கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் "அகநகை" கலை விழா

Published By: Nanthini

07 Nov, 2024 | 05:00 PM
image

(மா.உஷாநந்தினி)

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் இந்து மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், நுண்கலை மன்றம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் "அகநகை" கலை விழா கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக நாவல, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் முன்னாள் ஸ்தாபக பீடாதிபதி, முகாமைத்துவ பேராசிரியர் வஸ்தியாம்பிள்ளை சிவலோகதாசன் அவரது பாரியார் சோபா சிவலோகதாசனுடன் வருகைதந்திருந்தார். 

மேலும், சைவ மங்கையர் கழகத் தலைவியும் வித்தியாலய முகாமையாளருமான மாலா சபாரத்னம், வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் அக்ஷராத்மானந்தா ஜி மகராஜ், கொழும்பு கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் மும்தாஸ் பேகம், சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வினோதன் முதலானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

நகை என்றால் சிரிப்பு. அகம் மலர்ந்த சிரிப்பினையும் உள்ளத்தில் பெரும் மகிழ்வினையும் உண்டாக்கும் விழாவாக அகநகை கலை நிகழ்வினை இவ்வருடம் சைவ மங்கையர் வித்தியாலயம் நடத்தியுள்ளது.

கண்களுக்கும் செவிகளுக்கும் இனிமையை, இன்பத்தை, மனதில் பலவித உணர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் இந்த அகநகை மேடையில் கலை ஆற்றுகைகள் வெளிப்பட்டன. 

கர்நாடகமும் திரையிசையும் கலந்த பல்லியம் வயலின் இசைக் கச்சேரியில் இளைய நங்கையரின் ரசனையான வாசிப்பு நல்லதொரு ஆரம்பம். 

இடைக்கால திரையிசைப் பாடல்களின் ஸ்வரங்களை வயலின்கள் மீட்ட, மனதுக்குள் பாடல்களின் சாகித்தியங்களை உள்வாங்கி, இசையோடு சேர்ந்து பயணிக்க முடிந்தது. 

"கணேஷ குஹ வந்தனம்", "ஷண்முகார்ப்பணம்", "தமிழின் பெருமை" குழு இசைகளின் ஊடாக மாணவியர் தமது பாடும் திறனை வெளிப்படுத்தினர்.

அகநகை நிகழ்வுகளுக்கு திபாகரன் சண்முகநாதன் (வயலின்), ரட்ணம் ரட்ணதுரை (மிருதங்கம்), விநாயகமூர்த்தி செந்தூரன் (கீபோர்ட்), பிலியந்த தசநாயக்க (புல்லாங்குழல்) ஆகியோர் இசைப் பங்களிப்பு வழங்கினர்.  

விநாயகர் ஸ்துதி நடனம் மேடையை நிறைத்தது. 

மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருக்கும், பாமர மக்களையும் கட்டிப்போடும் நாட்டார் பாடல்கள் மிக அருமை.

வயல், கதிரறுப்பு, குறவர் பாட்டுக்கு அடைமழையாய் கரவொலிகள்!

'கண்ணாடி வளையல் போட்டு கதிரறுக்க போற புள்ள... கண்ணாடி மின்னுதடி கதிரறுப்பு பிந்துதடி....", 'குண்டூசி வாங்கலையோ சாமி....", 'டிங்கிரி டிப்பா டியாலோ...", 'ஏலேலோ", 'தானனன்னே" ஓலம், ஓசை நயங்கள், பாட்டு, குறவர் நடனம், புல்லாங்குழல் இசை, சங்கொலி, தாள வாத்தியங்கள் ஒருசேர காட்சிகளும் கருத்தாய் அமைந்தது. 

'ஐகிரி நந்தினி...." பாடல் பின்னணியில் சக்தியின் வெவ்வேறு வடிவங்களை முன்னிறுத்திய 'மஹிஷ மர்த்தினி" நடனம் ரௌத்திர பாவமாக விளங்கியது. 

'திருமுடியாகிய திருவடி" நாடகம் இராமாயணத்தின் ஒரு சிறு பகுதியை காட்சிகளாக காண்பித்தது. 

வனவாசம் அனுபவிக்கும் இராமன், சீதை, இலக்குவணன், அண்ணன் இராமனை காண வனத்துக்குச் செல்லும் பரதன், பரதன் சிரசின் மீது ஏறும் இராமனின் திருவடி, கானக மாந்தர்கள்... என நாடகப் பாத்திரங்களை வடிவமைத்த விதம் சிறப்பாக இருந்தது. 

சகோதரப் பாசம், தந்தையின் பிரிவு, துயரம், அற முறை அரசாட்சி, மனித விழுமியங்களையும் உணர முடிந்தது. 

ஈசனுக்கு சமர்ப்பணமாக "சிவ நர்த்தனம்" ஆடப்பட்டது. 

ஆய்ச்சியர் குரவை நடனத்தில் கோகுலத்துப் பெண்கள் நடுவில் கிருஷ்ணர் ஜொலித்தார். 

"தமிழோடு விளையாடி" நிகழ்வில் மகாகவி பாரதியார் தலைகாட்டினார். புதிர் கேள்வி பதில்களும் இடம்பெற்றன.

தரம் 5 மாணவி ஜீவிகா கோபிராஜின் பேச்சில் தாய்மையின் பெருமை புலப்பட்டது. 

"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" நாட்டிய நாடகத்தில் ஆண்டாள் - கண்ணபிரான் காதலை பார்க்க முடிந்தது. 

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களின் கலாசார நடனங்கள் ஆடப்பட்டன. 

வட மாகாணம் - மல்லாரி, வடமேல் மாகாணம் - கும்மி, சப்ரகமுவ மாகாணம் - சுளகு நடனம், மத்திய மாகாணம் - கொழுந்து நடனம், கிழக்கு மாகாணம் - 'அரிசி விளைந்த ஊரு' நடனம், மேல் மாகாணம் - தீபாவளி நடனம், ஊவா மாகாணம் - மயில் நடனம், தென் மாகாணம் - மீனவ நடனம், வடமத்திய மாகாணம் - உடரட்ட முதலான நடனங்கள் மேடையை அலங்கரித்தன.

இந்நிகழ்வில், சைவ மங்கையர் கழகத் தலைவியும் வித்தியாலய முகாமையாளருமான மாலா சபாரத்னம், வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன் ஆகியோர் உரையாற்றுகையில் வித்தியாலயத்தின் வளர்ச்சி, சிறப்பு பற்றி தெரிவித்தனர். 

தொடர்ந்து, பேராசிரியர் வஸ்தியாம்பிள்ளை சிவலோகதாசன் தனது உரையில், 

'இக்காலத்தில் மனிதர்கள் உணர்வுகளற்ற இயந்திரங்களாக இருக்கிறார்கள். ரோபோக்களுக்குள் உணர்வுகளை புகுத்த முற்படுகிறார்கள். மனிதர்களை இயந்திரங்களாகவும் ரோபோக்களை மனிதர்களாகவும் மாற்ற முற்படுகிற சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 

காரணம், சமூகவியலிலிருந்து பண்பாட்டிலிருந்து, கலாசாரத்திலிருந்து எமது சமூகத்தை நாம் பிரித்து ஏதோ ஒரு நோக்கத்தில் எங்கோ சென்றுகொண்டிருக்கிறோம். 

சமூகம் மென்மேலும் உயர வேண்டுமாயின், எமது மொழி, கலாசாரம், பண்பாடு முக்கியம். 

இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை பொறுப்புணர்வோடு வழிநடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாம் முதலில், ஒரு சமூக மனிதனை உருவாக்குவோம். பின்னர், ஒரு நிபுணரை உருவாக்குவோம்" என்றார். 

அத்துடன், வித்தியாலய அதிபர் மற்றும் முகாமையாளரால் பிரதம விருந்தினர் கௌரவிப்பு, மாணவியருக்கான பரிசளிப்போடு, முத்தமிழான இயல், இசை, நாடகக் கலவையில் அமைந்த அகநகை விழா நிறைவு பெற்றது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"தமிழர் செவ்வியல் ஆடல்” மூன்றாம் நாள்...

2024-12-09 17:40:02
news-image

ஹொரணையில் புதிய வானம் விருது விழா

2024-12-09 13:26:37
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி...

2024-12-08 21:01:05
news-image

உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டுக்கு மலேசிய...

2024-12-08 16:54:59
news-image

புளியம்பொக்கணை கிராம மக்களுக்கு சைவ மங்கையர்...

2024-12-07 19:18:51
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர்...

2024-12-07 01:31:17
news-image

கவிஞர் க.பே.முத்தையாவின் நினைவுப் பேருரையும் “தமிழ்...

2024-12-06 17:38:54
news-image

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி...

2024-12-06 13:37:29
news-image

ஒரே மேடையில் ஐந்து மாணவிகளின் பரத...

2024-12-06 09:30:52
news-image

இலங்கையில் சீன உணவு திருவிழா

2024-12-06 06:59:44
news-image

இலங்கை சோனக பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

2024-12-05 18:09:25
news-image

ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20ஆவது...

2024-12-05 18:01:16