(டேனியல் மேரி )
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்
இலங்கை சங்கீத சபையின் வருடாந்த சப்த ஸ்வர லய இசை விழா இவ்வாண்டு கந்த சஷ்டி விரத இறுதி நாளான சூரன் போர் தினமான கடந்த வியாழக்கிழமை (07) மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்றது.
கர்நாடக இசை, பரதநாட்டியம், வீணை, வயலின் வாத்திய இசை முதலான கலாசார நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பாளர் சங்கீத கலாவித்தகர் ஸ்ரீமதி அனுஷா மொராயஸின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மேல் மாகாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் பொறியியலாளருமான லயன் சண். குகவரதன் (நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பேரன்) கலந்துகொண்டார்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ சத்ய சாய் நிறுவனத்தின் தலைவரும் சீரடி சாய் அமைப்பின் அறக்கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளருமான எஸ்.என். உதய நாயகம், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் இளைய தம்பி தயானந்தா , இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் இராஜபுத்திரன் யோகராஜா, கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் கே. ஜெய கிருஷ்ணா, ஏ.ஏ.சி.பி நிறுவனத்தின் (பிரைட் அகடமியின்) பணிப்பாளர் துரைரட்னம் ஸ்ரீ சுடரோன், கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அமைப்பாளர் கலைமகள் மகேந்திரன், கல்விச் சேவை தயாரிப்பாளர் பாத்திமா ராஷியா ஜௌபர் , நிகழ்ச்சி வழங்குநரான நாகபூசனி, கூட்டுத்தாபனத்தின் பொறுப்பாளர் - பிரபல சட்டத்தரணி ஏ.எம்.தாஜ், விவேகானந்தா தேசிய கல்லூரியின் ஆசிரியர் வி.டி.இராஜேந்திரா, இலங்கை தொலைத் தொடர்பு நிலையத்தின் முன்னாள் பொறியியலாளர் ‘மறவன்புலோ’ செல்லம் அம்பலவாணர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பமாக, நடராஜ பூஜை நடைபெற்றதை அடுத்து, செல்வி. கருணிகா ரங்கன் ஸல்மாவின் புஷ்பாஞ்சலி நடனம் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து , ஸ்ருதிகா கல்யாணி கண்ணனினால் வரவேற்புரை ஆற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உலகப் புகழ் அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் மெய்நிகர் வழியாக நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்துச் செய்தியில் அவர்,
“தமிழர் தம் பண்பாட்டு கோலங்களான பரதம் மற்றும் பாரம்பரிய இசை போன்றவற்றை தென்னிலங்கையில் போற்றி வளர்க்கும் தொண்டினை இலங்கை சங்கீத சபை கடந்த 6 தசாப்த காலங்களாக ஆற்றி வருகிறது. குரலிசை, வீணை, மிருதங்கம், வயலின் மற்றும் பரதம் போன்ற கலைகளை சங்கீத சபையின் நிறுவனர் கௌரி ஸ்ரீ இராஜப்பன் வழிகாட்டலில் கற்றுத் தேர்ந்த கலைஞர்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னணியில் திகழ்ந்து இந்த கலா நிலையத்துக்கு பெருமைகளை தேடி தந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் இலங்கை சங்கீத சபையின் முன்னாள் மாணவியும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் முன்னணி ஒலிபரப்பாளருமான அனுஷா மொராயஸ் தனது குருவின் வழிகாட்டலில் சப்த ஸ்வர லய இசை விழா என்ற பெயரில் இலங்கை சங்கீத சபையின் ஆண்டு விழாவினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ளார்” என்றார்.
அடுத்த நிகழ்வாக, 13 பேர் கொண்ட குழுவினர் பங்குபற்றிய வாய்ப்பாட்டுக் கச்சேரியில் நாட்டை, சண்முகப்பிரியா, ஜனரஞ்சனி இராகங்களில் கீர்த்தனைகள் பாடப்பட்டன.
அடுத்து, செல்வி. சௌமிய வடிவேலின் “நர்த்தனம்” பார்வையாளர்களை கவரும் வண்ணமாக சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து, ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் வி.என். மதியழகன் தனது வாழ்த்துச் செய்தியை கனடாவிலிருந்து மெய்நிகர் வழியாக தெரிவித்தார்.
இதன்போது அவர், இலங்கை சங்கீத சபையின் உருவாக்கத்தை பற்றி கூறுகையில், திருமுருக கிருபானந்த வாரியாரை நினைவுகூர்ந்தார்.
அத்தோடு, சங்கீத கலா வித்தகராக உயர்ந்த, அனுஷா மொராயஸ் சமுதாயத்தின் உயர்வை, பண்பாட்டு சிறப்பை எடுத்துக்காட்டும் நுண்கலைகளில் மாணவர்களை பயிற்றுவிக்கும் பணியினை பாராட்டினார்.
அடுத்து, 12 பேரை கொண்ட மாணவர்கள் குழுவினால் பக்திப்பாடல் , கர்நாடக இசைக் கச்சேரி பக்க வாத்தியங்கள் சேர நடத்தப்பட்டது.
அதன் பின்னர், மிருதங்கம் தாள வாத்திய இசை நடைபெற்றது.
மிருதங்க பயிற்றுவிப்பாளர் வி. பிரபா அணி சேர்க்க, 6 பேரை கொண்ட மாணவர் குழுவினால் இந்த தாள வாத்திய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அதனையடுத்து, நடேச கவுத்துவம் நடனம் ஆடப்பட்டது.
நடனம் என்பது பொதுவாக தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம் ஆகும். அந்த வகையில், நடேச கவுத்துவம் நடனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளர் தயாளினி காயாம்பூவின் மகள் தட்சன்யா சிவசங்கரின் அழகிய முகபாவங்களுடன் பார்ப்பவர்கள் மனதை ஈர்க்கும் வகையில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இளையதம்பி தயானந்தாவினால் பிரதம விருந்தினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு, இலங்கை சங்கீத சபையின் சிரேஷ்ட மாணவர்கள் பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் வீணை இசைக் கச்சேரிகள் மூன்று குழுக்களாக நிகழ்த்தப்பட்டன.
சபையின் மாணவர்கள் 14 பேர், 12 பேர் கொண்ட இரு இசைக் குழுக்களாக அமைந்த வீணை கச்சேரிகளின் பின்னர், சிரேஷ்ட மாணவர்களின் கச்சேரி நடைபெற்றது.
அதில் சங்கீத சபையின் சிரேஷ்ட மாணவியரான ஸ்ரீமதி ஸ்ரீ ஜனனி சண்முக ரட்ணம், ஸ்ருதி கல்யாணி கண்ணன் ஆகியோருடன் வீணை ஆசிரியரான ஸ்ரீமதி அனுஷா மொராயஸும் பங்குகொண்டார்.
வீணையின் 7 தந்திகளை வருடி, இனிய இசையினை மீட்டிய இவர்கள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தனர்.
அத்துடன், இந்த நிகழ்வில் அப்பியாச உருப்படிகளை மாணவர்கள் பக்க வாத்திய இசைக்கருவிகளோடு பாடினர்.
தொடர்ந்து, பரமேஸ்வரி மோகனவேலின் பயிற்றுவிப்பில் இரு வயலின் இசைக் குழுக்கள் மேடையேற்றப்பட்டன. இக்குழுக்கள் வழங்கிய இசையானது பார்வையாளர்களின் காதுகளுக்கு இனிமை சேர்த்தது மட்டுமன்றி கண்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது.
மேலும், பாட்டுப் பதம், வர்ணம் வாய்ப்பாட்டுக் கச்சேரிகளும் சிறப்புற்றன.
அதனைத் தொடர்ந்து, பக்கவாத்திய இசைக்கலைஞர்களான ரிசிகேசன் (மோர்சிங்), வீ.பிரபா (மிருதங்கம்) மற்றும் மோகனவேல் - பரமேஸ்வரி தம்பதியர் (வயலின், தபேலா) சிறப்பு விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
அடுத்தொரு வாய்ப்பாட்டு இசைக் கச்சேரிக்கு “அலைபாயுதே...”, “சின்னஞ்சிறு கிளியே...” பாடல்கள் இனிமை சேர்த்தன.
மங்கல ரூபினி பாலகுமாரினால் குதூகலமான “தில்லானா” நடனம் கண்களை கவரும் வண்ணம் ஆடப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பேரனான சண். குகவரதன், கிருபானந்த வாரியாரின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை சங்கீத சபையின் சிறப்பு பற்றியும் இசைக் கலைஞர் அனுஷா மொராயஸுடனான நட்புறவு பற்றியும் கூறினார்.
மேலும் அவர்,
“கலையை ஒரு சமூகத்தின் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதும் இலகுவான விடயமல்ல. இந்த சூழ்நிலையில் இவ்வாறான விழாக்களை நடத்துவதே ஒரு போராட்டம்.
இன்று மிருதங்கம் வாசித்த சின்னஞ்சிறு மாணவனை விட, அவரது மிருதங்கம் பெரியது. அவன் கண்களால் காட்டிய அசைவுகள், அவரது ஆர்வம் பாராட்டுக்குரியவை.
மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். அடுத்த சந்ததியினரையும் அவ்வாறே நகர்த்த கலை, கல்வி அவசியமாகின்றன.
பெற்றோர்களே, குழந்தைகளுக்கு நீங்கள் சொத்து, பணம் சேர்க்கத் தேவையில்லை. நீங்கள் விட்டுச் செல்ல வேண்டியது கல்வியை மட்டுமே. அது எந்த கல்வியாக இருந்தாலும் சரி.
ஆகவே, குழந்தைகளின் எதிர்காலத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, மாற்றத்தை நோக்கி நாம் நகர்கிறோம். அந்த மாற்றத்தில் நாமும் பங்காளர்களாக மாறவேண்டும்” என்றார்.
சப்த ஸ்வர லய இசை விழாவின் நிறைவில், கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM