நேர்காணல் - வீ. பிரியதர்சன்
76 வருட இலங்கையின் மோசடி அரசியலின் பங்குதாரராகவே வடக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்து தமிழ் அரசியலும் பொய்யான வாக்குறுதிகளுடன் காணப்படுகிறது. பல்லாயிரம் இளைஞர், யுவதிகள் மக்களுமாக மடிந்த பின்னரும் பிழைப்புவாத அரசியல் தொடர்கிறது. தமிழ் அரசியல் அரங்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கருணநாதன் இளங்குமரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கருணநாதன் இளங்குமரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு,
கேள்வி : நீங்கள் எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாது அரசியலில் நுழைவதற்கான காரணம் என்ன ?
பதில் : அரசியல் என்பது பரம்பரைகளின் அல்லது ஒருசிலரின் ஏகபோகம் என்பது போன்ற தொனி உள்ளடக்கம் இந்தக் கேள்வியினுள் புதைந்து கிடப்பது போல் தெரிகிறது. எமது மொழியில் அரசியல் சாதாரண மக்களுக்கானது. மக்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விடுதலை முன்னணியிலும் அதன் தொழிற்சங்க இயக்கத்திலும் தேசிய மக்கள் சக்தியிலும் பங்களித்து வந்திருக்கிறேன். தெருப்போராட்டங்களில் பங்குபற்றி வந்திருக்கிறேன். 2022 ‘அரகலய’ எழுச்சி உட்பட எமது அரசியல் தகுதியானது மக்களின் வெகுஜன முகம் கொண்டது. அகங்கார அதிகார முகம் கொண்டதல்ல.
கேள்வி : வடக்கில் அரசியல் செய்வதற்கு பல தமிழ் அரசியல் கட்சிகள் இருந்தபோதும் நீங்கள் ஏன் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளீர்கள் ?
பதில் : தேசிய மக்கள் சக்தி 60 ஆண்டுகளுக்கு மேலான நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாகும். அது இலங்கையில் இன, மத பேதம் கடந்து ஏகப்பெருவாரியான சாதாரண மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்துகிறது. வறுமையின் பிடியிலிருந்து விடுதலை, பால் சமத்துவம், இலங்கையின் சமூக பொருளாதார கலாசார பன்மைத்துவம் இன மத சமூகங்களிடையே ஒருமைப்பாடு மலையக மக்களின் நில உரிமை, நியாயமான ஊதியம் இலவச வைத்தியம், இலவச கல்வி போன்ற சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாத்தலும் விரிவுபடுத்தலும் சிறுவர்களின் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை கல்விக்கான ஒதுக்கீடுகளை அதிகரித்தல் இந்த நாட்டில் காணாமல் போதலையும் சித்திரவதைகளையும் வகை தொகையற்ற கொலைகளையும் அறிமுகப்படுத்திய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது இல்லாது ஒழித்தல், குடிப்பரம்பலை மாற்றி அமைக்கும் விதமான குடியேற்றங்களை நிறுத்துதல், விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குதல், 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாத மாகாண சபை தேர்தல்களை நடத்துதல் அல்லது இயங்கச் செய்தல், உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துதல் அல்லது இயங்கச் செய்தல் என விஸ்தாரமாக பல விடய தானங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சாதாரண மக்களின் அபிலாசைகளையும் முன்னிறுத்தும் தேசிய மக்கள் சக்தி பெருவாரியான வடக்கு அரசியல் கட்சிகளின் இன, மத தீண்டாமை வாத அரசியலுக்கு எதிரானது. எல்லோரும் இன்புற்றிருக்கவே இந்த நாடு என்று உயரிய மனப்பாங்கு கொண்டது தேசிய மக்கள் சக்தி! இந்த நாட்டின் பெருவாரியான வறிய மக்களின் வாரிசுகள் நாங்கள் .வளமான நாடு அழகிய வாழ்க்கை எம் தாரக மந்திரமாகும்.
கேள்வி : கடந்த கால வடக்கு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளில் உங்களுக்கு திருப்தி உள்ளதா ?
பதில் : 76 வருட இலங்கையின் மோசடி அரசியலின் பங்குதாரராகவே வடக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ் அரசியலும் துரதிஷ்டவசமானதாக காணப்படுகின்றது. பொய் வாக்குறுதிகளும் போக முடியாத இடத்திற்கு வழி சொல்வதுமாகவே அது காணப்பட்டது. இன்றளவில் தொடர்கிறது. பல்லாயிரம் இளைஞர், யுவதிகள் உட்பட மக்கள் மடிந்த பின்னரும் பிழைப்பு வாத மனசாட்சி இல்லாத ஊழல் அரசியல் தொடர்கிறது. “எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம்” என்பது போல் இன்று சிதறுண்டு சின்னா பின்னப்பட்டு ஊழலே உருவமாக காணப்படும் வடக்கு அரசியல் தமிழ் மக்களை இழிவு செய்யும் அவமானப்படுத்தும் அரசியல். பல்லாயிரம் ஆக மக்கள் மடிந்து போன பூமி இது. ஆனால் இப்போதும் அயோக்கியர்கள் அதிகாரம் செய்ய முனைகிறார்கள். இந்தத் தமிழ் அரசியல் அரங்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி தவிர்க்க முடியாத சக்தியாக விடிவெள்ளியாக வடக்கின் வானத்தில் எழுந்து கொண்டிருக்கிறது .
கேள்வி : வடக்கு மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் எவ்வாறான ஏற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்வீர்கள் ? உங்களது கட்சி இடம்கொடுக்குமா ?
பதில் : 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக விரோதமாக நடத்தப்படாத மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிப்படுத்தி உள்ளது .மாகாண சபை முறைமை என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக இலங்கையின் அரசியல் யாப்பில் இடம் பெறுவது, மாகாண சபைகளை தாக்கமுடையதாக இயங்க வைப்பது பற்றி புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து மாகாண ஆளுநர்களுடனும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆலோசனைகளை நடத்தியுள்ளார். எதிர் காலத்தில் மக்கள் முகம் கொண்ட புதியஅரசியல் யாப்பொன்றை மக்களின் ஆணையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் இணைந்து உருவாக்குவது தேசிய மக்கள் கட்சியின் நிலைப்பாடு. எனவே இலங்கையின் பன்முகப் பாங்கை உறுதி செய்யும் விதமாகவே இதுவரையிலான அரசியல் யாப்பின் சிறந்த அம்சங்களை உள்ளடக்கியதாகவே அது அமையும். தேசிய மக்கள் சக்தி வெகுஜன முகம் கொண்ட ஜனநாயக அரசியல் ஸ்தாபனம். இடம் கொடுக்குமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அது சர்வாதிகார ஸ்தாபனம் அல்ல. மக்களின் நலன்களை முன்னிறுத்திய நியாயமான நீதியான விடயங்களுக்கு நிச்சயமாக இடம் இருக்கும். 76 வருடங்கள் இலங்கையில் புரையோடிப்போன அரசியல் பாரம்பரியத்திலிருந்து அது வித்தியாசமாக இருக்கும்
கேள்வி : கடந்த கால அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் போன்று உங்களின் செயற்பாடுகள் காணப்படுமா ? அல்லது மக்களுக்கான செயற்பாடுகளாக அமையுமா ? வடக்கு மக்களுக்கு என்னத்தை கூறப்போகின்றீர்கள் ?
பதில் : கடந்த கால ஆளும் வர்க்க இழிவான அரசியலுடன் நாம் சமரசம் செய்து கொண்டதில்லை. ஜனநாயக விரோத, மக்கள் விரோத செயற்பாடுகளை ஒரு சமூக அரசியல் இயக்கமாக தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கிறோம். எமது செயற்பாடுகள் பெருவாரியான இலங்கையின் அனைத்து இன மத மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அமையும் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் இலங்கையின் பாரம்பரிய அரசியலை நாம் மாற்றி அமைப்போம். நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்போம். நாம் இலங்கையின் பத்தோடு பதினொன்றாவதான அரசியல் ஸ்தாபனம் அல்ல .மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகள் எமக்கு மிக மிக முக்கியமானவை. அவற்றை விஞ்சி எதுவும் இல்லை. இலங்கையின் தேசிய வாழ்வின் சமத்துவமான பங்காளர்கள் என்ற நிலையை எம் இனிய வடக்கு மக்களுக்கு உருவாக்குவோம். இனி ஒரு விதி செய்வோம் என்றவாறு தலைவிதியை மாற்றுவோம். இருண்ட கடந்த காலத்தின் காயங்களை ஆற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் .அதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் உறுதி செய்துள்ளார். பெருமைமிகு கல்வி, கலாசார, பொருளாதார வாழ்வியல் பாரம்பரியங்களை மீட்டு எடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். புலம்பெயர் மக்களுடனான சகோதரத்துவத்தையும் உறுதி செய்வோம் . வடக்கில் எழிலார்ந்த சுதந்திரமான வாழ்க்கை ஒன்றைகட்டியமைக்க அர்ப்பணிப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM