நாட்டை கட்டியெழுப்பும் தெளிவான கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு முன்வைத்துள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு நாட்டை கட்டியெழுப்பக் கூடிய வேலைத்திட்டம் இருக்கும் என நான் கருதவில்லை என அனுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளரும் ஹொரவப்பத்தான தேர்தல் தொகுதி உதவி அமைப்பாளருமான என்.எம்.பாசில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
இதேவேளை, மக்கள் இம்முறை தேர்தலில் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என நம்புகிறேன். மாற்றம் என்ற போர்வையில் நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் தரப்புக்கு புள்ளடியிட்டு அநுராதபுர மாவட்ட வாக்காளர்கள் தவறிழைக்கமாட்டார்கள் என உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
அனுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளரும் ஹொரவப்பத்தான தேர்தல் தொகுதி உதவி அமைப்பாளருமான என்.எம்.பாசில் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
என்.எம்.பாசில் வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் வருமாறு !
கேள்வி: உங்களை பற்றி சிறிய அறிமுகம் ஒன்றை தர முடியுமா?
பதில் : எனது பெயர் என். எம். பாஸில். நான் ஹொரவப்பொத்தானை நிக்கவெவ கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். ஹொரவப்பொத்தானை பதியுதீன் தேசிய பாடசாலையில் என்னுடைய ஆரம்பக் கல்வியை கற்றேன். அதனைத் தொடர்ந்து உயர்தர கல்விக்காக குருநாகல் மாவட்டத்தில் உள்ள சியம்பலாகஸ்கொட்டுவ மதினா தேசிய பாடசாலைக்கு சென்றேன். அங்கு எனது உயர்தர கல்வியை வர்த்தக பிரிவில் கற்ற பின்னர் ஆசிரியர் தொழிலில் இணைந்து கொண்டேன். கடந்த 17 ஆண்டுகளாக பிரதேச அரசியலில் செயல்பட்டு வருவதோடு, சமூகத்தின் அனைத்து இன சமூகங்களின் நலனுக்காக அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறேன்.
கடந்த ஐந்து வருடங்களாக பிரதேச சபை உறுப்பினராக நான் செயல்பட்ட போதும் மாவட்ட மற்றும் தேசிய அரசியலில் எனக்கு ஒன்றரை தசாப்த கால அனுபவம் உண்டு. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் மிக நெருக்கமாக செயல்பட்டேன். கட்சியின் வெற்றிக்காக என்னால் செய்ய முடிந்த சகல பணிகளையும் மிகத் திருப்திகரமாக செய்து முடித்திருக்கிறேன். இப்பொழுது நான் பிரதேச அரசியலைத் தாண்டி மாவட்ட அரசியலுக்குள் பிரவேசித்திருக்கிறேன். முழு நேர ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறேன்.
கேள்வி: ஏன் நீங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?
பதில் : தேசிய கட்சியில் இணைந்து பயணிப்பதே இலங்கையில் பொருத்தமான அரசியல் பயணமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். இலங்கை முஸ்லிம்களின் நீண்ட வரலாற்றை எடுத்து நோக்கினால் தேசிய கட்சிகளில் அங்கத்துவம் வகித்த எமது முன்னைய தலைவர்கள் பெற்றுத் தந்த உரிமைகளையே நாம் இன்றும் அநுபவித்து வருகிறோம்.
பிரதான கட்சிகளில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டு எமது இருப்பை பாதுகாத்துக் கொள்வது மேலான விடயமாகும். ஆகவே சமகாலத்தில் சமூக ஜனநாயகம், அனைத்தின மக்களையும் உள்வாங்கிய முற்போக்கு தேசியவதாம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதரம் என்பவற்றை கொள்கையாக கொண்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்ந்து வருகிறது.
ஏனைய சமூகங்களைப் போன்றே முஸ்லிம் சமூகத்துக்கும் எமது கட்சியில் உரிய இடம் வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கொவிட் ஜனாசா எரிப்பு, பலஸ்தீன விவகாரத்தில் எமது கட்சி எடுத்த நிலைப்பாடுகளை மக்கள் நன்கு அறிவர். நாட்டை முன்னேற்றக் கூடிய பிரயோக ரீதியான வேலைத்திட்டத்தை கொண்ட கட்சியாகவும் திகழ்வதால் இக்கட்சியோடு இணைந்து எனது மாவட்ட அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளேன்.
அவ்வாறே அபிமானமிக்க வரலாற்றைக் கொண்ட அனுராதபுர மாவட்டத்தில் பிரதான தேசியக் கட்சியொன்றில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கிடைத்தையையிட்டும் மகிழ்ச்சியடைகிறேன்.
கேள்வி: அனுராதபுர மக்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்ய விரும்புகிறீர்கள்?
பதில் : மக்கள் எமக்கு அளிக்கும் வாக்கு எமது மார்க்கத்தின் பிரகாரம் ஓர் அமானிதம். அதனை பேணுவேன். மக்களுக்கு பொறுப்புக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன். மக்களும் என்னை கேள்வி கேட்கலாம். நாம் ஜனநாயக அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.
அந்த வகையில், அனுராதபுர மாவட்டத்தில் 6 வீதமானோர் நகர் புறத்தில் வாழ்கின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் பிரதானமாக அனுராதபுரத்தின் பிரதான தூர பிரதேச நகரங்களை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நகரமயமாக்கலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
மக்கள் மாற்றங்களை கோரி புதிய எதிர்பார்ப்புகளுடன் இருந்து வருகின்றனர். அந்த வகையில் நகர அபிவிருத்தியில் உள்ளடங்கியுள்ள அம்சங்களை படிப்படியாக பிரதேச அபிவிருத்திக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஊழல் இலஞ்சம் மோசடிகளுக்கு இடமளிக்க மாட்டேன். இதன் ஊடாக இம்மாவட்டத்தில் வசிக்கும் அனைத்தின மக்களினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுப்பேன்.
கிராமப்புற மக்களின் பன்முக தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுப்பேன். பொருளாதார முன்னேற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகளை புதிதாக ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பேன்.
அனுராதபுர கிராமிய மக்களின் விவசாய உற்பத்திகளை தம்புத்தேகம உப பொருளாதார மையம் ஊடாக இடைத்தரகர்கள் இன்றி நேரடி வருமானம் ஈட்டும் சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தித் தர நடவடிக்கை எடுப்பேன். எமது ஆட்சியில் இந்த கிராமிய உற்பத்திகளை ஏற்றுமதி உற்பத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண வேலைத்திட்டங்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பேன்.
அநுராதபுரத்தையும் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறே கிராமிய வறுமையை ஒழித்து சமூக பாதுகாப்பை சமத்துவமாக பேண நடவடிக்கை எடுப்பேன்.
விவசாய உற்பத்திகளில் அறுவடைக்கு பின்னரான இழப்புகளை குறைத்து கிராமிய உற்பத்திகளுக்கான பெறுமதியை கூட்ட உரிய அரச நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பேன். விவசாய உற்பத்திகளை களஞ்சியப்படுத்தும் ‘பிரபாஸ்வர’ குளிர்சாதன கூடமொன்றை அநுராதபுரத்துக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன்.
மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், பயனளிக்கும் நிலைபேறான பௌதீக உட்கட்டமைப்பு மற்றும் இளைஞர்களை மையமாக கொண்ட டிஜிடல் பொருளாதாரம் விளையாட்டு உள்ளிட்ட பரப்புகளில் கூடிய கவனம் கொண்டு அடைவுகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறே மாவட்டத்தில் இன ஐக்கியத்தை பாதுகாத்து அரசியல் தற்துணிவோடு முஸ்லிம் சமூகத்தின் நலன்களை மூலோபாய ரீதியாக வென்றெடுப்பேன். இம்மாவட்டத்தில் தமிழ் சமூகத்தினது உரிமைகளை பாதுகாப்பேன்.
பேரார்வ முன்மொழிவுகளை வழங்கி மக்களை ஏமாற்ற மாட்டேன். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் பட்சத்தில் எமது தேசிய வேலைத்திட்டத்தில் குறுப்பிடப்பட்டுள்ள அம்சங்களை எமது மாவட்டத்துக்கு நிச்சயம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன்.
கேள்வி: ஏன் மக்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில் : நாட்டை கட்டியெழுப்பும் தெளிவான கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு முன்வைத்துள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு நாட்டை கட்டியெழுப்பக் கூடிய வேலைத்திட்டம் இருக்கும் என நான் கருதவில்லை.
உலக ஒழுங்கை விடுத்து எம்மால் தனித்து பயணித்து தலை தூக்க முடியாது. வங்குரோத்தடைந்துள்ள நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே நான் பொருத்தமான கட்சியில், பொருத்தமான செயல் இயலுமை கொண்ட தரப்போடு இணைந்து இம்மாவட்டத்தில் போட்டியிடுகிறேன். நிதானித்து அரசியல் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
மக்கள் இம்முறை தேர்தலில் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என நம்புகிறேன். மாற்றம் என்ற போர்வையில் நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் தரப்புக்கு புள்ளடியிட்டு அநுராதபுர மாவட்ட வாக்காளர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஆகவே நாட்டை முன்னேற்றக் கூடிய தரப்பினர், அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இருக்கிறார்கள். இதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
எனவே மக்களின் பொருத்தமான தெரிவாக ஐக்கிய மக்கள் சக்தி அமைவதால் நிச்சயம் எனது விருப்ப இலக்கமான இலக்கம் 8 க்கும் புள்ளடியிட்டு என்னை வெற்றியடையச் செய்வார்கள் என நம்புகிறேன். எமது மாவட்டத்தில் தேசிய கட்சியால் தான் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும்.
ஒட்டு மொத்த மக்களும், இளைஞர் யுவதிகளுமான புதிய வாக்காளர்கள் அரசியலில் நம்பிக்கைக்கு பாத்திரமான, பொறுப்புக்கூறக் கூடிய, வரப்பிரசாதங்கள் சலுகைகளுக்கு சோரம் போகாத நபர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். அனுராதபுர மாவட்ட மக்கள் எம்மோடு இணைந்து இந்த நம்பிக்கையான அரசியல் பயணத்தை தொடரலாம். மக்கள் நம்பிக்கைக்கு நாம் துரோகம் இழைக்க மாட்டோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM