நாட்டுக்காக ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படத்தயார் - எரான் விக்கிரமரத்ன செவ்வி

Published By: Digital Desk 7

10 Nov, 2024 | 04:00 PM
image

நேர்காணல் :- இராஜதுரை ஹஷான்

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசியலில்  உணர்ச்சிபூர்வமான தீர்மானம் எடுத்தால் 2020 ஆம் ஆண்டு சூழலே தோற்றம் பெறும். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு சிறந்த தீர்மானத்தை மக்கள் எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதியுடன்  நாட்டுக்காக இணக்கமாக செயற்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

சிறந்த முகாமைத்துவ திட்டமிடலுடன் செயற்பட்டால் பொருளாதார நெருக்கடிக்கு ஐந்து ஆண்டுக்குள் தீர்வு காணலாம். ஜனாதிபதியின் தவறான தீர்மானத்துடன் செயற்பட்டால் 15 ஆண்டுகாலத்துக்கு பின்னரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது. 2020 ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பலர் புதியவர்கள்.

நாட்டுக்கு நேர்ந்தது என்ன ? நிறைவேற்று அதிகாரத்துக்கு கட்டுப்படாத பாராளுமன்றம் தோற்றம் பெற வேண்டுமாயின் அரசியல் அனுபவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாக வேண்டும். புதியவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றம் நிறைவேற்றுத்துறைக்கு அடிபணியும் எனவும் தெரிவித்தார்.வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். நேர்காணலின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:  ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவதற்கான காரணிகளை இனங்கண்டுள்ளீர்களா?

பதில் :  ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. அரசியல் நிலைவரம் மாற்றமடைந்த நிலையில் இருந்தது. கடந்த காலங்களை காட்டிலும் நாடு பல சவால்களை எதிர்கொண்டிருந்தது. அந்த மாற்றத்துக்கு நாங்கள் தயாராக இருக்கவில்லை என்பதை வெளிப்படைத்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு பல்வேறு வகையில் இருந்தது.எமக்கு எதிரணியாக போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி ஒரு விடயத்தை பொய்யாக குறிப்பிட்டுக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்தது. 75 ஆண்டுகால அரசியல் நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை அழுத்தமாக முன்வைத்தார்கள்.

பெரும்பாலானோர் இந்த பொய் மீது நம்பிக்கை கொண்டார்கள்.

75 ஆண்டுகால அரசியல் நாட்டுக்கு ஏதும் செய்யவில்லை என்பது முற்றிலும் பொய்யானது. சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளன. இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை பொய் என்று ஒருபோதும் குறிப்பிட முடியாது. இலவச கல்வியினால் தான் வசதியில்லாதவர்களும் கல்வியால் முன்னேற்றமடைந்துள்ளார்கள். சகல துறைகளிலும் பெண்கள் முன்னிலையில் உள்ளார்கள்.

தேசிய மக்கள் சக்தி கடந்த 2 ஆண்டு காலமாக ' 75 ஆண்டுகால அரசியல் சாபம்' என்று பொய்யுரைத்தது. ஒரு தரப்பினர் இந்த பொய் மீது நம்பிக்கை கொண்டு தற்போது எதிர்பார்த்துள்ளார்கள். நாடு வங்குரோத்து நிலையடைந்திருக்கும் போது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்களை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவில்லை. மாறாக திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டார்கள். திருடர்களை பிடிப்பதால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. ஆகவே தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட போலியான வாக்குறுதிகளை நாங்கள் முன்வைக்கவில்லை.

கேள்வி: பொருளதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் கோட்டபயவின் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தவர்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள். மக்களின் வெறுப்புக்கு இதுவும் ஒரு காரணம் தானே ?

 பதில் :வெளிப்படைத்தன்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஜனாதிபதித் தேர்தலின் போது சற்று அவதானத்துடன் செயற்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் எம்முடன் இணைந்தவர்கள் பொதுத்தேர்தலில் விலகியுள்ளார்கள்.  பலரை விலக்கி வைத்துள்ளோம்.

கேள்வி : சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை முழுமையாக செயற்படுத்துவதாக ஜனாதிபதி உத்தரவாதமளித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவளிக்கலாமே ?

பதில் : பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் ஒன்றிணைந்தே பயணிக்க வேண்டும் என்பதை 2020 ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்துகிறோம். நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தில் எவ்வாறான கொள்கையை கடைப்பிடிக்கிறார் என்பதை வெளிப்படையாக குறிப்பிடவில்லை. கடன் மறுசீரமைப்புக்கான பணிகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு  எடுக்கப்படும் சிறந்த தீர்மானங்களை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடன் மறுசீரமைப்புக்காக முன்னெடுத்துள்ள சிறந்த செயற்திட்டங்களை தொடருமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

கேள்வி : தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கின்றீர்களா ?

பதில்: நிச்சயமாக இல்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. சிறந்த முகாமைத்துவ திட்டமிடலுடன் செயற்பட்டால் பொருளாதார நெருக்கடிக்கு ஐந்து ஆண்டுக்குள் தீர்வு காணலாம். ஜனாதிபதியின் தவறான தீர்மானத்துடன் செயற்பட்டால் 15 ஆண்டுகாலத்துக்கு பின்னரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது என்பது சந்தேகத்துக்கிடமானது.பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக் கூற வேண்டும். சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் நாட்டுக்கு சிறந்த வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கருத்திட்டங்களை கொண்டு வரும் போது தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தொழிற்சங்கங்களை தூண்டி விட்டு போராட்டங்களை தோற்றுவித்தார்கள். இவர்களின் போராட்டங்களினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பல அபிவிருத்திகள் இழக்கப்பட்டன. ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களை போல் மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக் கூற வேண்டும்.

கேள்வி :  பொதுத்தேர்தலில் வெற்றிப் பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா ?

பதில் :நிச்சயமாக வெற்றிப் பெறுவோம். ஜனாதிபதி தேர்தலில் எடுத்த தீர்மானத்தை மக்கள் தற்போது பரிசீலனை செய்கிறார்கள். அனைத்து இன மக்களையும் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

கேள்வி:  தமது கொள்கையை செயற்படுத்த தனது கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஜனாதிபதி கோருகிறாரே ?

பதில் :காலம் சிறந்த படிப்பினையை கற்றுக் கொடுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ  ' தனது கொள்கையை செயற்படுத்த வேண்டுமாயின் தனது கட்சி தலைமையிலான அரசாங்கம் வேண்டும்' என்றார். மக்களும் பொதுஜன பெரமுனவுக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். இறுதியில் நேர்ந்தது என்ன பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆட்சியில் ஒன்றைரை வருட காலத்துக்குள் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

ஜனாதிபதியின் கட்சி , அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்பது ஒன்றும் சட்டமல்ல, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் திருடர்களை பிடிப்பதாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கை செயற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். நாங்கள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு பற்றி பேசினோம். திருடர்களை பிடிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கேள்வி : நவம்பர் 14 சிரமதான பணிக்கு மக்கள் தயாராக வேண்டும். புதியவர்களை மாத்திரம் தெரிவு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறாரே ?

பதில் :2020 ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பலர் புதியவர்கள். நாட்டுக்கு நேர்ந்தது என்ன. 9 ஆவது பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களையும் திருடர்கள் என்று முத்திரை குத்த முடியாது. சிறந்தவர்கள் பலர் உள்ளார்கள். நிறைவேற்று அதிகாரத்துக்கு கட்டுப்படாத பாராளுமன்றம் தோற்றம் பெற வேண்டுமாயின் அரசியல் அனுபவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாக வேண்டும். புதியவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றம் நிறைவேற்றுத்துறைக்கு அடிபணியும்.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  அரசியலில்  உணர்ச்சிபூர்வமான தீர்மானம் எடுத்தால் 2020 ஆம் ஆண்டு சூழலே தோற்றம் பெறும். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு சிறந்த தீர்மானத்தை மக்கள் எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்பட தயார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25