நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான குறுக்கு வீதியில் ரதல்ல கார்லிபேக் தோட்டப்பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் லொறி ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயமடைந்து நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யட்டியாந்தோட்டையிலிருந்து நானுஓயா பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு விறகுகளை ஏற்றி வந்த குறித்த லொறி விறகுகளை மேற்படி தொழிற்சாலையில் இறக்கிய பின் மீண்டும் யட்டியாந்தோட்டைக்கு பயணிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளருமே படுங்காயமடைந்துள்ளனர்.

லொறி சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)