எமது வெற்றி வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது - மனோ கணேசன் செவ்வி

Published By: Digital Desk 7

10 Nov, 2024 | 03:59 PM
image

நேர்காணல்: எம்.நேசமணி

ஜனாதிபதி சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவாகியிருந்தாலும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்பதுடன் அவர்களுக்கு முக்கியத்துவமளிப்பது அவசியமென  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோகணேசன் மனோ கணேசன்  தெரிவித்தார்.  வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.   மனோகணேசனுடனான   செவ்வி வருமாறு, 

கேள்வி: கொழும்பு மாவட்டத்தில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

பதில்: கொழும்பு மாவட்டத்தில் எமது வெற்றி வாய்ப்பு மிகவும் சிறப்பான நிலையில் உள்ளது. அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இம்முறையும் தேர்தலுக்கு எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய இரு கட்சிகள் சார்பிலேயே போட்டியிடுகிறோம். எமது கட்சிகளுக்கென கொழும்பில் நிலையான வாக்குத்தளம் உள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியாக இணைந்து போட்டியிட்டாலும் எமக்கான நிலையான வாக்குத்தளங்கள் உள்ளமையால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

கேள்வி: கொழும்பு மாவட்டத்தில் ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளதுடன், பல முனைப் போட்டியுடன் தேர்தல் களத்தை சந்திக்க உள்ளீர்கள், இது உங்களின் வெற்றிக்கு சவாலாக அமையுமா?

பதில்: நிச்சயமாக இல்லை. நாம் சஜித் அணியினர் அல்ல. ஐக்கிய மக்கள் கூட்டணியினர். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைவிட எமது கூட்டணியில் உள்ள குழுவினரே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இம்முறை நானும் ஊடகவியலாளர் லோஷனும் போட்டியிடுகிறோம். இதை தவிர்த்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் ஜனநாயக குரல் போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் எமது கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். செல்வாக்கை இழந்தவராவார்.  வேட்பாளர் தேர்வின் போது டக்ளஸ் தேவானந்தா சற்று கவனமாக இருந்திருக்கலாம்.

அத்தோடு, ஜனநாயக தேசிய முன்னணியிலும் எமது கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரே போட்டியிடுகின்றார். பணக் கொடுக்கல் வாங்கல்கள் தெருமுனைவரை எதிரொலிக்கிறது. இலங்கை போன்ற நாடுகளுக்கு சினிமா பாணியிலான செயற்பாடுகள் தேவையில்லை.  தமிழ் மக்களின் தனித்துவத்தை ஒழிக்கும், வாக்குகளை சிதறடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை வரலாறு மன்னிக்காது. அதற்கான பலனை பெற வேண்டி ஏற்படலாம்.

கேள்வி: கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தோல்வியை தழுவியமை குறித்து தொடர்பில் பகுப்பாய்வுகளை மேற்கொண்டிர்களா?

பதில் :தேர்தலுக்குப் பின்னர் தோல்வி குறித்து பகுப்பாய்வுகளை முன்னெடுத்திருந்த போதும், அது நிறைவு பெறுவதற்கு முன்னரே பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டியிருந்தது. எவ்வாறெனினும் அதற்கான காரணங்களை யூகித்து அவற்றை  நிவர்த்தி செய்துக் கொண்டு முன்னோக்கிப் பயணிக்கிறோம். இடம்பெற உள்ள பொதுத்தேர்தலுக்கே போட்டியிட உள்ளோம்.  ஒரு குறித்த மாவட்டத்தில் மாத்திரமே ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். ஆகையால் எமக்கான வாக்குகளே மக்களிடமிருந்து கிடைக்கிறது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இதில் தாக்கம் செலுத்தாது.

கேள்வி :ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் போது ஏதேனும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதா?

பதில்: இருமுறை உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக மலையக மக்களின் வரலாறு, நிகழ்கால நிலைமைகள், எதிர்கால கனவுகள் மூன்றையும் உள்ளடக்கிய “மலையக சாசனம்” என்ற உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. மலையக மக்களின் அரசியல், பொருளாதார, கலாசார அபிலாசைகள் தொடர்பில் அதில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது கொள்கைகள் தொடர்பில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இம்முறை ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் 10 மாவட்டங்களில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றிப்பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வாகும் பட்சத்தில் எமக்கு தனித்து செயல்படக் கூடிய வகையில் மேற்படி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கேள்வி : கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியினால் உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை. இம்முறை அவ்விடயம் குறித்து தீர்க்கமாக பேசப்பட்டுள்ளதா??

பதில்: நிச்சயமாக கிடைக்கும். மேற்குறிப்பிட்ட உடன்படிக்கையில் நாம் பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் பட்சத்தில் தனிக்கட்சியாக அரசியலில் செயற்படுவதற்கும், தேசிய பட்டியல் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

 கேள்வி: தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு மலையகத்திலும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த தடவை பெற்றுக்கொண்ட ஆசனங்களை தக்கவைத்துக்கொள்ள முடியுமா?

பதில்: ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆறுக்கும் அதிகமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. தேசிய மக்கள் சக்தி எனும் அலை சிங்கள மக்கள் மத்தில் எழுவதையே காணக் கூடியதாக உள்ளது. சமூக வலைத்தளம் வாயிலாக இவ்வாறான கருத்துக்கள் பகிரப்படுகின்றன. எவ்வாறெனினும் தமிழ் மக்கள் மத்தில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது. வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் வெற்றி பெறுவாராயின் இயல்பாகவே அவரது கட்சிக்கான அலை மக்கள் மத்தியில் இருக்கும். அது ஒன்றும் அபரிதமான அலை கிடையாது.

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது போகும் பட்சத்தில், தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான தேவை எழும் போது அதனுடன் இணைந்து பயணிக்க முடியுமா?

பதில்: தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான தேவை எழுந்தால் அதற்கான அழைப்பு அரசாங்கம் அல்லது, அதிக ஆசனங்களைப் பெறும் கட்சியிடமிருந்து கிடைக்கவேண்டும். இரு தரப்புக்கும் உடன்பாடு இருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். சுமார் பத்து வருடங்களுக்கும் அதிகாலம் எமது கூட்டணி சிதறடிக்கப்படாமல் ஒற்றுமையாகவே செயற்படுகிறது.

கேள்வி: தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறுமெனின் மலையக மக்களின் காணிப் பிரச்சினை, சம்பள முரண்பாடுக்குத் தீர்வு கிடைக்குமா?

பதில்: மண்ணுரிமையே “மலையக சாசனத்தின்” உயிர்நாடி. காணி உரிமையின்றி எந்த சமூகமும் அந்நாட்டி முழுமையான குடிமக்களாக முடியாது. மலையக மக்கள் தற்போது இந்நாட்டின் முழுமையான குடிமக்கள் அல்ல. சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பினும் அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியாக எமது மக்களுக்கான அங்கீராம் வழங்கப்படாமல் உள்ளது.

கேள்வி: தற்போதுள்ள ஜனாதிபதி முறையை மாற்றி அமைக்கவுள்ளதாக  அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்க வேண்டிய சாதக, பாதக தன்மைகள்?

பதில்: எமது கட்சி உட்பட பல கட்சிகள் ‘ஜனாதிபதி முறைமை’ நாட்டில் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறோம். எனினும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு பதிலளிப்பவராக இருக்க வேண்டும். சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி தெரிவாகியிருந்தாலும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்பதுடன் அவர்களுக்கு முக்கியத்துவமளிப்பதும் அவசியம். தொகுதி முறை தேர்தல் முறையால் சிறுபான்மையினர் தமது ஆசனங்களை இழக்க நேரிடலாம். விகிதாசார முறைமை மாற்றத்தை எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

கேள்வி: அடுத்த பாராளுமன்றம் எவ்வாறு இருக்கப் போகிறது?

பதில்: சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். தேசிய மக்கள் சக்தியில் சார்பில் உள்ள வேட்பாளர்களே பெரும்பான்மையினராக இருக்கலாம். அவ்வாறு பாராளுமன்றம் வருபவர்கள் கிராமிய சிங்கள சமுதாயத்தை சேர்ந்தவர்களாவர். அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ள மூவரைத் தவிர அக்கட்சியின் ஏனையவர்கள் வெளியிடும் கருத்துக்கள் நகைக்கவும், பிரம்மிக்கும் வகையில் உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். அது பாராட்டுக்குரிய விடயமாகும். இளமையும் அறிவாற்றலும் கொண்ட புதிய உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

கேள்வி: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் கூட்டணியினுடாக போட்டியிட்ட வேலுகுமார், அரவிந்த குமார் ஆகியோர்  பிறிதாக போட்டியிடும் நிலையில் உங்களுக்கு சவாலாக இருப்பார்களா?

பதில்: அவர்கள் எமது கட்சியிலிருந்து விலகவில்லை. கட்சியின் ஒருமித்த தீர்மானத்துக்கமைய நீக்கப்பட்டுள்ளனர். குறித்த ஒரு கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெறும் வேட்பாளர் அக்கட்சியின் கொள்கை கோட்பாட்டுகளுக்கேற்ப செயற்பட வேண்டும். முறையாக பதிவிலகியிருக்கலாம்.  எனினும் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டிக்கு சென்றிருந்தேன்.  அங்கு பரத் அருள்சாமி மற்றும் பகிரதன் பாலச்சந்திரனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்புள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25