(நமது நிருபர்)
வல்லாதிக்கப் போட்டிகள் மோதலாக உருவெடுக்கும்போது நாம் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும் என்று பொருள்பட தமிழ்த் தேசிய முன்னணி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளது.
உலகின் ஒடுக்கப்பட்ட இனங்கள் விடுதலை பெறும்போது உண்மையான உலக அமைதி நிலவும் என்பதை உறுதியாக நம்புபவர்கள் எமது தமிழ் மக்கள். எனவே, எமது மக்கள் இரண்டு நாடுகளுக்கு இடையில் ஏற்படும் மோதல் எமக்குத் தீர்வு வழங்கும் என்ற கருத்தை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
யாழ்ப்பாணம் அராலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அண்மையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்சியும் அதன் முன்னணி அமைப்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இலங்கை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியா எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளை காட்டமாக விமர்சித்தே வந்துள்ளனர்.
இன்னும் குறிப்பாக கூறுவதாக இருந்தால், தங்களை இந்திய எதிர்ப்புவாதிகளாகவே காட்டி வந்துள்ளனர்.
இப்பொழுது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படும் என்ற இடத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றி வரும்போது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஈழத்தமிழ் மக்கள் கவசமாக அமைவார்கள். அந்தத் தருணத்தில் இந்தியா ஈழத் தமிழர்களுடன் பேசும் என்றும் அப்பொழுது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்ற ஓர் அரசியல் தீர்வு எட்டப்படும் என்றும் கூறியுள்ளனர்.
அதுமாத்திரமல்லாமல், ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது சாத்தியமில்லை என்றும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் மாற்றத்தினூடாக மாத்திரமே தீர்வினை எட்ட முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
முதலாவது விடயத்தை எடுத்துக்கொண்டால், இந்திய சீன முரண்பாட்டை பொறுத்தவரை அவற்றை எவ்வாறு தீர்ப்பது அல்லது சமாளிப்பது என்பது தொடர்பாக இந்திய சீன நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள் தீர்மானித்துக்கொள்ளும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை முரண்பாடுகளும் இந்து சமுத்திரத்தில் வல்லாதிக்கப் போட்டிகளும் இருந்தாலும் கூட, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான வர்த்தகங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த வர்த்தகங்களைச் சீர்குலைக்கும் வகையில் எந்த முடிவுகளையும் இந்தியாவோ சீனாவோ எடுக்காது என்பதை எந்த ஒரு அரசியல் மாணவனும் புரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படை விடயமே புரியாமல் இவர்கள் கட்சி நடத்துவதுதான் வேடிக்கை. ஆகவே, இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றி அந்த நிலையில்தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று இவர்கள் கனவு கண்டால் அது கடல் வற்றிக் கருவாடு சாப்பிடுவதற்கு ஒப்பானது.
மறுபுறத்தில், ஒற்றையாட்சி தீர்வினை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக கூறுகிறார்கள். அதனால் மாகாண சபை முறைமையையும் எதிர்க்கிறார்கள்.
இலங்கையில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுத்தான் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி தேர்தல்கள் என்பனவற்றை நடத்த முடியும்.
இதனை ஏற்றுக்கொண்டுதான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இலங்கையின் தேர்தல்களில் போட்டியிட்டும் வருகிறது. ஆனால், மாகாண சபை என்று வருகின்றபோது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஒற்றையாட்சியின் கீழ் நடைபெறும் அதிகாரப் பரவலாக்கலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்கான வியாக்கியானங்களையும் கூறி வருகின்றார்கள்.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஒற்றையாட்சி தவிர்ந்த மாற்று அரசியல் அமைப்பு முறையொன்று பல்லின சமுதாயங்கள் வாழும் ஒரு நாட்டுக்கு தேவை என்பது உலகறிந்த உண்மை. ஆனால், இன்று இலங்கையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட வகையிலேயே மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
அது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொடுக்கப்பட்டதல்ல. மாறாக, சகல மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப் பரவலாக்கம் என்பது செயற்படுத்தப்படுகிறது. ஆகவே, அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் குறித்தொதுக்கப்பட்ட மாகாண சபை முறைமையை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முப்பது வருடத்துக்கும் மேல் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த எமது மக்கள் தமது உறவுகளையும் தமது உழைப்புகள் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் இருப்பது மாத்திரமல்லாமல், நாட்டை விட்டே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் குறைந்தபட்சம் அந்த மக்களின் அடிப்படை விடயங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கும் குறைந்தபட்ச அபிவிருத்திகளையாவது அவர்கள் ஏற்படுத்திக்கொள்வதற்கும் இந்த மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாம் பாவிக்கப்போகின்றோமா, இல்லையா என்பதுதான் எம் முன்னால் உள்ள கேள்வி.
நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எமக்கு எதுவுமே தேவையில்லை என்பது புத்திசாலித்தனமா? அல்லது கிடைத்த அர்ப்ப சொற்பத்தை வைத்து எமது மக்களுக்கான இயலுமான சேவைகளைச் செய்துகொண்டு நிரந்தரத் தீர்வு நோக்கிப் பயணிப்பது சரியானதா? இப்பொழுதுள்ள முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்டம் என்பது என்ன? அதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெளிவுபடுத்த வேண்டும். அந்த தெளிவுபடுத்தல் என்பது யார் யாருக்கோ முரண்பாடுகள் முற்றி அந்த முரண்பாட்டின் விளைவாக தமிழ் மக்களின் பிரச்சினை தீரும் என்று கற்பனையில் மிதப்பது இலவுகாத்த கிளியின் கதையாகவே இருக்கும்.
நாம் கிடைத்துள்ள அதிகாரங்களைப் பற்றிக்கொள்வது என்பது எமக்கு ஐம்பது ரூபாய் தேவைப்படும்பொழுது எம் கைவசம் உள்ளதோ இருபது ரூபாய். அதனை வைத்துக்கொண்டு எஞ்சிய முப்பது ரூபாயைப் பெறுவதற்கு முயற்சிப்போமா அல்லது இந்த இருபது ரூபாயை தூக்கி வீசிவிட்டு ஐம்பது ரூபாயைத் தேடப்போகின்றோமா என்பது எம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். எம் மக்கள் புத்திகூர்மையுடையவர்கள்.
எனவே, உள்ளுர் பிராந்திய, சர்வதேச நிலைமைகளைப் புரிந்துகொண்டு தமிழ் மக்களின் குறுகியகால நீண்டகால விடயங்களைக் கருத்திலெடுத்து அவற்றை ஒரு தீர்வு நோக்கிக் கொண்டுசெல்லக்கூடிய ஐக்கியப்பட்ட சக்தியாக இன்று இருக்கின்ற சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கு வாக்களிக்குமாறு அன்புரிமையுடன் கோருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM