரப்பின் ஆட்சியோ எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும். அதைத் தடுத்து நிறுத்தி, இலங்கைச் சமூகங்கள் எனும் அனைத்துத்தரப்பினுடைய பங்கேற்பை உறுதி செய்யவேண்டியது கட்டாயமாகும். 

ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பற்றிய கரிசனையை கொண்டுள்ளது. இதை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனமே உறுதிப்படுத்தியது. அதனால்தான், அப்போது தமிழரசுக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியை – சஜித் பிரேமதாசவை வெளிப்படையாகவே ஆதரித்தது. அதன் தொடர்ச்சியே இன்றைய எமது இணைந்த நிற்றலாகும்.

கேள்வி – யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உங்களுடைய வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது?

பதில் - எமக்கான வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக – உறுதியாக உள்ளது. நிச்சயமாக எம்மை மக்கள் வெற்றியடையச் செய்வார்கள். ஏனென்றால் நாங்கள் மக்களுடைய வெற்றிக்கான அரசியலையே முன்னெடுத்து வருகிறோம். அதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். சில உதாரணங்களைச் சொல்ல வேண்டும். கடந்த ஒரு சந்தர்ப்பத்தில் நான் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபோது, கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை உருவாக்கினேன்.

குறிப்பாக, கிளிநொச்சியில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. வடக்கில் இன்று 6000 க்கு மேற்பட்டோர் வேலைசெய்யக் கூடிய ஒரே தொழிற்சாலை என்றால் அது மட்டுமே உண்டு. அதைப்போல கிளிநொச்சியில் தொழில் நுட்பக் கல்லூரியைக் கொண்டு வந்தோம்.  பல்கலைக்கழக பீடங்களின் செயற்பாடுகளுக்கும் விவசாயம், கடற்தொழில் மேம்பாடு போன்றவற்றுக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றைச் சாத்தியப்படுத்தினோம். அதற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு இந்த மாதிரியான பாரிய திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. 

கேள்வி - கிளிநொச்சியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச் சினைகள் என்ன? அவற்றுக்கான உங்களுடைய தீர்வு என்ன?

பதில் - கிளிநொச்சிக்கான என்னுடைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் 2010 இல் கிடைத்தது. அதைப்பயன்படுத்தி, கிளிநொச்சியில் அதிகமாகவும் யாழ்ப்பாணத்தில் முடிந்த அளவுக்கும் பணிகளைச் செய்தேன். அங்கே இருந்த சமூக அக்கறை கொண்டவர்கள் அதற்கான ஆதரவைத் தந்தனர்.

நிர்வாக அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தாராளமாக ஒத்துழைத்தனர். மிகக்குறுகிய காலத்தில் முதற்கட்டமாகக் கிளிநொச்சியை மீளக் கட்டியெழுப்ப முடிந்தது. இதைச் செய்தபோது பலரும் ஆச்சரியப்பட்டனர். அது எமக்கான செல்வாக்கு மண்டலமொன்றை உருவாக்கியது. அது பெருகியிருக்கிறது. அதேவேளை எமது செயற்பாடுகள் யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவு, வவுனியாவிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

நீர், நில வளங்களைத் தாராளமாகக் கொண்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை ஒருங்கிணைத்த விவசாய பொருளாதாரத் தொழிற்துறைகளை உருவாக்க வேண்டும். அதன் மூலம் நாம் வேளாண் பொருளாதார நகரம் (Agro economic city)   ஒன்றை வடக்கிலே – கிளிநொச்சியிலே உருவாக்க முடியும். இதைச் செய்வதற்கு புலம்பெயர் சமூகத்தினரும் எமது அறிஞர் குழாத்தினரும் பொருளாதார வல்லுனர்களும் ஆர்வமாக உள்ளனர். அரசிடம் இதைக்குறித்து நாம் பேசி – திட்டங்களைக் கையளித்து சாத்தியங்களை உருவாக்க முடியும். சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் உதவுவதற்குத் தாராளமாகக் காத்திருக்கின்றன. 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய முதலீடுகளை - தொழில் மையங்களை உருவாக்குவோம். அரச வேலை வாய்ப்புகளை மட்டும் நம்பியிருக்க முடியாது. அரச வேலைவாய்ப்புகள் எல்லோருக்கும் வழங்கக் கூடியதுமல்ல.

ஆகவே தனியார் முதலீடுகளை ஊக்குவிப்போம். யாழ்ப்பாணத்தைப் போல கிளிநொச்சியிலும்  வரலாற்றையும் அடையாளங்களையும் பேணக்கூடிய தொல்பொருள் மையம் மற்றும் வரலாற்று ஆவணக்காப்பகம், கலாச்சார நிலையம் போன்றவற்றையெல்லாம் உருவாக்க வேண்டும். கிளிநொச்சியின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியைத் தொடங்க வேண்டும்.

கேள்வி - பதவிக்கு வரப்போகும் அரசாங்கத்துடன் எந்த வகையில் இணைந்து செயல்படுவீர்கள்?

பதில் - மக்களுடைய நலன் அடிப்படையில். இது இரண்டு வகையில் அமையும் என்று கருதுகிறேன். ஒன்று, அரசியல் ரீதியாக எமது மக்களின் அரசியல் உரிமைகள், அதிகாரங்கள் சம்மந்தப்பட்டதாக இருக்கும். அடுத்தது, மக்களுடைய பிரச்சினைகள், தேவைகள், முன்னேற்றம், அபிவிருத்தி சார்ந்ததாக அமையும். இரண்டிலும் நாம் கணிசமாகப் போராட வேண்டியிருக்கும். அதை, அதற்குரிய அரசியல் – இராசதந்திர பொறிமுறையினூடாகச் சாதிக்க முடியும் என நம்புகிறேன். அதற்குரிய அறிவாற்றலும் அனுபவமும் அரசியல் அறிமுகமும் எமக்குண்டு. சுருக்கமாகச் சொன்னால், போருக்குப் பிந்திய அரசியலை (Implementation of post-war politics) நடைமுறைப்படுத்த வேண்டும். 

கேள்வி - தென் இலங்கையில் ஏற்பட்டது போல ஒரு மாற்றத்தைத்தான் தமிழர்களும் எதிர்பார்க்கின்றார்கள். அந்த வகையில் அவ்வாறான ஒரு மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியுமா?

பதில் - தமிழ் மக்களும் மாற்றத்தையே விரும்புகின்றனர். அது தேவையும் கூட. எந்த மாற்றத்தையும் தனியே ஒருவரால் உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் எம்மால் அதற்கான முதலடிகளை உருவாக்க முடியும். ஏனையோரும் இணைந்தால் முழுமையான மாற்றத்தை விரைந்து ஏற்படுத்தலாம்.

முதலில் இதுவரையுமான தவறுகளிலிருந்தும் தவறான இடங்களிலிருந்தும் தமிழ்ச்சமூகம் தன்னைத் திருத்தியமைத்து, வெளியே வர வேண்டும். சமூக உளவியல் மற்றும் வரலாற்று உளவியற் சிக்கலின் அடிப்படையில் சொன்னால் அரசியல் உளச் சிக்கலுக்குள்ளான சமூகமாகவே உள்ளோம் (We are a politically troubled society) இதிலிருந்து மீள வேண்டும். இதேநிலை சிங்களச் சமூகத்திற்கும் உண்டு என்பதையும் இங்கே கவனப்படுத்த விரும்புகிறேன்.

கேள்வி - உங்களுடைய செயற்பாடுகள் பெருமளவுக்கு கிளிநொச்சிக்குள்ளேயே முடங்கிப்போயிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதற்கு வெளியே வந்து உங்களுடைய அரசியல் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

பதில் - யார் அப்படிச் சொன்னது? நாங்கள் வடக்கு, வடக்குக் கிழக்கு, முழு இலங்கை என்ற அடிப்படையிலான அரசியற் செயல்முறையையும் (வேலைத் திட்டங்களையும்) உபாயங்களையும் கொண்டிருக்கிறோம். கிளிநொச்சியில் சமத்துவக் கட்சியினுடைய தலைமைப் பணிமனை உண்டு. கிளிநொச்சி மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதற்காக கிளிநொச்சிக்குள்ளேயே சமத்துவக் கட்சியின் செயற்பாடுகள் மட்டுப்பட்டவை அல்ல.

ஆனால், அப்படியான ஒரு அடையாளத்தைச் சிலர் உருவாக்க முயற்சிக்கின்றனர். நாம் உலகளாவிய அரசியல், அறிவியல், பண்பாட்டு, அணுமுறைகளைக் கொண்டவர்களாகவே எம்மைக் கட்டமைத்துள்ளோம். எம்முடன் இணைந்து உலகெங்கும் பலர் செயலாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். நம்முடைய சிறகுகள் வலிமையானவை. அவை நெடுந்தூரம் பறக்கக் கூடியவை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுள் அதிகம்

2024-12-08 12:55:25
news-image

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் சிபாரிசுகளில் தொடரும் மர்மம்...

2024-12-08 11:08:15
news-image

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல !

2024-12-07 10:32:52
news-image

சாகோசியன்களும் வல்லரசுகளும்

2024-12-08 11:06:36