அமெரிக்கவாழ் இந்தியர் ஒருவரும் அவரது மனைவியும் அவர்களது மகளின் முன்னாள் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நரேன் பிரபு சிலிக்கன் வெலி பகுதியில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரி. அவரும் அவரது குடும்பமும் சென் ஜோஸ் நகரில் வாழ்ந்து வந்தனர். இவர்களது மகள் வேறொரு மானிலத்தில் வாழ்ந்து வருகிறார்.

நரேனின் மகளுக்கும் மிர்ஸா டட்லிக் (24) என்ற இளைஞனுக்கும் இடையில் காதல் முளைத்தது. எனினும், கடந்த வருடம் இந்தக் காதல் பிரிவில் முடிந்தது. இதனால் கோபம் கொண்ட மிர்ஸா, நரேனின் மகளைப் பழிவாங்க நினைத்தார். என்றபோதும், அவர் எங்கு வாழ்ந்து வருகிறார் என்பது தெரியாததால், அவருக்குப் பதிலாக அவரது குடும்பத்தை தண்டிக்க நினைத்தார்.

இந்நிலையில், நேற்று (5) நரேனின் வீட்டுக்குள் நுழைந்த மிர்ஸா, நரேனையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொன்றார். நரேனின் ஒரு மகன் பொலிஸுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மிர்ஸாவை சரணடையுமாறு கூறியபோதும் மிர்ஸா அதை ஏற்காததால் மிர்ஸாவும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகிழ்ச்சியான குடும்பத்தில் காதலால் நேர்ந்த அசம்பாவிதத்தினால் நரேனின் மகளும் இரண்டு மகன்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.